Sunday, September 23, 2012

அரவாணி -அது ஒரு குறீயீடு

மணம்  முடித்த மறு நாளில்
கணவனை  இழப்பதை
அறிந்தே  இழந்த
கைம்பெண்ணை மட்டும் குறிப்பதல்ல
 அரவாணி என்பது......

அது ஒரு குறியீடு

கூச்சல் கும்மாளம் மகிழ்ச்சி ஆரவாரம்
அனைத்தையும் ஒரே நாளில்
அனுபவித்து முடித்து
மறு நாள் யாருமற்ற அனாதையாய்
பொட்டிழந்த முகமாய்
பொட்டல் காடாய்
அனைத்து அலங்காரங்களையும்
இழந்து  அலங்கோலமாய்க் கிடக்கும்
அந்த மாசித் திருவிழா மைதானம் போல்

உறவுக் கூட்டம் உற்சாக நிகழ்வுகள்
மண மலர்கள் வாசம்
விருந்து உபச்சாரம்
அனைத்தையும் ஒரே நாளில்
அனுபவித்து முடிந்து
குப்பை கூளமாய் இருளடைந்து
வெறுமையில் வெம்பிக் கிடக்கும்
தனிமை வேதனையைச் சுமந்துத் தவிக்கும்
அந்த ராசியான திருமண மண்டபம் போல்

முள்வெட்டி ஒதுக்கி
பந்தலிட்டு தோரணங்கள் கட்டி
குலவை ஒலியுடன்  பொங்கலிட்டு
பழங்கதைகள் பலபேசி
உறவுகளோடு பகிர்ந்துதுண்டு பசியாறி
வெளிச்சம் குறைவதற்குள் அனைவரும் வெளியேற
மீண்டும் இருளிலும் தனிமையிலும்
கிடக்கும் அவலம் குறித்து அழுது புலம்பும்
அந்தக் கிராமத்துக் குலச்சாமி போல்

உயிருள்ளவைகளோ உயிரற்றவைகளோ
உச்சம் தொட்ட மறு நொடியில்
அதலபாதாளத்தில் வீழந்தவைகளை எல்லாம்
அதீத மகிழ்வில் திளைத்த மறு நொடியில்
அதிக அவலத்தைச் சந்தித்தவைகளை எல்லாம்

குறீயீடாகக் காட்டிச் செல்லும்
அதிகப் பொருள் கொண்ட
அற்புதச் சொல் அது

மணம் முடித்த மறு நாளில்
கணவனை இழப்பதை
 அறிந்தே இழந்த
கைம்பெண்ணை  மட்டும் குறிப்பதல்ல
அரவாணி  என்பது

அது ஒரு அவலத்தின்  குறியீடு

34 comments:

  1. சின்னச் சின்னதாய் ...
    நுணுக்கமாய் மிக நுணுக்கமாய் வார்த்தைகளை கோர்த்துள்ளீர்கள் சார்..
    ////
    உறவுக் கூட்டம் உற்சாக நிகழ்வுகள்
    மண மலர்கள் வாசம்
    விருந்து உபச்சாரம்
    அனைத்தையும் ஒரே நாளில்
    அனுபவித்து முடிந்து
    குப்பை கூளமாய் இருளடைந்து
    வெறுமையில் வெம்பிக் கிடக்கும்
    தனிமை வேதனையைச் சுமந்துத் தவிக்கும்
    அந்த ராசியான திருமண மண்டபம் போல்
    ////

    இந்த வரிகளே போதும்..

    ReplyDelete
  2. // அரவாணி என்பது......அது ஒரு குறியீடு //
    // அந்த மாசித் திருவிழா மைதானம் போல் //
    // வெறுமையில் வெம்பிக் கிடக்கும் அந்த ராசியான திருமண மண்டபம் போல் //
    // அழுது புலம்பும் அந்தக் கிராமத்துக் குலச்சாமி போல் //
    // கைம்பெண்ணை மட்டும் குறிப்பதல்ல //
    // அரவாணி என்பது அது ஒரு அவலத்தின் குறியீடு //

    தங்கள் சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் அருமை! அருமை! உணர்ச்சி வெள்ளத்தில் கரையில் வந்து விழுந்த வார்த்தைகள். டிகேசி இருந்திருந்தால் உங்களை கட்டிப் பிடித்து பாராட்டு தெரிவித்து இருப்பார்.

    ReplyDelete
  3. டிகேசி இருந்திருந்தால் உங்களை கட்டிப் பிடித்து - தி.தமிழ் இளங்கோ.

    இவரைப் பாராட்ட டிகேசி தான் வரவேண்டுமா...?

    அரவாணி - அது ஒரு அவலத்தின் குறியீடு என்பதை அற்புதமாய் விளக்கி இருக்கிறீர்கள் ரமணி ஐயா.
    என்ன சொல்லி பாராட்ட...? வணங்குகிறேன்.

    ReplyDelete
  4. சிறந்த பகிர்வு தொடர வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  5. mmmmm.......

    vimarsanam solla theriya villai....

    ReplyDelete
  6. அர‌வாணியெனும் அவ‌ல‌த்தின் குறியீட்டை திருவிழா, திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌ம், குல‌சாமி ப‌டைய‌ல் என‌ நுட்ப‌மாக‌ ஒன்றிணைத்த‌ திற‌ன் பாராட்ட‌த் த‌க்க‌து. சிந்தை தூண்டும் க‌விதை வ‌ரிக‌ள்.

    ReplyDelete
  7. கிராமத்து குலசாமி.... 'ஒரு வருடமோ, இரண்டு வருடமோ...மீண்டும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டுமோ' என்று எண்ணியிருப்பார்! குலதெய்வம் கோவில் சென்று வரும்போது இந்த உணர்வு எனக்கும் வரும்!
    மொத்தத்தில் அருமையான வரிகள்.

    ReplyDelete
  8. உச்சம் தொட்ட மறுநொடியில்தான்
    விழித்துக்கொள்கிறது
    வேலி தாண்டிய வெள்ளாடுகள்
    அவர்களின் செயலுக்கு
    பலிகடா ஆவது
    அவர்கள் குப்பையில் வீசும்
    அநாதை குழந்தைகள்

    ஆனால் அனைவருக்கும் படியளக்கும்
    அந்த இறைவன் அவர்களுக்கென்றே
    இவ்வுலகிற்கு அனுப்பிவைக்கின்றான்
    அன்னை தெரசா மற்றும் உதவும் கரங்கள்
    வித்யா சாகர் போன்ற நல்லவர்களை

    கவர்ச்சிக்கும் உணர்ச்சிக்கும்
    வேறுபாடு அறியா விடலைகள்
    சமூகத்தின் நாகரீக காவலர்கள்
    மிரட்டலுக்கு பயந்து சுடலையில்
    உயிர் விடுகின்றன

    ஆபாசம் என்று மேடையிலே பேசி
    பாடையிலே போகும் வரை
    ஆபாச காட்சிகளை மறைமுகமாய்
    ரசிக்கும் இந்த பொய் மனிதர்கள்
    இந்த உலகை விட்டு போகும் நாள் எந்நாளோ?

    ReplyDelete
  9. ஒன்றுக்குள் பலவற்றை காண்பது உங்கள் சிறப்பு.
    அது அரவானியிலும் வெளிப்படுகிறது.

    ReplyDelete
  10. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  11. முள்வெட்டி ஒதுக்கி
    பந்தலிட்டு தோரணங்கள் கட்டி
    குலவை ஒலியுடன் பொங்கலிட்டு
    பழங்கதைகள் பலபேசி
    உறவுகளோடு பகிர்ந்துதுண்டு பசியாறி
    வெளிச்சம் குறைவதற்குள் அனைவரும் வெளியேற
    மீண்டும் இருளிலும் தனிமையிலும்
    கிடக்கும் அவலம் குறித்து அழுது புலம்பும்
    அந்தக் கிராமத்துக் குலச்சாமி போல்//

    குலதெய்வ வழிபாட்டை பற்றி அருமையாக சொல்லி விட்டீர்கள். எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு கல்யாணத்திற்கு பின்பும் எல்லோரும் சேர்ந்து போய் பொங்கல் வைத்து வழிபட்டு வருவோம்.
    குழந்தைகள் பிறந்தவுடன் அவரிடம் காட்டி ஆசிர்வாதம் வாங்கி வருவோம். அவரை போல நாமும் அப்புறம் எப்போது போவோம் என்று புலம்பிக் கொண்டு இருப்போம்.
    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அருமையான பதிவு.

    ReplyDelete
  13. வழக்கம் போல் அசத்தல் வரிகள் த.ம 10

    ReplyDelete
  14. அனைத்து அலங்காரங்களையும்
    இழந்து அலங்கோலமாய்க் கிடக்கும்
    அந்த மாசித் திருவிழா மைதானம் போல்...
    ஒவ்வொரு நிகழ்விலும் ஒப்பிட்டுக் கூறிய விதம் பிரமிக்க வைத்தது ஐயா.

    ReplyDelete
  15. என்ன சொல்ல... வார்த்தைகளின் கனத்தில் பிரமித்து நிற்கிறேன். அருமை ஸார்.

    ReplyDelete
  16. என்ன சொல்வது என்றே தெரியவில்லை...உங்கள் ஒவ்வொரு வரியும் மனதை கனபடுத்தி சிந்திக்க வைக்கிறது....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  17. போல வந்த உவமைகள் அனைத்தும் சாலச்சிறந்தன!

    ReplyDelete

  18. ஏதோ வேண்டுதல் நிறைவேற்ற அரவாணிகள் அல்லாதோர் சிலரும் அக்குறியீட்டுக்குள் ஒரு நாள் வருவதாகக் கேள்விப்ப்ட்டேன். . ரசித்த கவிதை. பலருக்கும் அவர்கள் மேல் பரிதாபமோ பச்சாதாபமோ வருவதில்லையே. இது அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையாலா. ?

    ReplyDelete
  19. அருமையான கவிதை... சிறப்பான வரிகள்...

    வாழ்த்துக்கள்... நன்றி... (TM 15)

    ReplyDelete
  20. அரவாணி -அது ஒரு குறீயீடு

    அருமையான தலைப்பு... அருமையான கரு நீங்கள் இம்முறை கையில் எடுத்தது... வரிகளுக்கும் கருத்துகளுக்கும் அமைக்கும் வார்த்தைகளுக்கும் கேட்கவா வேண்டும்??? கண்மூடி சிந்தித்துக்கொண்டே கவி வரைவதில் நிகர் நீங்களே ரமணிசார்.... தங்கு தடையின்றி வார்த்தைகள் வந்துக்கொண்டே இருக்கும்... கருத்து செறிவாற்றல் மிக்க வரிகள் இவை.... படிக்கும்போது சட்டென அப்படிப்பட்ட உயிர்களுக்காக ஒரே ஒரு நொடி கருணை நம் மனதில் பிறக்கவைக்கும் வரிகள் இவை....

    பால்ய விவாகத்தில் இருந்து தொடங்கி கணவன் இறந்தால் மனைவியும் உடன்கட்டை ஏறவேண்டும் என்று தொடர்ந்து... பின் பென்களை அடுப்படியில் இருந்து வெளியே கொண்டு வந்து சமுதாய மலர்ச்சி இன்னும் என்னென்னவோ பெண்களுக்காக பெண்களின் முன்னேற்றத்திற்காக.....

    இதோ இந்த ஒரு பிறவி... ஆணுமில்லாத பெண்ணுமில்லாத ஒரு நிலை...பெற்றோரிடம் கூட ஆதரவாய் ஆறுதலாய் அரவணைப்பை அன்பை பெறமுடியாதச்சூழலில் தான் தன் வழியை பார்த்துக்கொண்டு இதற்கென்றே இருக்கும் கூட்டத்துடன் சேர்கிறார்கள்... முன்பெல்லாம் இப்படி இருப்போரை பிச்சை எடுக்கவும் இழிதொழில் செய்யவும் மட்டுமே பயன்படுத்தினர்.... ஆனால் இப்போது அப்படி இல்லை.. பன்மடங்கு முன்னேறி எங்களாலும் சாதிக்க இயலும் என்று சாதித்து காட்டிய வீரர்கள் இவர்கள்...

    இவர்களும் மற்றவரைப்போல அன்பும் கருணையும் சாந்தமும் பொறுமையும் ஆசையும் வைத்திருக்கும் சாதாரண மனிதர்கள்.... இவர்களுக்கும் வாழ உரிமையும் இருக்கிறது,. சாஸ்திரம் சம்பிரதாயம் சடங்குகள் இவர்களுக்கும் உண்டு...

    இயல்பாய் திருமணம் என்றால் இருவீட்டிலும் உற்றமும் சுற்றமும் மகிழ்ந்து கொண்டாட்டமாய் கொண்டாடும் கோலங்கள் மட்டுமே நினைவுக்கு வரும்... ஆனால் ரமணி சார்.... உங்கள் இந்த வரிகள் படிக்கும்போது கண்கள் கலங்குவதை தடுக்க இயலவில்லை. உண்மையே.. ஒரே நாளில் சந்தோஷமும் துக்கமும் ஒருசேர அனுபவிக்கும் வரத்தை வாங்கி வந்தவர்கள் :(

    காலையில் இருந்து முகம் நிறைய சந்தோஷமும் உலகம் முழுக்க எங்கிருந்தெல்லாமோ வந்து ஒன்று சேர்ந்து நலம் விசாரித்து புத்தாடை உடுத்தி இனிப்பு உண்டு புதிய தாலி கழுத்தில் மினுமினுக்க ஒரு நாள் ஒரே ஒரு நாள் தான் இவர்களின் முழு சந்தோஷமும் வருடத்திற்கு ஒரு நாள்... இந்த ஒரு நாளுக்காக வருடம் முழுக்க காத்திருக்கும் நங்கையர்...

    எழுத்துகளில் அவர்களின் மன உணர்வுகளையும் அழுகை சத்தத்தையும் வாசிப்போர் உணரும்படி எழுதி இருக்கீங்க ரமணிசார்....

    வரிக்கு வரி.... நச் நு எழுதி இருக்கீங்க... என் மனம் கவர்ந்த கவிதைகளில் இதுவும் ஒன்று... அன்பு நன்றிகள் ரமணிசார்...

    அரவாணி அது ஒரு அவலத்தின்.. அவர்களின் அழுகையின்.... அவர்களின் வேதனையின்.... அவர்களின் தனிமையின் குறியீடு.....


    ReplyDelete
  21. எதுவுமே சொல்ல முடியாத வார்த்தைகள் கொண்ட கவிதை!

    ReplyDelete
  22. அது அவலச்சொல் தான்.

    ReplyDelete
  23. ஆஹா! சொல்ல வார்த்தைகள் இல்லை, அவ்ளோ அருமையான வரிகள், சில வரிகள் கலங்க செய்தது. நல்லதொரு பதிவு.

    http://semmalai.blogspot.com/2012/09/semmalai.blogspot.com.html

    VIDEO GIF அனிமேஷன் உருவாக்குவது எப்படி?

    ReplyDelete
  24. இதுவும் புரியவில்லை. இதற்கு முன 2 தடவைகள் வந்து பர்த்தேன். என்ன எழுதுவது என்று புரியாமல் சென்றுவிட்டேன்..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  25. புதிதாய்த் தெரிந்து கொண்ட பதம், பொருள், விளக்கம்.

    ReplyDelete
  26. நெஞ்சை சுடும் வரிகள் .........
    அது ஒரு அவலத்தின்..
    அவர்களின் அழுகையின்....
    அவர்களின் வேதனையின்....
    அவர்களின் தனிமையின் குறியீடு.....
    அருமை நினைத்துபார்க்க மறுக்கும் பக்கம் ஒன்றை திறந்து விட்டுள்ளீர்கள்

    ReplyDelete
  27. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  28. //அது ஒரு அவலத்தின் குறியீடு//
    இந்த ஒரு வரி போதும்;எல்லாம் சொல்லி விடுகிறது.

    ReplyDelete
  29. மனதை உலுக்கி விட்டீர்கள் திரு ரமணி!
    எஸ்.ரா. வின் அரவாணிகள் பற்றிய கட்டுரை நினைவுக்கு வந்தது!

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  30. //அரவாணி அது ஒரு அவலத்தின்.. அவர்களின் அழுகையின்.... அவர்களின் வேதனையின்.... அவர்களின் தனிமையின் குறியீடு.....//

    தங்கள் பாணியில் மிகச்சிறப்பாக, அவர்களின் நிலைமையை மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete