Thursday, May 26, 2011

தாய்மை

அகன்று விரைந்து பரவிஆக்ரோஷமாய்
ஊர் மிரட்டி ஓடியது
அகண்ட காவேரி.
அதனுள்
இருப்பிடம் தெரியாது
கரைந்து கிடந்தாலும்
தான் தான் காவேரி என
பெருமிதம் கொண்டிருந்தது
தலைக்காவேரித் துளி நீர்.

அதிகாலைப் பொழுதில்
மெல்ல மெல்ல விரியும்
பூவிதழ்களாய்
வ்ளர்ந்து விரிந்து
வாசல் நிறைத்து நின்றது
மார்கழி மாதத்து வாயிற்கோலம்
அதன் முழு வளர்ச்சியில்
தான் முற்றாய் மறைந்துபோனாலும்
அதனை நிர்மானித்த பெருமிதத்தில்
மன நிறைவு கொண்டது கோலப்புள்ளி.

சொற்க் காம்புகளின் உச்சியில்
பூத்துச் சிரித்த
உணர்வுப் பூக்களைத்
தாங்கிய போதையில்
மண்மறந்து வானம் தொட
முயன்று தள்ளாடியது ஒருகவிதை
அதிகம் அறியப்படாது
உள்ளடங்கிக் கிடந்தாலும்
கவிதைக்கு உயிர்தரும் மகிழ்வினில்
வேராக உள்ளிருந்தே
பெருமையில் திளைத்தது
கவிதை தந்த கரு

பட்டம் பதவி தந்த
வசதி வாய்ப்புகளில்
ஊரெல்லாம் வாய்பிளக்க
வானம் தொட்டு நின்றான்
வறுமை அறியாதபடி
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை
சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை

24 comments:

  1. துளி நீர்.

    கோலப்புள்ளி.

    கவிதை தந்த கரு

    அடிவயிறு

    ஆனந்தம் கொண்டது தாய்மை//

    அற்புதம்...தாய்மை என்ற பொறுமைதான் எத்தனை வலிமை கொண்டது.?..

    ReplyDelete
  2. கவிதையின் கரு. அபாரக் கற்பனை. பொறாமை கொள்ளுகிறேன். பாராட்டுடன் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அகன்று விரைந்து பரவிஆக்ரோஷமாய்
    ஊர் மிரட்டி ஓடியது
    அகண்ட காவேரி.//
    அது ஒரு பொற்காலம்

    ReplyDelete
  4. அகண்ட காவேரியின் அடையாளமாய் பெருமிதம் கொள்ளும் ஒருதுளி நீர்;

    இந்த மிகப்பெரிய அழகிய கோலத்தின் அஸ்திவாரமே நான் என்று மனநிறைவு கொள்ளும் கோலப்புள்ளி;

    தள்ளாடும் கவிதைக்கு உயிர்தரும் வேராக மகிழும் கவிதைக்கரு இவற்றையெல்லாம் விட

    //சுட்டெரிக்கும் வறுமைக்கு
    துளி நிழல் தாராது போயினும்
    விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
    அவனின் வளர்ச்சி கண்டு
    அவனிருந்த அடிவயிறு தடவி
    ஆனந்தம் கொண்டது தாய்மை//

    என்னைக் கண்கலங்கச் செய்துவிட்டது, ஐயா.

    வெகு அருமையான படைப்பு. படைத்த தங்கள் கரங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.
    பாரட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  5. //அவனின் வளர்ச்சி கண்டு
    அவனிருந்த அடிவயிறு தடவி
    ஆனந்தம் கொண்டது தாய்மை//
    அருமையான வரிகள்.....வார்த்தைகள் உங்களிடத்தில் சிறு குழந்தை போல கொஞ்சி விளையாடுகின்றன.

    வாழ்த்துக்கள் என்றென்றும்

    ReplyDelete
  6. மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    ReplyDelete
  7. எத்தனையோ பேர்
    திறமையானவர்களும்
    திறன் திறப்பவர்களும்
    படிப்பாளிகளும்
    படைப்பாளிகளும்
    புலவர்களும்
    புரவலர்களும்
    இங்கு
    உங்களின் கவிதையை
    படித்து
    அதிசயித்து
    மகிழ்ந்து
    நெகிழ்ந்து இருக்கையிலே
    நானும் உங்கள்
    ரசிகர்களில் ஒருவன்
    என்ற ஒப்பற்ற
    தகுதியிலே
    என்னுள்ளே
    மகிழ்ந்து
    வணங்குகிறேன்
    ரமணி சார்

    ReplyDelete
  8. கோபுரத்தைத் தாங்கும் பொம்மைகளில் துவங்கிய கவிதை பொம்மையைத் தாங்கிய கோபுரத்தில் நெகிழ்வுடன் முடிந்தது அருமையிலும் அருமை ரமணியண்ணா.

    ReplyDelete
  9. அம்மாவின் பெருமை சொல்கிறது கவிதை.அம்மா என்றாலே வாழ்வின் மந்திரம் !

    ReplyDelete
  10. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. உங்கள் கைகளைக் கொஞ்சம் காட்டுங்கள்... அப்படியே பற்றிக் கொள்ளத் தோன்றுகிறது. தாய்மையின் அருமையை அப்படியே அழகாய் வடித்திருக்கிறீர்கள் உங்கள் கவிதையில். வாழ்த்துகள்....

    ReplyDelete
  12. அடடடடா அருமை அருமை குரு....!!!

    ReplyDelete
  13. //விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
    அவனின் வளர்ச்சி கண்டு
    அவனிருந்த அடிவயிறு தடவி
    ஆனந்தம் கொண்டது தாய்மை//

    தாய்மை போற்றி தாய்மை போற்றி சூப்பர்....!!!

    ReplyDelete
  14. ரமணி சாரைத் தவிர யாராலும் தாய்மையின் உயர்வை இவ்வளவு அழகாகச் சொல்ல முடியாது.அதோடு இந்தக்காலப் பிள்ளைகளின் விட்டேற்றியான தன்மையையும் தெளிவாய்ச் சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  15. அப்பா.... அசத்தல் கவிதை எப்பவும் போல :)

    ReplyDelete
  16. அருமையான கவிதை! ஜீவனுள்ள வரிகள்!!
    யதார்த்த வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இந்த தத்துவம் பொதிந்திருக்கிறது! எப்படி ஒரு மரத்தின் பசுமையையும் மலர்களையும் பார்த்துப் பார்த்து ரசிக்கிற மனசு அதைத் தாங்கி நிற்கும் வேர்களை நினைத்துப் பார்ப்பதில்லையோ அது போல!!
    " தாய்மை" உங்களின் கவிதைக் கரங்களால் மகுடம் சூட்டிக்கொண்ட பெருமையில் இங்கே ஜொலிக்கிறது!
    இதயம் நிறைந்த பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  17. தலைக்காவேரித் துளி நீர் போல ஆதாரமான தாய்மை உணர்வின் பெருமிதம் உங்கள் கவிதை மகுடத்தின் ஒளிவீசும் பிரதான வைரம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. //பட்டம் பதவி தந்த
    வசதி வாய்ப்புகளில்
    ஊரெல்லாம் வாய்பிளக்க
    வானம் தொட்டு நின்றான்
    வறுமை அறியாதபடி//
    இதயம் நிறைந்த பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  19. வறுமை அறியாதபடி
    பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை
    சுட்டெரிக்கும் வறுமைக்கு
    துளி நிழல் தாராது போயினும்//
    மனம் கனக்கும் கனத்தவரிகள்.

    ReplyDelete
  20. தாய்மையின் தூய்மை கவிதையின் பெருமை

    ReplyDelete
  21. கவிதைக்குக் கரு ஒன்றாக இருந்தாலும் அதைக் கையாளுகின்ற கவிஞர்களின் திறமை வேறுபட்டது. அப்படித்தான் உங்கள் இக்கவிதையிலும் ஒரு நினைக்கமுடியாத அபார வேறுபாடும் அற்புதக் கையாளுகையையும் வாசித்து இரசித்தேன்.

    ReplyDelete
  22. தாய்மையின் மூன்று கோணங்களாக இதைப் பார்க்கிறேன். சொற்காம்புகளின் உச்சியில் பூக்கும் உணர்வுப்பூக்கள்...அடிவயிறு தடவி ஆனந்தம் கொண்டது தாய்மை.. அருமை சார்..ஆனந்தமும் அதனோடு பரிவும் மிதக்கும் கவிதை

    ReplyDelete
  23. வார்த்தைகளின் கனம் அதை தாங்கியுள்ள வரிகளில் மிளிர தருவது தான் இக்கவிதையின் சிறப்பு...
    பெருக்கெடுத்து ஓடும் காவேரியை ஒரு துளி நீர் கம்பீரமாய் உணர்வதைப்போல்....

    ஆஹா ஓஹோன்னு கவிதையை பாராட்டிச்செல்வோர் அதன் கருவை சிலாகிப்பாருண்டோ? ஆனால் கரு கொள்ளும் பெருமிதம் அறியமுடிகிறது உங்களின் வரிகளில்....

    இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகளை வளர்க்க பெரும்பாடுபட்டு அதுவும் எத்தனையோ பெண்கள் கணவன் சரியில்லாமல், கணவன் உயிருடனில்லையென்றால் வாழ்க்கை அஸ்தமித்தது போல் சோர்ந்து உட்கார்ந்துவிடாமல் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து தானும் நின்று தன்னை உருக்கி தன் வயிற்றுப்பிள்ளையை உலகமே போற்றும் வண்ணம் உருவாக்கி அதன் பின் ?? அதன் பின் ??? வெற்றியின் விளிம்பில் நிற்கும் பிள்ளைக்கு குனிந்து தாய் நிற்கும் இடம் பார்க்கும் நேரம் இல்லையோ? ஆயினும் தாய் - எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தன்னைப்பற்றி நினைக்காமல் தான் வளர்த்த குருத்து உதித்த வயிற்றை பெருமையுடன் தடவி பார்க்கும் ஆனந்தம்... தாய்மைக்கே உள்ள சிறப்பை அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி கவிதையாய் படைத்துவிட்டீர்கள் சார்..

    எனக்கும் அம்மா என்றால் ஸ்வாமிக்கும் மேலே... அம்மா முகத்தில் எப்போதும் சிரிப்பை பார்க்க துடிக்கும் ஒரு சிலரில் நானும் ஒரு துளி சார்....

    அன்பு வாழ்த்துக்கள் சார் தாய்மையை கௌரவித்ததற்கு....

    ReplyDelete