Tuesday, May 31, 2011

மயான சங்கல்பம்

அர்த்த ஜாமத்தில்
மயானத்தின் மத்தியில்
எறியும் சிதையருகில்
எப்போதும்
"அதுகளும்" நானும் மட்டும் இருப்போம்

எரிகின்ற   சிதையை
"அதுகள்" எதையோ
இழந்ததைப் போலப் பார்க்கும்
போதையின் உச்சத்தில்
சில சமயம்
என்னை அறியாது நான் பிதற்றுவேன்
"அதுகளும்"
தன்னை அறியாது
பிதற்றத் துவங்கும்

"அது" ஆணாக இருப்பின்
முதலில் ஒரு ஏக்க பெருமூச்சு விடும்
பின்
"அவளை அவ்வளவு கஷ்டப் படுத்தியிருக்க வேண்டியதில்லை"
எனச் சொல்லி
விக்கி விக்கி அழும்
நான் ஆறுதல் சொல்லித் தேற்றுவேன்
"அடுத்த ஜென்மத்திலாவது மனிதனாக
நடந்து கொள்ள வேண்டும்"
எனப் பிதற்றி நகரும்

"அது" பெண்ணாக இருப்பின்
"இனி இந்த மனிதன் என்ன பாடு படப் போகிறானோ' என
விம்மி விம்மி அழும்
நானும் ஆறுதல் சொல்வேன்
முடிவாக
"படட்டும்...நன்றாகப் படட்டும்
அப்போது தான் என்னருமை தெரியும்"
எனச் சொல்லி நகலும்

போதையின் உச்சத்தில்
எனக்கும் ஞானம் வரும்
மயானம் விட்டு வெளியேறுகையில்
நானும் முழு மனிதனாகத்தான் போவேன்

வீதி கடந்து வீடு நுழைகையில்
எனக்கு முன்பாகவே
என் "வீராப்பு" அமர்ந்திருக்கும்

"மனிதன் செத்து பொழச்சு வாரான்
தூக்கத்தப் பாரு" என
என் குரல் ஓங்கி ஒலிக்கும்
ஒரு கால் கதவை உடைக்கும்

போதையில்
உடல் மட்டும்தானா ஆடும்?
வீடென்ன
வீதியே ஆடத் துவங்கும்

34 comments:

  1. 'அதுகள்' ப்ப்ப்பேயா????
    கவிதை அட்டகாசம்!! ஈகோ இல்லா மனிதன் முழு மனிதன், அவனைத் தான் நான் தேடி அலைகிறேன் 'அதுகள்' போலவே .

    ReplyDelete
  2. யாரை பார்த்தும் நாம் பாடம் கற்று கொள்ள போவதில்லை. மாறுபட்ட கற்பனையில் மலர்ந்த கவிதை அருமை.

    ReplyDelete
  3. கவிதை வெகு அருமையாக உள்ளது. மயான வைராக்யம், பிரஸவ வைராக்யம் என்று சொல்லுவார்கள். இறந்தவரை எரித்து விட்டு சுடுகாட்டை விட்டுக்கிளம்பியதும் மயான வைராக்யமும், இடுப்புவலி பட்டவளுக்கு குழந்தை ஒருவழியாகப் பிறந்ததும் பிரஸவ வைராக்யமும் மாயமாய் மறைந்துவிடும். பிறகு வழக்கப்படி சண்டை சச்சரவுகளும் ஜல்ஸாவும் தான் மிஞ்சும் என்பதை வெகு அழகாக ஒரு சுடுகாட்டு வெட்டியான் வாயிலாக அழகான ஒரு கவிதையாக்கித்தந்துள்ள உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    நாட்டு நடப்பை நகைச்சுவையாக விவரித்துள்ள இந்தக்கவிதை வெகு அருமையாக உள்ளது.

    தொடருங்கள்.

    ReplyDelete
  4. குடி போதையில் இருக்கும்போது மனிதன் உண்மையையே பேசுவான் என்றும் அவனுடைய சுயம் முழுமையாக வெளிப்படும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.மற்ற நேரங்களில் வெளிப்படுவதெல்லாம் போர்த்தப் பட்ட குணங்களா.?வித்தியாசமாக சிந்திக்க வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  5. ரமணி சார் ’அதுகள்’ இன்றி இருந்தால் அவர்களாய் ஆவர்கள் அல்லவா நல்ல கவிதை

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  6. //அதுகள்' போலவே .//

    good style....

    ReplyDelete
  7. அடுத்த ஜென்மத்திலாவது மனிதனாக
    நடந்து கொள்ள வேண்டும்"
    எனப் பிதற்றி நகரும் //
    அப்போது தோன்றி அப்போதே மறையும் ஞானோதயம்!
    பாராட்டுக்கள் ஆழ்ந்த கருத்துக்களப் பொதிந்த அருமையான கவிதைக்கு.

    ReplyDelete
  8. போதையில்
    உடல் மட்டும்தானா ஆடும்?
    வீடென்ன
    வீதியே ஆடத் துவங்கும்//

    ஆட்டம் கண்ட மனிதம்.

    ReplyDelete
  9. நல்ல கவிதை ரமணி சார். ஒவ்வொரு முறை மயானம் செல்லும் போதும், அங்கு மற்ற மக்கள் பேசுவதைக் கவனிப்பது எனது வழக்கம். வெளியே வந்தவுடன் அவர்கள் நடந்து கொள்ளம் விதம் அதற்கு முற்றிலும் மாறாக இருக்கும். அதை நீங்கள் கவிதை மூலம் அழகாய் வெளிப்படுத்தி இருக்கீங்க...

    ReplyDelete
  10. குடியின் கெடுதலை அருமையாகசொல்லும் கவிதை.

    ReplyDelete
  11. "எனக்கு முன்பாகவே
    என் "வீராப்பு" அமர்ந்திருக்கும்"

    சித்திரமும் கைப்பழக்கம் எனக்கொண்டால்
    வீராப்பை விரட்டுவதும் தொடர்பயிற்சியின்மூலம்
    சாத்தியப்படுத்தலாம், இவ்வாறான கவிதைகளையும்
    உணர்வுசார்ந்த உரைநடைகளையும் தொடர்ந்து வாசிக்கப்பழகுவதால். நன்றி.

    ReplyDelete
  12. WATCH ALL LATEST MOVIES.
    HINDI, TAMIL, TELUGU, MALAYALAM, LIVE TV AND MORE.
    http://latestmovies.webng.com/

    ReplyDelete
  13. வீடென்ன வீதியே ஆடும் ஹா ஹா ஹா ஹா ரசித்தேன் ரசித்தேன் குரு...

    ReplyDelete
  14. எப்பிடித்தான் வார்த்தைகளை கோர்ப்பீன்களோ ஆச்சர்யமா இருக்கு குரு...!!!

    ReplyDelete
  15. 'அதுகள்' அற்புதம் ரமணி சார்! வீதியே ஆடும்!!!! சூப்பெர்ப். ;-))

    ReplyDelete
  16. குறியீட்டு வடிவில், போதையேறிய பின்னர் முற்றும் மறந்து, வேறோர் உலகினைத் தரிசிக்கும் ஒரு மனிதனின் உணர்வுகளைக் கவிதையாக்கியிருக்கிறீர்கள் சகோ.

    ReplyDelete
  17. இங்கே அதுகள் எனும் அஃறிணைக் குறியீட்டு விழிப்பு, கவிதைக்குப் பல பொருட்களில் அர்த்தம் தருகிறது.

    ReplyDelete
  18. தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று படிக்க ஆரம்பித்தேன்.. ஆணவத்தின் உச்சத்தை மயானம் கொஞ்சமே கொஞ்சம் அசைத்து தான் பார்க்கிறது என்ற நிதர்சனம் ஒத்துக்கொள்ள தான் வேண்டும்... எத்தனை போதையில் இருந்தாலும் மனிதனை மயானம் புத்தி புகட்ட தான் செய்கிறது “ அது “ வித்தியாச வரிகள் ரமணி சார்....

    அருமையான வித்தியாசமான படைப்பு இது ஆண் பெண் இருவரின் அகம்பாவமும் ஆணவமும் இங்கே தலை குனிந்து மண்ணோடு மக்கியும் நெருப்பில் கரைந்தும் போகிறது என்பதை அழுத்தமான வரிகளில் உரைத்துள்ளீர்கள்.... ஹாட்ஸ் ஆஃப் சார்.... இன்னும் உங்கள் படைப்புகள் படித்துவிட்டு எழுதுகிறேன்...

    அன்பு வாழ்த்துகள் ரமணி சார்...

    ReplyDelete
  19. முடிவாக
    "படட்டும்...நன்றாகப் படட்டும்
    அப்போது தான் என்னருமை தெரியும்"
    எனச் சொல்லி நகலும்

    மனதார ரசித்தேன் ரமணி சார்

    மனமே சாட்சியாய்
    மனமே காட்சியாய்
    மனமே நீட்சியாய் ..................
    மனதின் பல
    கோலங்களை ,
    கூளங்களை
    நிதர்சனமாய் சொல்லிபோகிறது தங்களின் கவிதை

    ReplyDelete
  20. தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று படிக்க ஆரம்பித்தேன்.. நல்ல கவிதை..! பாராட்டுக்கள் ..!

    ReplyDelete
  21. மயான சங்கல்பம்.ஆழமான வார்த்தைகளைப் போல அர்த்தமுள்ள தலைப்பு!வார்த்தைகளெல்லாம் உங்கள் வலையின் ஜோதி போல!

    ReplyDelete
  22. இதைதான் சுடலை ஜானம் என்று சொல்லுவதோ

    ReplyDelete
  23. அதுகளாக நாமும் நாமளாக அதுகளும் இவ்வுலகில்.

    வித்தியாச கோணத்தில் சிந்தனை மிக அருமை..


    [நீரோடையில்: http://niroodai.blogspot.com/2011/05/blog-post_31.htmlசிக்கித்தவிக்கும் சனநாயகம்..]

    ReplyDelete
  24. அசத்தலான 'அதுகள்'... ருத்ரபூமியில் ஒரு ஞானச்செடி... பூக்குமோ பொய்க்குமோ ...

    ReplyDelete
  25. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. ரமணி சார்...
    உங்கள் பதிவின் தலைப்பே என்னைத் தொடர்ந்து ஈர்த்துக்கொண்டிருக்கிறது. இந்தக் கவிதை நிலையாமையை அழகுறச் சித்தரிக்கும் கவிதை. மரணம் எப்படிப்பட்ட மனிதனையும் அசைத்து மனசாட்சியை உலுக்கி ஒரு ஆட்டம்போடவைத்து வேடிக்கைப் பார்க்க வைக்கும். என்னுடைய பேராசிரியர் அவருடைய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார். உடம்பு மயானத்திற்கு விளக்கேற்றுகிறது. நாம் உயிரோடு இருக்கும்போது எத்தனையோ ஒளி விளக்குகளை ஏற்றவேண்டும். இதுதான் பலருக்கும் புரிவதில்லை. உணர்வதுமில்லை. திருமந்திரத்தில் திருமூலர் அழகாகப் பாடியிருக்கிறார். ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்-பேரினை நீக்கிப் பிணமென்று பெயரிட்டு-சூறையங்காட்டிடைக் கொண்டுபோய் சுட்டிட்டு- நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே என்று. இப்படித்தான் வாழ்க்கை. அதை உணரும் தருணம் பிறகும்போது வலியோடு உணரும் தருணம் இறப்பின்போதும். வலுவான கவிதையாக உங்கள் கவிதையைப் பார்க்கிறேன். தொடர்பணிகள். அதனால் தாமதம். இனி வாய்ப்பமைவில் அடிக்கடி வருவேன். உங்கள் பதிவுகள் உலகத்தின் வாசலில் ஞானத்தைத் தெளிக்கட்டும். வாழ்வியலின் அற்புதத்தைக் காட்சிப்படுத்தட்டும்.

    ReplyDelete
  27. வித்தியாசமான சிந்தனைக் கவிதை.

    எல்லோருடைய "வீராப்பும்" மயானம்போகும் வரைதான்.

    ReplyDelete
  28. "அடுத்த ஜென்மத்திலாவது மனிதனாக
    நடந்து கொள்ள வேண்டும்"

    "படட்டும்...நன்றாகப் படட்டும்
    அப்போது தான் என்னருமை தெரியும்

    very nice

    ReplyDelete
  29. //போதையில்
    உடல் மட்டும்தானா ஆடும்?
    வீடென்ன
    வீதியே ஆடத் துவங்கும்//குறியீட்டு வடிவில்வித்தியாசமான சிந்தனைக் கவிதை.வெளிப்படுத்தி இருக்கீங்க...

    ReplyDelete
  30. மிகவும் மகிழ்ந்தேன் தங்களின் என் தளவருகையில் உன்னதமானதொரு உறவினை அடைந்த உணர்வு பெற்றேன்

    கவிதையின் தலைப்போடு நடையினை வியந்தேன்
    வாழ்த்துகள் நன்றிகள் சார்

    ReplyDelete
  31. மயானம் செல்லாமலே எனக்கு ஞானம் தந்தது உங்கள் பதிவு. தொடருங்கள் உங்கள் பதிவு பணியை தாமத மானாலும் தொடர்ந்து வருவேன் நான் மயானம் போகும் வரை

    ReplyDelete
  32. அதுகள்...சிரித்தேவிட்டேன்.கவிதையும் ஆடுகிறதே !

    ReplyDelete
  33. //எரிகின்ற சிதையை
    "அதுகள்" எதையோ
    இழந்ததைப் போலப் பார்க்கும்
    போதையின் உச்சத்தில்
    சில சமயம்///குறியீட்டு வடிவில்வித்தியாசமான சிந்தனைக் கவிதை.வெளிப்படுத்தி இருக்கீங்க...

    ReplyDelete
  34. ஆமாம், உண்மைதான் அது மறதியல்ல சில விசயங்களை மறுபடியும் நினைத்துக்கூட பார்க்க விரும்புவதில்லை. அதனாலேயே 'அது'களாகவே இருக்கிறோம்.

    ReplyDelete