Tuesday, December 28, 2021

சிரிப்பின் சுகமறிவோம்..

 சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்

மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

(பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்  இனிய
புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்  )

4 comments:

  1. பாடல் நன்று. வெள்ளித்திரைக்கு ஏற்ற பாடல்.

    ReplyDelete
  2. சிரிப்பு நல்லதொரு சிறந்த மருந்து...

    ReplyDelete
  3. சிரிப்பு என்பது அருமருந்து.  உங்களுக்கும் அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சிரிப்பு சிறப்பு. சிறப்பான பாடல் - இசையமைத்து பாடலாம்!

    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete