Tuesday, November 15, 2022

எம் படைப்புகள்...

 எம் படைப்புகள் எல்லாம்...


ஆற்று நீரை எதிர்த்துப்போகும் எனும்
அதீத  எண்ணம் ஏதும் எங்களில்
நிச்சயம் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
எரியாது சிரிக்கும் என்கிற
நினைப்பும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச் செய்யவோ
அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ
 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லை

சராசரித்  தேவைகளை அடையவே
அன்றாடம்  திணறும் கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
நாங்கள் படும் அவதிகளை
எமக்குத் தெரிந்த பாமர மொழியில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை
மனம் கீறிப்போகும்
சின்னஞ் சிறு அல்லல்களை
அதிக மசாலாக் கலக்காது
பகிர்ந்துண்டு மனப் பசியாறுகிறோம்

எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
விஞ்ஞானம்  ஈன்றெடுத்த
புதிய  இனிய இனமே
எங்கள் கைகளில்தான் இருக்குது
புதியதோர் உலகு செய்யும்
அதீத அசுர  பலமே

4 comments:

  1. யாதும் ஊரே யாவரும் கேளீர்...

    அருமை...

    ReplyDelete
  2. //எங்கள் கைகளில்தான் இருக்குது
    புதியதோர் உலகு செய்யும்
    அதீத அசுர  பலமே//

    அப்படி நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மையில்லை என்பது என் கருத்து. தளத்துக்கு வருபவர்கள் எல்லோரும் உங்களுக்கு பணிந்தவர்கள் ஆனால் பின்னூட்டமாவது இடுவார்கள். 
    Jayakumar

    ReplyDelete
  3. பதில் அளிக்கவில்லை எனினும் நித்தமும் இருநூறுக்கு பேருக்கு மேல் படிக்கிறார்கள்.புத்தகமாக வெளியிட்டால் கூட இத்தனை பேர் வாசிக்க வாய்ப்பில்லை..அந்த வகையில் வலைத்தளம் சிறப்புடையதே...

    ReplyDelete