*வேம்பு அய்யர் போளி* 👇🏻
வேம்பு அய்யர் அந்த நாட்களில் திருநெல்வேலி சீமையில உள்ள மணியாச்சி ரயில் நிலையத்தின் நடைமேடையில் தன் வழக்கமான இடத்துக்குச் சென்று கூடையை இறக்கி வைத்தார்.
மணியாச்சி ரயில் நிலையம் ஞாபகம் இருக்கா ? வாஞ்சி அய்யர் ஆஷ் துரையை இங்கே சுட்டுக்கொன்ற இடம் தான் இன்று வாஞ்சி மணியாச்சி ஆயிற்று.
ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்துக்குச் சென்று சிறிய மேஜை ஒன்றைத் தூக்கிவந்து கூடைக்குஅருகில்வைத்தார்.
மேஜையின்மேல் வெள்ளைத் துணியை விரித்து அதன் மேல் மந்தாரை இலைகளைப் பரப்பினார்.
அதன் பின் கூடையில் கொண்டு வந்திருந்த கடம்பூர் போளிகளை ஒவ்வொன்றாக
எடுத்து இலைகளின் மேல் அடுக்கி வைத்தார்.
அவர்வாய் முனக அன்று மோகன ராகத்தை எடுத்துக் கொண்டது.
அத்தனை போளிகளையும்
எடுத்து வைத்த வுடன்,வெறும்
கூடையைஎடுத்துக் கொண்டு ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
இன்னும் ரயில் வர அரை மணி இருந்தது. மோகனத்தின் தைவதத்தின் சௌந்தர்யத்தை வியந்தபடி அவர் நடக்கும் போது எதிரில் யாரோ வருவதுபோலத் தோன்றியது.
வருபவர் வேம்புவை நோக்கி கையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
ஆள் நெருங்கி யதும் வருபவர் பெரிய அருணா சலம் என்று தெரிந்தது.
நாதசுவர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்தின் உடன் பிறவா சகோதரர். இருவர் ஊரும் பெயரும் ஒன்று என்பதால் இவர் பெரிய அருணாசலம்.
இரண்டு அருணா சலங்களுக்கும் கடம்பூர் போளி என்றால் உயிர். அதிலும் வேம்பு அய்யர் கொண்டு வந்து விற்கும் போளி துணைக்கு வரும் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ரயிலில் செல்லத் தயாராக இருப்பார்கள்.
இவ்விருவரும் பழக்கிவிட்டதில் மொத்த நாக ஸ்வரக் குழுவுமே இந்த போளிகளுக்கு அடிமை.
அருணாசலம் கச்சேரிக்காக ரயிலில் மணியாச்சி வழியாகச் செல்லும் போதெல்லாம் அவசர அவசரமாக ஒரு பையன் முதல் கிளாஸிலிருந்து ஓடி வருவான்.
அவனைப் பார்த்ததுமே இலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கத் தொடங்குவார் வேம்பு அய்யர்.
ஒவ்வொரு இலைகளிலும் பத்து போளிகள் இருக்கக்கூடும். அவன் வந்ததும் அவர் கைகளில் உள்ள இலைகளை அவன் கைக்கு மாற்றிவிட்டு. “ஓடுலே! ஓடுலே!”, என்று பையனை விரட்டுவார்.
ஒவ்வொரு முறை அவர் இப்படிச் செய்யும் போதும் போளி விற்றதில் வரும் அவருடைய அந்த வாரப் பங்கைத் தாரை வார்க்க நேரிடும்.
அவர் மனைவி சுந்தரி எப்படியும் இழுத்துப்பிடித்துச்சமாளித்துவிடுவாள் என்று அவருக்குத் தெரியும். சமாளிக்க முடியவில்லை என்றாலும் அருணா சலத்திடம் பணம் கேட்கமாட்டார் வேம்பு அய்யர்.
அவரைப் பொருத்த மட்டில் அந்த மண்ணின் பெருமையே அருணாசலம்தான். சங்கீதம் என்றாலே தஞ்சாவூர் ஜில்லா என்ற நிலையை மாற்ற திரு நெல்வேலி ஜில்லா வில் அவதாரம் செய்த கந்தர்வன் தான் அருணாசலம் என்பது அவர் துணிபு.
திருச்செந்தூர் பச்சை சாற்றி திருக்குறுங்குடி உற்சவம், சுசீந்தரத்தில் ஆறாம் திருநாள் என்று அருணா சலம் வாசிக்கும் இடங்களில் எல்லாம் வேம்பு அய்யரை நிச்சயம் பார்க்கலாம்.
எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இவர் வந்தால் அருணா சலத்துக்குத் தெரிந்துவிடும். வேம்பு அய்யரை அழைத்து முதல் வரிசையில் உட்காரச் சொல்லுவார்.
’அந்த மரியாதைக்கு உயிரையே எழுதி வைக்கலாம். போளி எல்லாம் எம் மாத்திரம்?’ என்று நினைத்துப் புளகாங்கிதம் அடைவார் வேம்பு அய்யர்.
என்றுமில்லாத அதிசயமாய் இன்று ஏனோ ரயில் வராத வேளையில் பெரிய அருணாசலம் வந்திருக்கிறார்.
“இன்னிக்கு ராத்திரி ஒட்டபிடாரத்துல கச்சேரி. போற வழியில மணி யாச்சி போர்டைப் பார்த்ததும் அவாளுக்கு உங்க ஞாபகம் வந்துச்சு. அதான் இங்க வந்தோம். கார் வெளியில நிக்கி.”
வேம்பு அவசர அவசரமாக ஐந்தாறு இலைகளில் போளியை எடுத்துக்கொண்டு சாலைக்கு ஓடினார்.
அவர் வருவதைப் பார்த்ததும் தன் ப்ளைமவுத் காரிலிருந்து இறங்கினார் அருணாசலம்.
“ஒட்டபிடாரத்து லகச்சேரினு தெரியாமப் போச்சே!ராத்திரி வந்துடுவேன்,” என்றபடி கைகளில் இருந்த போளிகளை நீட்டினார் வேம்பு.
“ஐயர்வாள்! நானும் மாசக்கணக்கா உங்க கிட்ட பேசணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பேசிடணும்னுதான் வந்திருக்கேன்,” என்றார் அருணா சலம்.
வேம்பு அய்யருக்கு ஒன்றும் புரிய வில்லை. அவர் கைகள் இன்னும் இலைகளை நீட்டிக் கொண்டிருந்தன.
அதை வாங்காமல்
அருணாசலம் தொடர்ந்தார்.
“ஒவ்வொரு தடவை நம்ம பய வரும் போதும் நீங்க பாட்டுக்கு போளியைக் குடுத்துட்டு துரத்திவிட்டுரீய, அவம் பணத்தை நீட்டக்கூட விட மாட்டீங்கீய-ங்கான். எப்பவோ ஒரு தடவைன்னா சரிங்கலாம். இதையே வழக்கமா வெச்சுகிட்டா ?”
வேம்பு அய்யர் லேசாகப் புன்னகைத்தார்.
“நீங்க காசு வாங்கலைன்னா இனிமேல் உங்க கிட்ட போளி வாங்கப் போறதில்ல”
வேம்பு புன்னகை மறையாமல் பேச ஆரம்பித்தார்.
“ஏ...லே!
நீ வாசிக்கற பைரவிக்கும், உசைனிக்கும் உலகத்தையே எழுதி வைக்கலாம். எனக்கு வக்கிருக்கு இந்தப் போளிக்குத் தான். மாசாமாசம் எங்கையாவது வாசிச்சுக் காதைக் குளிர வக்கியே! அது போதாதா? பணம் வேற குடுக்கணு மாங்கேன்?”
“ என்ன சொன்னாலும் இன்னிக்கு எடு படாது. பைசா வாங்கிகிட்டாத்தா இனி உங்க கிட்ட போளி வாங்குவேன்”, என்று பிடிவாதம் பிடித்தார் அருணா சலம்.
”இப்ப நான் உன்கிட்ட எதாவது வாங்கிக்கணும். அம்புட்டு தானே?”
“ஆமா”“அப்ப எனக்கு பணம் வேண்டாம். வேற ஒண்ணு கேக்கேன்.” கொடுப்பீயளோ?
“என்ன வேணும் னாலும் கேளுங்க”, என்று அவசரப் பட்டார் அருணா சலம்.
“யோசிச்சுட்டு சொல்லு. அப்புறம் முடியாதுனு சொல்லக் கூடாது” என்று குழந்தை யுடன் பேரம் பேசுவது போலக் கேட்டார் வேம்பு.
“அதெல்லாம் யோசிச்சாச்சி! உங்களுக்கு வேணுங்கறதைச் சொல்லுங்க.”
“திருனேலி ஜில்லால ஓங் கச்சேரி நடக்காத ஊரே இல்லைங் காவோ. ஆனால் நீ வாசிக்க ஆரம்பிச்ச இந்த இருபத்தஞ்சு வருஷத்துல இந்த மணியாச்சியில மட்டும் உன் கச்சேரி நடக்கவே இல்லை.
நான் பொறந்து வளர்ந்த ஊருல உன் நாகஸ் வரத்துல இருந்து ராகம் ஆறா ஓடணும். அது நடந்தாப் போதும். எனக்கு ஜென்ம சாபல்யம்தான்.”
இப்படி ஒரு வேண்டு கோளை அருணாசலம் எதிர் பார்க்கவில்லை.
“வாசிச்சுட்டாப் போச்சு. உங்க வீட்டுக்கே வந்து வாசிக்கறேன்”
”இல்லை! இல்லை!”, தலையைத் தீர்மானமாய் ஆட்டினார் வேம்பு.
அவர் மனக்கண் முன் பெரிய மேடையில் அருணா சலம் அமர்ந்து வாசிக்க ஆயிரக் கணக்கான ரசிகர் கூட்டம் பந்தலில் உட்கார்ந்து கேட்கும் காட்சி விரிந்து விட்டது.
“சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு இந்த ஸ்டேஷன் பிள்ளையார் கோயில்ல நீ வாசிக்கணும்.” என்று சொல்லி விட்டு கையில் இருந்த போளிகளை அருணாசலத்திடம் கொடுத்துவிட்டு திரும்ப நடை மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் வேம்பு.
உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது வேம்புவுக்கு.
“முட்டாப்பயலுவோ! மாணிக்கத்தைக் கையில வெச்சுக் கிட்டு அனுபவிக்கத் தெரியலையே இந்த மூதிகளுக்கு. எவ்வளவு கட்டியாண்டா என்ன?
ஆபோகியில் மத்யமத்தைத் கம்மலா தொடும் போது வாய்விட்டு ‘ஆமாம்பா’-னு ரசிக்கத் தெரியாதவன் மனுஷனா?”, என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு நடந்தார் அய்யர்
அடுத்த நாள் விழித்ததும்தான் தான் எடுத்துக் கொண்டுள்ள காரியத்தின் முழுப் பரிமாணம் அவருக்குப் புலப் படத் துவங்கியது.
அருணாசலத்துக்கு வேம்புவின்மேல் இருந்த அபி மானத்தால் சம்பாவனையே இல்லாமல் கச்சேரி செய்வான்.
ஆனால் கச்சேரி நடக்க இன்னும் எத்தனையோ செலவுகள் உண்டே. மேடை போட வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்து கேட்க பந்தல் போட வேண்டும். ஒலிப் பெருக்கிகளுக்குச் சொல்லவேண்டும்.
அருணாசலம் கச்சேரி என்றால் எத்தனையோ ஊரிலிருந்து பெரிய பிரமுகர்கள் வருவார்கள் – அவர்கள் உட்கார நாற்காலிகள் வாடகைக்கு எடுக்க வேண்டும். ஊரைக் கூட்டி சாப்பாடு போடாவிடினும், ஆளுக்கு ஒரு கை சுண்டலாவது பிரசாதமாகக் கொடுக்க வேண்டாமா?
இந்தச் செலவுகளை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போதே அவருக்குத் தலை சுற்றியது.
இந்த வார போளிக் கணக்கை கடம்பூருக்குச் சென்று பைசல் செய்தால் கையில் முப்பதைந்து ரூபாய் மிஞ்சும். அதை வைத்து என்ன கச்சேரி நடத்துவது?
வேம்பு தனக்குத் தெரிந்த ஊர் காரர்களை சென்று சந்தித்து விஷயத்தைச் சொன்னார். இவர் கேட்பதற்கு உதவக் கூடிய ஊரென்றால் இது நாள் வரை அருணாசலம் கச்சேரி அங்கு நடக்காமலா இருந்திருக்கும்?
பல இடங்களில் தம்படி கூடப் பெயரவில்லை. அருணாசலம் பெயருக்காக சிலர் அஞ்சும் பத்தும் கொடுத்தனர்.
மூன்று நாட்கள் அலைந்ததில் மொத்தம் நூற்றி ஐம்பது ரூபாய் தேறியது.
சதுர்த்திக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன.
வேம்பு போளி விற்க ரயிலடிக்குப் போன நேரம் போக வசூல் விஷயமாக யாரையாவது சந்தித்துக் கொண்டே இருந்தார். அவருக்கு ஒன்றும் பெரியதாகத் தேறவில்லை.
’அருணாசலம் வேண்டாம் என்பதற்காக வெறும் தேங்காய் மூடியோடா அனுப்ப முடியும்? இன்னும் ஐந்நூறு ரூபாயாவது இருந்தால்தான் ஓஹோவென்று இல்லாவிடினும் ஓரளவவாவது ஒப்பேற்றமுடியும்,’ என்று வெதும்பிய படி வீட்டுக்குள் நுழைந்தார் வேம்பு.
இரவுச் சாப்பாடு முடிந்ததும் வேம்புவின் மனைவி ஒரு கவரை எடுத்து வந்தாள். அதில் நானூறு ரூபாய் பணமிருந்தது.
“ஏதிந்தப் பணம்?” என்று வேம்பு கேட்டு முடிக்கும் முன்பே கழுத்தில் கட்டியிருந்த மஞ்சள் கயிரை எடுத்துக் காட்டினாள் சுந்தரி.
“என்ன சுந்தரி இப்படிப் பண்ணிட்ட? உன் கிட்ட இருந்த ஸ்வர்ணமே அது தானே?அதைப் போய் வெக்கலாமா?”,
என்று தழுதழுத் தார்வேம்பு.
“உதவிக்கு இல்லாத ஸ்வர்ணம் இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? ஒரு வாரம நீங்கப் படற வேதனையை என்னால பார்க்க முடியல.”, என்று சலனமேயில்லாமல் கூறினாள் சுந்தரி.
வேம்பு அவள் கைகளை இழுத்து விரல்களைக் கோர்த்துக் கொண்டார்.
சதுர்த்தியன்று மாலை ஆறு மணிக்கு அருணா சலம் காரில் வந்திறங்கினார். சற்றைக்கெல்லாம் பெரிய அருணா சலம், பெரும் பள்ளம் வெங்க டேசன், அம்பா சமுத்திரம் குழந்தை வேலு முதலான அவர் குழுவினர் பெரிய வண்டியில் வந்து இறங்கினர்.
வேம்பு அருணா சலத்தின் கையைப் பிடித்துக் கொண்டு பிள்ளையார் சன்னதிக்கு அழைத்துச் சென்றார்.
குருக்கள் அர்ச்சனை செய்த பின் மாலை முதலான மரியாதைகளை குழுவினருக்குச் செய்தார்.
பந்தலில் கூட்டம் அம்மியது.
சங்கரன்கோயில், கழுகுமலை, களக்காடு, கடையநல்லூர், சுரண்டை, எட்டையபுரம், புளியங்குளம் என்று அருகில் உள்ள ஊர்களில் இருந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அருணாசலம் மேடையேறி உட்கார்ந்த போதே கரகோஷம் ஊரை நிறைத்தது. வேம்பு முதல் வரிசையில் அருணாசலத்துக்கு நேராக அமர்ந்து கொண்டார்.
அருணாசலம் கௌளையை கொஞ்சம் கோடி காட்டிவிட்டு, ‘ப்ரணமாம்யஹம்’ வாசிக்கத் துவங்கினார்.
எடுத்துக் கொண்ட காலாப்ரமாணம் மின்னல் ! புரவிப் பாய்ச்சலில் ஒலித்த தவில்சொற்கள் உந்தித்தள்ள கல்பனை ஸ்வரங்கள் மட்டும் பதினைந்து நிமிடங்களுக்கு பொறி பறந்தன.
வேம்பு தன்னை மறந்து தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டி ருந்தார். பாடல் முடிந்ததும் வேம்பு ஒரு நிமிடம் தலையைச் சுழற்றி அமர்ந்திருந்த வர்களைப் பார்த்தார்.
இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தா கூட சுந்தரியின் தாலிக்கொடி தப்பியிருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.
அருணாசலம் கர் நாடக பெஹாகை வாசிக்க ஆரம்பித்தார்.
“நேனெந்து வெதுகுதுரா”
”வெதுகுதுரா”-வில் அந்தக் குழைவு அவரை என்னமோ செய்தது.
‘உன்னை நான் எங்கப் போய் தேடுவேன்’ என்கிற வரியில் அலைந்து திரிந்து களைத்த அத்தனை சோர்வையும் குழைத்துச் சமைத்தது போல அந்த ‘வெதுகுதுரா’ ஒலிப்பது போல வேம்புவுக்குப்பட்டது.
“உண்மைதானே! என் குரலுக்கு அகப்படறவனா இருந்தா இப்படித் தாலிக் கொடியை வெச்சு இந்தக் கச்சேரி வெக்கற நிலைமைலையா என்ன வெச்சுருப்பான்?”
வேம்புவுக்கு கண்கள் கலங்கின.
தலையைக் கவிழ்த்துக் கொண்டு துண்டை முகத்தில் பொற்றிக் கொண்டார்.
அருணாசலம் வாசிக்க வாசிக்க அவருக்கு கண்ணீர் பெருகியது.
சில நிமிடங்கள் பொலபொலவென கண்ணீர் உதிர்த்தவுடன் அவர் மனதி லிருந்து பெரும் பாரம் நீங்குவது போலத் தோன்றியது.
அவர் கச்சேரியை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தார்.
அன்றைய பிரதான ராகம் கரஹர ப்ரியா. தார ஸ்தாயியில் சஞ்சாரங்கள் ஆரம்பித்ததும் காலக் கடிகாரம் ஸ்தம்பித்துப் போனது.
பெரிய பெரிய ஸ்வரச் சுழல்களை தன் அமானுஷ்ய மூச்சுக் காற்றின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாய் ஏவிக் கொண்டிருந்தார் அருணாசலம்.
ஒவ்வொரு சுழலும் ஒவ்வொரு புஷ்பம் போல விரிய, அந்தப் புஷ்பங்களை இணைக்கும் சிறு நூலாய் ஒலித்தது அவர் மூச்சை அவசரமாய் உள்ளுக்குள் இழுக்கும் ஒலி.
ஆலாபனை நிறைவடைந்த போது பெருமாளின் விஸ்வரூபத்துக்குத் தொடுத்த மாலை அந்த காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டி ருந்தது.‘சக்கனி ராஜமார்கமு’
அருணாசலம் கீர்த்தனை வாசிக்க ஆரம்பித்த போது வேம்புவுக்கு மனம் துலக்கிவிட்டது போல ஆகிவிட்டது. ஒவ்வொரு சங்கதிக்கும் ‘ஆமாம்பா! ஆமாம்பா!’ என்று வாயாரச் சொல்லிச் சொல்லி ரசித்தார் வேம்பு.
கச்சேரி இன்னும் இரண்டு மணி நேரம் தொடர்ந்த பின் வேம்புவை அருகில் அழைத்தார் அருணா சலம்.
“நாளைக்கு சேலேத்திலே முகூர்த்தம். இப்ப கிளம்பினாத்தான் ரயிலைபிடிக்க முடியும். உத்தரவு கொடுக்கணும்”, என்று கையைக் கூப்பி வேண்டிக் கொண்டார்.
“ஆஹா! ஆஹா!” என்றபடி அருணா சலத்தின் விரல்களைப் பற்றிக் கொண்டார் வேம்பு.
அவருக்கு அதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் எழவில்லை.
பிள்ளையாருக்கு தீபாராதனை ஆனதும் மங்களம் வாசித்து கச்சேரியை முடித்தார் அருணா சலம்.
வாத்தியங்களை சிஷ்யர்கள் கட்டிக் கொண்டிருந்த போது மேடையில் பிரமுகர்களும் ரசிகர்களும் அருணா சலத்தை மொய்த்துக் கொண்டனர்.
வேம்பு ஐயர் மேடைக்கு கீழே காத்துக் கொண்டிருந்தார்.
ஒருவழியாய் மேடையிலிருந்து இறங்கிய கலைஞர்கள் அவசர அவசரமாக ரயிலடிக்குள் புகுந்தனர்.
முதல் கிளாஸ் பெட்டி வருமிடத்தில் சந்திர விலாஸி லிருந்து சாப்பாட்டுடன் ஓட்டல் பையனொ ருவன் தயாராக நின்றிருந்தான்.
அருணாசலம் வருவதற்கு காத்திருந்தது போல் வண்டி நடைமேடைக்கு வந்தது.
ரயிலில் ஏறி ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டார் அருணாசலம்.
ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருந்தார் வேம்பு.
“ஐயர் வாள்! திருப்தி தானே?”, என்று கேட்டார் அருணாசலம்.
“இப்பவே எமன் வந்தா சந்தோஷமா செத்துப் போவேன்!”, என்ற படி ஒரு பையை நீட்டினார் வேம்பு.
துணிப்பைக்குள் பழங்கள், பூ முதலான பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றுக்கடியில் ஒரு சிறிய கவரில் நூறு ரூபாய் பணத்தை வைத்திருந்தார் வேம்பு.
வண்டி ஏறியதும் கொடுத்தால் அதை அருணாசலம் பார்த்து மறுக்க வாய்ப்பு ஏற்படாது என்பது அவர் எண்ணம்.
அருணா சலம் அந்தப் பையை வாங்கி இருக்கையில் வைத்துக் கொண்டார்.
வண்டி கிளம்ப ஆயத்தமானது.
”ஐயர்வாள் ! நான் நேற்றைக்கு திருச் செந்தூர் போயிருந்தேன். உங்களுக்குப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்”,
என்று சிறு பையை எடுத்து வேம்புவிடம் கொடுத்தார்.
வேம்பு வாங்கிக் கொண்டதும் வண்டி நகர ஆரம்பித்தது.
கைகளை அந்தப் பையுடன் சேர்த்துக் கூப்பி அருணா சலத்துக்கு விடை கொடுத்தார்.
வண்டி கண்ணை விட்டு நீங்கியதும் வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
நடந்தபடி கையிலுள்ள பையைப் பிரித்துப் பார்த்தார்.
திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி கண்ணில் பட்டது. அதைப் பிரித்து நெற்றியில் இட்டுக்கொள்ள நினைத்து கையைப் பைக்குள் விட்டார் வேம்பு.
அவர் விரல்கள் சில்லென்று எதையோ ஸ்பரிசித்தன.
அந்தப் பொருளை வெளியில் எடுத்துப் பார்த்தார் வேம்பு.
சுந்தரியின் தாலிக்கொடி அவர் கண்முன் ஆடியது.
*அப்படி ஒரு பிணைப்பு இருந்த காலம் அது - அய்யருக்கு அருணாசலம் பிள்ளைவாள் தந்த தாலிக்கொடி பரிசு அது !!!*thanks to Lalitharam
இதை எழுதியவர் பெயர் லலிதாராம். நீங்களாவது 'படித்ததில் பிடித்தது' என்று போட்டிருக்கிறீர்கள். மிக நன்றாய் இருப்பதால் அவரவர்கள் காபி பேஸ்ட் செய்து தாங்கள் எழுதியது போல உலவ விடுகிறார்கள்.
ReplyDeleteதயவு செய்து பதிவில் லலிதா ராம் அவர்கள் பெயரைச் சேர்க்கவும். இது நாம் அந்த படைப்பாளிகளுக்கு கொடுக்கும் மரியாதை.
மனதை தொட்டது…. எத்தனை பெரிய மனது…
ReplyDelete