Sunday, May 22, 2011

பரிதவிக்கும் படைப்புகள்

வீரிய மிக்க விதை நெல்லை
வீடு நிறைய வைத்திருந்து
வாங்குவோரை எதிர்பார்த்து
வாயிலிலே காத்திருப்பான்
ஒரு நிலமற்ற வியாபாரி

உழுதுபோட்ட நிலத்தினிலே
விதைப்பதற்கு ஏதுமின்றி
விசனப்பட்ட மனத்தோடு
வீதியிலே தினம் திரிவான்
ஒரு வக்கற்ற விவசாயி

கையிலிருக்கும் காணியினை
ஆனமட்டும்  தினம்உழுது
கிடைத்ததனை விதைத்துவிட்டு
வானம்பார்த்து ஏங்கி நிற்பான்
ஒரு வகையற்ற சம்சாரி

மொழிவல்ல அறிஞனுக்கும்
விதியறியா புலவனுக்கும்
இட்டுக்கட்டிப் பாடுகின்ற
இரண்டுக்கெட்டான் கவிஞனுக்கும்
இடையினிலே அவதியுறும்
இனியதமிழ் கவிபோல

பொன்விளையும்  பூமிக்கும்
வீறுகொண்ட வித்துக்கும்
இரண்டையும் இணைக்கின்ற
ஈடில்லா  உழைப்பிற்கும்
இணைப்பின்றித்  துடித்திருக்கும்
பாழான "வேளாண்மை"





22 comments:

  1. ///மொழிவல்ல அறிஞனுக்கும்
    விதியறியா புலவனுக்கும்
    இட்டுக்கட்டிப் பாடுகின்ற
    இரண்டுக்கெட்டான் கவிஞனுக்கும்
    இடையினிலே அவதியுறும்
    இனியதமிழ் கவிபோல////


    ...... இந்த வரிகளில் பொதிந்து உள்ள அர்த்தங்கள் .... வார்த்தைகள் அமைந்து இருக்கும் விதம் ...எல்லாம் பாராட்டுக்குரியவை.

    ReplyDelete
  2. வேளாண்மையின் வேதனையை, இதை விட உண்மையாக சொல்ல முடியாது. நல்ல கவிதை.

    ReplyDelete
  3. ஒன்றிருக்க ஒன்றில்லாமலும், இருப்பதை இணைக்கவும் ஏதுமில்லாமலும் அல்லல் படும் வேளாண்மை குறித்து இதை விட அழகாகக் கூறமுடியுமா.?நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. இதை மட்டும் ஒரு விவசாயி படிச்சிருந்தா, அவனோட விதை நெல்லையே உங்களுக்கு அன்பு பரிசா குடுத்து இருப்பான்.
    அப்படி ஒரு மனவலிய வார்த்தைகளா வடிச்சிருக்கீங்க!
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  5. அடடடா என்ன சொல்லி கமென்ட் போடுரதுனே புரியலை, சாடல், கோபம, கடிந்து கொள்ளுதல், இப்பிடி சொல்லிட்டே போகலாம்.... குரு அசத்தல் கவிதை..!!!!

    ReplyDelete
  6. //மொழிவல்ல அறிஞனுக்கும்
    விதியறியா புலவனுக்கும்
    இட்டுக்கட்டிப் பாடுகின்ற
    இரண்டுக்கெட்டான் கவிஞனுக்கும்
    இடையினிலே அவதியுறும்
    இனியதமிழ் கவிபோல///

    இதுல செமையான உள்குத்து இருக்கு ஹிஹிஹிஹி....

    ReplyDelete
  7. ஆகா
    வேளாண்மையின்
    பேராண்மையை அவர்களின்
    இயலான்மையை தங்களின்
    நாவன்மையின் வழியே
    ஆளுமையாய்
    அளித்த விதம்
    அட்டகாசம் ரமணி சார்

    ReplyDelete
  8. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. விவசாயிகளின் பிரச்சனைகளையும்,
    அவர்களின் இயலாமையையும்,
    இயற்கை தரும்
    சோதனைகளையும், வேதனைகளையும்
    வெகு அழகாகவே விளக்கியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. விதை நெல்லை விற்கும் கொடுமை உடல் உறுப்புகளை விற்கும் கொடுமை போன்றது.

    ReplyDelete
  11. விவசாயிகளின் குமுறல் அப்படியே உங்கள் கவிதையாய் அழகாய் பரிமளித்துள்ளது எனினும் விவசாயியை நினைத்தால் தான் மனம் அழுகிறது…. நல்ல கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  12. "அட காடு வெளைந்ஜென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்" எனும் பட்டுக் கோட்டையின் வரிகளுக்கு ஒப்பான கவிதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. சூப்பர். வழக்கம் போலவே அசத்தல். இந்த முறை வரிகள் இன்னும் அழகா மின்னுவது போல இருக்கு. தொடருங்கள்.

    ReplyDelete
  14. துன்புறும் வேளாண்மை.

    ReplyDelete
  15. ஒரு விவசாயியின் வருத்தங்களைச் சொல்லி உழுகிறது வரிகள் !

    ReplyDelete
  16. //மொழிவல்ல அறிஞனுக்கும்
    விதியறியா புலவனுக்கும்
    இட்டுக்கட்டிப் பாடுகின்ற
    இரண்டுக்கெட்டான் கவிஞனுக்கும்
    இடையினிலே அவதியுறும்
    இனியதமிழ் கவிபோல

    பொன்விளையும் பூமிக்கும்
    வீறுகொண்ட வித்துக்கும்
    இரண்டையும் இணைக்கின்ற
    ஈடில்லா உழைப்பிற்கும்
    இணைப்பின்றித் துடித்திருக்கும்
    பாழான "வேளாண்மை"//
    இன்றைய வேலன் தொழிலில் இருக்கிற சிக்கல்களை மக்களின் பார்வைக்கு பாம் பிடித்து கட்டுகின்றீர் இன்றைய நிலையில் வேளாண் தொழில்காக்கப்படவேண்டும் இல்லை என்றால் நாம் உணவிற்காக வெளி நாடுகளிடம் கையேந்தி கிடக்க வேண்டும் . இடுகைக்கு உளம் கனிந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  17. //உழுதுபோட்ட நிலத்தினிலே
    விதைப்பதற்கு ஏதுமின்றி
    விசனப்பட்ட மனத்தோடு
    வீதியிலே தினம் திரிவான்
    ஒரு வக்கற்ற விவசாயி//உழுகிறது வரிகள் !

    ReplyDelete
  18. இந்த கவிதை நிறைய பேசுகிறது. உலகமயமாக்கல் தொடங்கி அனாதை சிறுவர்களிக்கான வக்காலத்து பாட்டாகவும் உள்ளது. திரும்வும் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  19. கவிதை நிறைய செய்திகளைச் சொல்கிறது.
    நன்று.

    ReplyDelete
  20. இருபது வரிகளில் இரண்டாயிரம் விஷயங்கள்... அற்புதம்.. ரமணி சார்! ;-)

    ReplyDelete