Thursday, July 4, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (17 )

இரவு நான் வீடு வந்து சேர வெகு நேரம்
ஆகிவிட்டபடியால் மனைவி அதிகமாக எதுவும்
கேட்டுக் கொள்ளவில்லை

.காலையில் காபி குடிக்கும் வேளையில் கணேசன்
தன் மனைவியிடம் சொன்னதைப்போலவே
நல்லவிதமாகவும் நம்பிக்கையூட்டும்விதமாகவும்
பட்டும்படாமலும் சென்னை சென்று வந்த
விஷயம் குறித்து சொல்லிவைத்தேன்.

அவள் நம்பிய மாதிரியும் தெரியவில்லை
நம்பாதது மாதிரியும் தெரியவில்லை.

கடந்த ஒரு வாரமாக கணேசன் விஷயமாகவே
நினைத்துக் கொண்டிருந்ததாலும் அவன் சம்பந்தப்பட்ட
காரியங்களையே செய்து கொண்டிருந்ததாலும்
என் வீட்டிற்குரிய எந்தக்கடமையையும் செய்யாததன்
பாதிப்பு எனக்கே நன்றாகத் தெரிந்தது

நீர் ஊற்றாத பூச்செடிகள் ,மார்கெட் போகாததால்
காலியாகிக் கிடந்த பிரிட்ஜ்,இரண்டு வேளையும்
பஸ்ஸில் போய் வந்ததால் குழந்தைகள் முகத்தில்
கண்ட வாட்டம்,தனியாக அவ்வளவாக
இருந்து பழகாததால் மனைவி கொண்டிருந்த
மனவருத்தம் காட்டும் முகம் எல்லாம் என்னை
கொஞ்சம் சங்கடப்படுத்தியது

இந்த வாரத்தில் அனைத்தையும் சரிப்படுத்திவிடுவது
என்கிற முடிவுடன் அலுவலகம்  புறப்பட்டேன்

அலுவலகம் வந்ததும்தான் என் உயரதிகாரி அவர்
பென்ஷன் விசயமாக சென்னை அலுவலகத்தில்
விசாரித்து வரச் சொன்ன ஞாபகமே வந்தது
சட்டென என்ன பொய் சொல்வதெனத் தெரியவில்லை
அந்த செக்சன் கிளார்க் லீவு எனச் சொல்வதுதான்
சரியாக இருக்கும் என எண்ணிக் கொண்டு
நான் அவர் அறைக்குள் நுழைந்ததும்
அவரே சந்தோஷமாக
"ரொம்ப நன்றி ரமணிசார்.ஹெட் ஆபீஸில் இருந்து
ஃபார்மல் சேங்ஸன் லெட்டர் வந்துவிட்டது
அவ்வளவு வேலையிலும் இதையும் பார்த்து
வந்ததற்கு மிக்க நன்றி "என்றார்

எனக்கு என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை
"உங்கள் வேலையும் முக்கியமான வேலைதானே சார்"
என சமாளித்து என் அறைக்கு வந்தேன்

இதைப்போலவே கணேசன் நோயும் சரியாகிப்
போய்விடாதா தமிழ் சினிமாவில் சினிமா
முடிகிற வேலையில் ஏதோ ஒரு எஃஸ்ரே படத்தைத்
தூக்கிப்பிடித்து " ஓ மை காட் வாட் எ
மெடிகல் மிரேக்கிள்"
எனச் சொல்லி எல்லா நோயும் காணாமல்
போய்விட்டதைப்போல  சொல்வார்களே அதைப்போல
கணேசன் விஷயத்திலும் ஏதேனும் நடந்து விடாதா
எனக் கூட எனக்குள் ஒரு பேராசைகூட வந்தது

அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் அவனை
வீட்டில் சந்தித்துப் பேசிப்போகலாம் என நான்
நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அவன்
மூன்று நாள் தனக்கு முக்கியமான வேலை
இருப்பதாகவும் நானும் கொஞ்சம் ஃபிரீயாக
வீட்டு வேலை களையும் அலுவலக வேலை களையும்
பார்க்கும்படியும் அவனே போன் செய்தான்

வெள்ளிவரை அவனைப் பார்க்கவில்லையாயினும்
எனது அன்றாட நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும்
அவன் நினைவே வந்து கொண்டிருந்தது
இரவு தூக்கத்தில் கனவில் கூட ஏதோ ஒரு
விதத்தில் அவன் வந்து போய்க் கொண்டே இருந்தான்
வந்த விதம் எதுவும் மகிழ்வூட்டுவதாக
இல்லை என்றாலும் அவன் வருவது மட்டும்
தொடர்ந்து கொண்டுதான் இருந்தது

அவன் சனிக்கிழமை காலை போன் செய்தபடி
காலையிலேயே  வீட்டிற்கு வந்து விட்டான்.
முடிவெட்டி சேவிங் செய்து புது மாப்பிள்ளை போல
அருமையாக டிரஸ் செய்து வந்ததைப் பார்க்க
போன வாரம் பார்த்த கணேசனா என என்னாலேயே
நம்ப முடியவில்லை.நான்தான் சீக்காளியைப்
போலிருப்பதாக எனக்கே பட்டது

கொஞ்ச நேரம் என் மனைவியிடமும்
குழந்தைகளிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டு
என்னைப் பார்த்து  " கிளம்புடா  வெளியே
கொஞ்சம் அவசர வேலை இருக்கு " என்றான்

(தொடரும்

23 comments:

  1. தமிழ் சினிமாவில் வருவது போல நல்லது நடந்து விடக் கூடாதா என்று, உங்களைப் போலவே நினைக்கத் தோன்றியது...

    ReplyDelete
  2. ''.. " கிளம்புடா வெளியே
    கொஞ்சம் அவசர வேலை இருக்கு " என்றான்.
    என்னவாக இருக்கும்!.. ஆவலுடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

  3. வணக்கம்

    தமிழ்மணம் 3

    ஆற்றின் நடையாய் அளிக்கும் தொடா்கண்டேன்!
    காற்றின் மணமாய்க் கமழ்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. ஆஹா...

    மீண்டும் தொடருமா.. மறுபடியும் நிறைய எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  5. ஐயா! நல்ல, சாதகமான திடீர்த் திருப்பங்களை வேண்டுவார் மனம் எத்தகையது என நானறிவேன்.
    அனுபவத்தைக் கூறினேன்.
    இதே எதிர்பார்ப்புடன் நானும்...

    ம்.. நீங்கள் தொடருங்கள்...

    ReplyDelete
  6. நல்லதே நடக்கவேண்டும் என்ற
    எதிர்பார்ப்பு கூடுகிறது..!

    ReplyDelete
  7. //நான் அவர் அறைக்குள் நுழைந்ததும் அவரே சந்தோஷமாக "ரொம்ப நன்றி ரமணிசார்.ஹெட் ஆபீஸில் இருந்து ஃபார்மல் சேங்ஸன் லெட்டர் வந்துவிட்டது
    அவ்வளவு வேலையிலும் இதையும் பார்த்து
    வந்ததற்கு மிக்க நன்றி "என்றார்//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! நல்ல ஜோக். சிரித்தேன்.

    >>>>>

    ReplyDelete
  8. //இதைப்போலவே கணேசன் நோயும் சரியாகிப்
    போய்விடாதா தமிழ் சினிமாவில் சினிமா
    முடிகிற வேலையில் ஏதோ ஒரு எஃஸ்ரே படத்தைத் தூக்கிப்பிடித்து " ஓ மை காட் வாட் எ மெடிகல் மிரேக்கிள்"
    எனச் சொல்லி எல்லா நோயும் காணாமல் போய்விட்டதைப்போல சொல்வார்களே அதைப்போல
    கணேசன் விஷயத்திலும் ஏதேனும் நடந்து விடாதா
    எனக் கூட எனக்குள் ஒரு பேராசைகூட வந்தது//

    நியாயமான ஆசை தான்,. அதுபோலவே ஆச்சர்யங்கள் ஏதாவது ந்டக்கட்டும். நண்பர் பிழைக்கட்டும்.

    நல்லதே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடுகிறது..!

    ReplyDelete
  9. திருப்பங்கள் நிகழக்கூடாதா என்று எண்ண வைத்தது! எனக்கும்! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  10. தொடர்கின்றேன். ஆனால்.... திக் திக்ன்னு மனசு....

    ReplyDelete
  11. " கிளம்புடா வெளியே
    கொஞ்சம் அவசர வேலை இருக்கு " என்றான்//அடுத்து....

    ReplyDelete
  12. தொடர்கிறேன்.

    திகிலாயிருக்கு.

    ReplyDelete
  13. "புது மாப்பிள்ளை போல
    அருமையாக டிரஸ் செய்து வந்ததைப் பார்க்க"
    நோயும் மாறி மகிழ்சியான வாழ்க்கை வராதா என எங்கள் மனமும் ஏங்குகின்றது.

    ReplyDelete
  14. ஏதேனும் மிராக்கிள் நடந்து விடாதா என்று தான் எங்களுக்கும் தோன்றியது. தொடர்கிறேன்.

    ReplyDelete
  15. கனத்த நெஞ்சத்துடன் தொடர்கிறேன்

    ReplyDelete
  16. உங்களைப்போலவே நாங்களும் எதாவது மிராக்கில் நடக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  17. அவள் நம்பிய மாதிரியும் தெரியவில்லை
    நம்பாதது மாதிரியும் தெரியவில்லை.//உங்கள் நட்பின் ஆழம் தெரிந்திருந்துமா?

    ReplyDelete
  18. இதை படிக்கும் எல்லோருமே அந்த அதிசயம் நடக்க வேண்டும் என்றே எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  19. தொடர்கிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  20. தொடர்கிறேன் நானும்.....

    த.ம. 8

    ReplyDelete
  21. varukiren ayya..!
    thodarnthu...

    ReplyDelete

  22. இது கற்பனைக் கதை என்றால் மிராக்கிளை நடத்துவீர்கள்...!

    ReplyDelete