Tuesday, July 2, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (16 )

நாங்கள் எப்போது சென்னையில் இருந்து
திரும்ப வேண்டியிருக்கும் எனபது எங்களுக்கே
திட்டவட்டமாகத் தெரியாதாகையால் ஊர் திரும்ப
முன்பதிவு ஏதும் செய்யவில்லை.அது கூட
ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று

திருச்சிவரை டிக்கெட் எடுத்து ஸ்ரீரங்கம்
திருவானைக்காவல் கோவில்கள் போய் விட்டு
பின் மதுரை பஸ் பிடித்தோம்

முன்பெல்லாம இது போல் கோவில் குளங்கள்
போவதென்றால் அவ்வளவு விரும்பமாட்டான்
இப்போது அவனாகப் போகவேண்டும் என
விரும்புவது மட்டுமல்லாது
ஒவ்வொரு இடத்தையும்இதுதான் கடைசி முறையாகப்
பார்ப்பது போலப் பார்ப்பதையும்
பழகுபவர்கள் பேசுபவர்கள் எல்லோரிடத்தும்
இனிமேல் பார்க்கப் போவதில்லை பேசப்போவதில்லை
இதுதான் கடைசி என்பதுபோல் பேசுவதும்தான்
என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை

இரவு பத்து மணி அளவில் வீடு வந்து சேர்ந்ததும்
குழந்தைகள் இருவரும் ஓடிவந்து அப்பாவை
வாசலிலேயே கட்டி அணைத்துக்  கொண்டார்கள்
அவனுடைய மனைவி இருவரின் பையையும்
வாங்கி உள்ளே வைத்து நாங்கள் சேரில்
அமர்ந்ததும் எங்கள் கீழ் நாங்களாக என்ன என்ன
நடந்தது எனச் சொல்லட்டும் என்பது போல
அருகில் அமர்ந்து கொண்டார்.

ஏற்கெனவே தொலைபேசியில்
பயப்படும்படியாக ஏதும் இல்லை ஆரம்ப நிலைதான்
என்பதால் சுலபமாக குணப்படுத்துவிடமுடியும் என
டாக்டர் சொல்லியதாகச் சொல்லி இருந்ததால்
அவர் மனைவியிடம் அவ்வளவு பதட்டமில்லை

நானாக ஆரம்பித்தால் எதுவும் உளறிவிட
சந்தர்ப்பமுண்டு என்வே அவன்முதலில்
ஆரம்பிக்கட்டும்அவன் சொல்வதற்கு ஏற்றபடி
பேசிவிடலாம் என நானும்காத்திருந்தேன்.

அவனுக்கும் சட்டென மனைவியின் குழந்தைகளின்
முகத்தைப் பார்த்ததும் எப்படி ஆரம்பிப்பது என
குழப்பமைடைந்தானோ என்னவோ
"நல்லவேளை உடனே சென்னை போனது
நல்லதாகப் போயிற்று,இன்னும் இரண்டு மூன்று
மாதம் தாமதித்துப் போயிருந்தால் கொஞ்சம்
கஷ்டப்படவேண்டியிருக்கும்,
அதைப்பற்றியெல்லாம் காலையில் விரிவாகப்
 பேசிக் கொள்ளலாம்முதலில் அந்த சூட்கேஸை எடு "
எனச் சொல்லிஅதனுள் இருந்த மனைவிக்கு
வாங்கிய சேலையும் குழந்தைகளுக்கு  வாங்கிய
 டிரஸ்ஸையும்வெளியே எடுத்தான்

அதனைக் கண்ட அவனது மனைவியும்
குழந்தைகளும்ஏதோ காணாத அதிசயத்தைக்
கண்டதைப்போலஆச்சரியப்பட்டு
முழு வாயைத் திறந்து" வாவ் "எனக் குரல் எழுப்ப
அது எனக்கு மிகுந்த ஆச்சரியமாகஇருந்தது.

மேலும் அவர் மனைவி
 "உங்களுக்கு என்னங்க ஆச்சு"\எனக் கேட்டது
என் ஆச்சரியத்தைஇன்னும் அதிகப்படுத்தியது

"என்னடா ஒரு டிரஸ்ஸுக்கு இப்படி அதிகமா
 பில்டப்தர்றாங்க.நீ எங்கேயும் போனா எதுவும்
வாங்கி வரமாட்டாயா"என்றேன்
 பொறுக்கமாட்டாமல்

அவன் பதிலேதும் பேசாது இருக்க அவர் மனைவியே
தொடர்ந்தார்

"என்னங்க  அண்ணே அடையாரிலே ஆலமரம்தானே
இருக்குன்னு சொல்வாங்க,போதி மரம் கூட இருக்கா "
என்றார்

எனக்கு எதற்கு இப்படி கேட்கிறார் எனப் புரியவில்லை

பின் அவரே தொடர்ந்தார்."நான் சிறுவயதில் இருந்து
அம்மனுக்கு விரதம் இருந்து தீச்சட்டியெல்லாம்
 எடுப்பேன்எனக்கு அந்த சிவப்பு பாவாடை
 சட்டை தாவணி சேலைஎன்றால் ரொம்ப இஷ்டம்
.கல்யாணம் ஆகி இரண்டுசேலை கூட கொண்டு வந்தேன்.
ஒரு ஆடி வெள்ளிக் கிழமை அந்த சேலையைக் கட்டி
இவரோடு அம்மன் கோவிலுக்கு நான் கிளம்ப இவருக்கு
வந்ததே கோபம்,ஏதோ ராக்கம்மா மூக்கம்மா மாதிரி
பட்டிக்காட்டுக்காரி மாதிரி இருக்குன்ன்னு ஒரே கத்தல்
எங்க அப்பா கூட பயந்து போய் அந்த ரெண்டு
சேலையைக் கூட ஊருக்கே தூக்கிட்டுப்போயிட்டாரு
இப்ப என்னன்னா அவரே அந்த சேலையை வாங்கி
வந்திருந்தா ஆச்சரியமா இருக்காதா ?

இந்தப் பையனும் மூணு தீபாவளிக்கு ஜீன்ஸ் கேட்டு
அலுத்துப் போனான்,அதெல்லாம் காலேஜ் போறப்ப
பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு

பொண்ணுக்கும் அப்படித்தான் இந்த மாடர்ன்
 டிரஸ்செல்லாம்இப்பவே வேண்டாம் பழகிட்டா
அப்படியே போயிரும்அவளுக்கு வாய்க்கிறவன்
 அதையெல்லாம் விரும்பாதவனா
இருந்தா அதுவே பிரச்சனையாயிடும்னு சொல்லி
இதுவரை வாங்கித் தரவே இல்லை

இப்ப என்னடான்னா அப்படியே தலைகிழா
 மாறினவராட்டம்இப்படி வாங்கிவந்தால்
ஆச்சரியமா இருக்காதா
நீங்களே சொல்லுங்கள் "என்றார்

ஒரு சோகமான சூழலாக  இல்லாமல்
சட்டென இந்த டிரஸ் விஷயத்தால் ஒருசுமுகமான
சூழல் உருவானதால்  நானும் இயல்பு நிலைக்கு வர
ஏதுவாக இருந்தது

நாளை பார்ப்போம் எனச் சொல்லி அவர்களிடம்
விடைபெற்றுக் கொண்டு எனது
வீட்டிற்குப் புறப்பட்டேன்

டிரஸ் விஷயத்தில் மட்டுமல்ல
 அனைத்து விஷயத்திலும்
அவன் தீர்மானமான முடிவோடு இருப்பது
போகப் போகத்தான் புரிந்தது

(தொடரும் )

30 comments:

  1. எமனோடு விளையாடிக் கொண்டிருக்கும் நண்பரின் உறுதி வியக்க வைக்கிறது. மரணத்தை வெல்ல முடியாது போனாலும் இந்த தைரியம் மரணத்தை ஏற்றுக் கொள்ளும் சக்தியைக் கொடுத்திருப்பது ஆச்சர்யம்தான்.அவரது தீர்மானங்களை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்

    ReplyDelete
  2. தலைகீழான மாற்றம் என்றாலும் மனதை வருந்தச் செய்கிறது...

    ReplyDelete
  3. எதிர்பாராதவையெல்லாம் வாழ்வில் நடப்பதுண்டு தான்.
    அவைகளைத் தாங்கித் தான் ஆக வேண்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. மனதை தேற்றிக்கொண்டு எல்லாரையும் சந்தோசப்படுத்தனும்ன்னு நினைச்சுட்டார் போல!? ஆனா, அது மேலும் துக்கத்தைதானே தரும்ன்னு தெரிஞ்சுக்கனும்

    ReplyDelete
  5. சம்பவங்கள் மிக அழகாகவும் மெதுவாகவும் சுவையாகவும் நகர்த்தப்படுகின்றன.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    சந்தோஷங்கள் மேலும் சில பகுதிகளிலாவது தொடரட்டும்.

    ReplyDelete
  6. பழகுபவர்கள் பேசுபவர்கள் எல்லோரிடத்தும்
    இனிமேல் பார்க்கப் போவதில்லை பேசப்போவதில்லை//என்பதை உணர்ந்தே பிரிதல் கொடுமை.

    ReplyDelete
  7. இப்படிச் செய்வதே அவரைக் காட்டிக் கொடுத்துவிடுமே!

    ReplyDelete

  8. வணக்கம்!

    மனத்தைப் பிழியும் வரிகளால் மிக்க
    கனத்தைக் கொடுக்கும் கதை!

    தமிழ்மணம் 5

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  9. நம்பிக்கையை மென்மேலும் வளரவிட்டு நசிப்பது பெருந்துரோகம். நண்பரைப் பொறுத்தவரையில் அது தன் குடும்பத்துக்கு செய்யும் நன்மையாக இருந்தாலும் அவருக்குப்பின்னர் அவர்களது துயரை எந்தவகையில் போக்கமுடியும்? கண்ணீர் கசிகிறது.

    ReplyDelete
  10. "என்னங்க அண்ணே அடையாரிலே ஆலமரம்தானே
    இருக்குன்னு சொல்வாங்க,போதி மரம் கூட இருக்கா "
    என்றார்//

    நல்லா ஜாலி டைப்பு போல....!

    மனசுக்கு கவலையாகவே இருக்கு.

    ReplyDelete
  11. மாற்றம் நன்றாக இருந்தாலும் காரணம் தெரிந்ததால் மனதில் அழுத்தம். தொடர்கிறேன்...

    ReplyDelete
  12. //மேலும் அவர் மனைவி
    "உங்களுக்கு என்னங்க ஆச்சு"\எனக் கேட்டது
    என் ஆச்சரியத்தைஇன்னும் அதிகப்படுத்தியது



    "என்னங்க அண்ணே அடையாரிலே ஆலமரம்தானே
    இருக்குன்னு சொல்வாங்க,போதி மரம் கூட இருக்கா "
    என்றார்//

    சாகப்போகிறோம் இதுவரை குடும்பத்தின் ஆசைகளை நிறைவேற்ற வில்லை இனி சந்தர்ப்பம் கிடைக்காது, அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவரை பொறுத்தவரை சரிதான். ஆனால் அவர் மறைவுக்கு பின் அந்த மனுசனுக்கு தெரிந்து இருக்கு அதனால் தான் போகும் போது நம் ஆசைகளை நிறைவேற்றி இருக்கிறார் என்று மனைவி, குழந்தைகள் காலமெல்லாம் நிணைத்து வருந்துவார்களே!
    என் சகோதரிக்கு தன் மரணம் தெரிந்தவுடன் என் அப்பாவழி, அம்மாவழி உறவினர்கள், எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் எல்லோரும் வந்து பார்த்து சென்றார்கள். எல்லோறையும் இறைவன் பாடல்களை பாட சொல்லி கேட்டார்கள் வயது 25 தான் ஆனால் பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடந்த போது இருந்த மனபலம்.
    உங்கள் பதிவு என் சகோதரியின் நினைவுகளை கொண்டு வந்து விட்டது.
    இறைவா! யாருக்கும் இந்த நிலையை கொடுக்காதே! என்று கேட்க தோன்றுகிறது.




    ReplyDelete
  13. உங்கள் நண்பரின் நிலையில் இருந்து பார்ததால் அவர் செய்வது சரியாகவே படுகிறது. ஆனால் ரஞ்சனிம்மா சொன்னது போல அதுவே அவரை காட்டிக் கொடுத்து விடாதா என்ன? பிறகு எப்போதுதான் தன் குடும்பத்தினரிடம் சொன்னார்? தொடர்கிறேன்...!

    ReplyDelete
  14. நிகழ்வுகளை மிக அழகாக தொகுத்துள்ளீர்கள்...

    ReplyDelete
  15. நேர் மாறான மாற்றம்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  16. வாழ்க்கையில் எமக்கு எதிரி என்று யாருமே இருக்கக்கூடாது.
    ஒருவேளை அப்படி இருந்திட்டால்... இருந்திட்டால்.. அந்த எதிரிக்குக்கூட இத்தகைய துன்பம் நிகழக்கூடாது.

    வலிகளுடன் தொடர்கிறேன்...

    ReplyDelete
  17. படிக்க படிக்க தொண்டையை அடைத்துக்கொண்டு வருகிறது...

    ReplyDelete
  18. ஒரு மன மாற்றம் என்பது எங்கும் நிகழலாம், ஆனால் நிறைய சமயங்களில் அது மரணம் கண்டு பயபடுதலால் நடக்கிறது. அடுத்த பதிவில் அவர் எப்படி அந்த விஷயத்தை சொல்ல போகிறார் என தெரிந்து கொள்ள இப்போவே ஆர்வம் ஏற்படுத்தும் நடை.....நன்றி சார் !

    ReplyDelete
  19. நாம் நாமாக இல்லாமல், இப்படி எதாவது செஞ்சுட்டால் என்ன ஆச்சுன்னு கேட்கத்தானே தோணும் இல்லையா?

    ReplyDelete
  20. மாற்றம் அவர்களிடத்தே ஏமாற்றம் தராமல் இருக்க வேண்டுமே! தொடர்கிறேன்!

    ReplyDelete
  21. தொடருகிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  22. மாற்றம் திடீரென்று பெய்யும் மழை போல.

    ReplyDelete
  23. மேலும் மேலும் மனதை கனக்க வைக்கிறது நீங்கள் தொடர்ந்து எழுதும் சம்பவங்கள்!

    ReplyDelete
  24. மனதை கனக்க வைக்கிறது. அவரின் மாற்றங்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
  25. "என்னங்க அண்ணே அடையாரிலே ஆலமரம்தானே
    இருக்குன்னு சொல்வாங்க,போதி மரம் கூட இருக்கா "
    என்றார்//
    அய்யோ பாவம்....... மனதை வருத்துகின்றது.

    ReplyDelete

  26. எனக்கு தமிழ் சீரியல் ( பார்ப்பது போலல்ல) படிப்பது போல் இருக்கிறது. வை.கோ சொல்வதுபோல் ஒரு சில பதிவுகளிலாவது சந்தோஷம் தலை காட்டட்டும்.

    ReplyDelete