Saturday, April 12, 2014

ஐந்தாண்டுத் திருவிழா

எப்படிக் கூர்ந்து நோக்கினும்
பூசாரிகளின் தீபஒளி இன்றி
கண்ணுக்குப் புலப்படா
அதியற்புதத் தெய்வங்கள் எல்லாம்
இருளடைந்த  சன்னதி தாண்டி
கொடிமரம் தாண்டி
நந்தி தாண்டி
பக்தனின் அருள்வேண்டி
பவனி வரும்
அபூர்வத் திருவிழா

அர்ச்சனை செய்தும் பால்குடமெடுத்தும்
இரத்தம் வழிய அலகுக் குத்தி
குறைகளைக் கொட்டித் தீர்த்தும்
கண்ணிருந்தும் குருடாய்
காதிருந்தும் செவிடாய்
காட்சிப்பொருளாய் இருந்த
கருவறைக் கடவுள்கள் எல்லாம்
பக்தனுக்குள்ள குறைகளையெல்லாம்
பக்கம் பக்கமாய்ப் படித்துச் சொல்லி
வீதிவலம் வரும்
வித்தியாசமான திருவிழா

ஓராண்டு மிக நன்றாய்
உண்டு களிக்கவும்
புணர்ந்து சுகிக்கவும்
மண்டல விரதம் பூணும்
சக்தி இழந்த போலிப் பக்தனாய்
ஐந்தாண்டு உல்லாசமாய்
உலகு சுற்றவும்
உன்னதங்களைச் சுகிக்கவும்
பஞ்சைப் பராரிபோல்
பகல் வேஷதாரிகள்
நகர்வலம் வரும்
நயவஞ்சகத் திருவிழா

சுருட்டியதைத்தானே கொடுக்கிறான்
வாங்கிக் கொள்வோம் எனவும்
விதைக்கத்தானே செய்கிறோம்
அறுவடை செய்து கொள்வோம் எனவும்
பரஸ்பரப் புரிதலில்
ஒருவரை ஒருவர் ஏமாற்றி
களிப்பு மிகக் கொள்ள
ஜனநாயகக் கடமையாற்றுவதாய்
நடித்து மகிழ்ச்சிக்  கொள்ள
அரசாங்கமே பொறுப்பேற்று நடத்தும்
அதி அற்புதப் பெருவிழா
இந்த
ஐந்தாண்டுத் திருவிழா

28 comments:

  1. /// ஜனநாயகக் கடமையாற்றுவதாய்
    நடித்து மகிழ்ச்சி கொள்ள ///

    சரி தான்...

    ReplyDelete
  2. முடவர்களும் நடக்கும் திருவிழா மட்டுமல்ல ,அடக்கமானவனும் கலந்து கொள்ளும் திருவிழா !
    த ம 3

    ReplyDelete
  3. நான் ஏதோ தேர்திருவிழாவைப் பற்றி தான் எழுதி இருக்கிறீர்கள் என்று நினைத்தேன் இரமணி ஐயா.

    இந்தத் திருவிழாவில் சாமிகள் அல்லவா மக்களிடம் வரம் கேட்கின்றன..!!



    ReplyDelete
  4. வித்தியாசமானதொரு திருவிழா தான் மிகவும் ரசித்துப் படித்தேன் ரமணி ஐயா .வாழ்த்துக்கள் மென்மேலும் ஆக்கங்கள் தொடரட்டும் .

    ReplyDelete

  5. வணக்கம்!

    தோ்தல் திருவிழா! திக்கற்ற மக்களின்
    போ்சொல் திருவிழா! பேற்றினை - ஊா்பெறும்
    என்றெண்ணி ஏமாற்றும் வஞ்சத் திருவிழா!
    நின்றெண்ணி ஏங்குமென் நெஞ்சு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  6. சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  7. அழகாகச் சொன்னீர்கள் அன்பரே. இங்கு தன்னைப் புரிந்துகொண்டவர்கள் விற்பனையாளராகிரார்கள். தன்னை தன் வலிமையைப் புரிந்துகொள்ளாதவர்கள் விற்பனைப் பொருளாகிறார்கள். குடிமக்கள் என்றுமே விற்பனைப் பொருள்கள் தான். ஏனென்றால் நமது தேசிய வியாதி மறதி அல்லவா!

    ReplyDelete
  8. அதி அற்புதப் பெருவிழா
    இந்த
    ஐந்தாண்டுத் திருவிழா வித்தியாசமான திருவிழா

    ReplyDelete
  9. பரஸ்பரப் புரிதல்! கடுமையான சாட்டை வரிகள்!

    எவ்வளவு சொடுக்கினாலும் வலிக்காது இந்த மற(ந்)த்துபோன மனங்களுக்கு!

    ஆதங்கத்தை அனலாய்க் கக்கும் கவி வரிகளுக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  10. எங்க ஊர்ல ரொம்ப நாளா மழையே இல்ல. இந்த ஐந்தாண்டு திருவிழாவைக் கொண்டாடினால் சாமி கண்ண தொறந்து மழையைக் கொட்டுமா?

    ReplyDelete
  11. ஜனநாயகக் கடமையாற்றுவதாய்
    நடித்து மகிழ்ச்சிக் கொள்ள
    அரசாங்கமே பொறுப்பேற்று நடத்தும்
    அதி அற்புதப் பெருவிழா
    இந்த
    ஐந்தாண்டுத் திருவிழா//

    அற்புதம்! நம் எல்லோரது வருத்தாமும், புலம்பலும் அழகான கவிதை வரிகளாய் வெளிப்படுதியுள்ளீர்கள்! ம்ம்ம்ம் அடுத்த ஐந்தாண்டுத் திருவிழாவுக்கு நாமும் தயாராகிக்கொண்டுதானே இருக்கின்றோம்! என்னென்ன ஊழல் நடக்கப் போகிறதோ!

    ReplyDelete
  12. அரசியல்வாதிகளின் ஆர்பாட்டத் திருவிழா

    ReplyDelete
  13. இப்படி ஒரு சாட்டையடி வரிகள் நான் நினைச்சுக்கூட பார்க்கலை ரமணி சார்...

    சரியான நெத்தியடி.... இந்த வரிகளை அரசியல்வாதிகள் படித்து கூனிக்குறுக வேண்டும்..

    இதை விட அசிங்கமும் அவமானத்தையும் நாங்கள் துடைத்தெறிந்தவர்கள் என்பவரின் முகத்திரையை நல்லாவே கிழிச்சிருக்கீங்க.

    சுப்பர்ப் ரமணி சார்...

    த.ம. 11

    ReplyDelete
  14. ஐந்தாண்டுக்கொரு முறை நடக்கும் கூத்தை அட்டகாசமாய் கவி பாடி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ''..அரசாங்கமே பொறுப்பேற்று நடத்தும்
    அதி அற்புதப் பெருவிழா..''
    mmm.....
    Vetha.Elanagthilakam.

    ReplyDelete
  16. நீங்கள் எவ்வளவு சொன்னாலும், உலகிலேயே மிகப்பெரிய குடியரசின் தேர்தல் தருவிழா, அமெரிக்க ஐக்கிய நாட்டினாலேயே பிரதியெடுக்க முடியாத தகுதி உடையது என்பதை நேரில் கண்டிருக்கிறேன் . ஆனால் இன்னும் நிறைய செய்ய. வேண்டியிருக்கிறது .

    ReplyDelete
  17. நீங்கள் எவ்வளவு சொன்னாலும், உலகிலேயே மிகப்பெரிய குடியரசின் தேர்தல் தருவிழா, அமெரிக்க ஐக்கிய நாட்டினாலேயே பிரதியெடுக்க முடியாத தகுதி உடையது என்பதை நேரில் கண்டிருக்கிறேன் . ஆனால் இன்னும் நிறைய செய்ய. வேண்டியிருக்கிறது .

    ReplyDelete
  18. உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. பலனிருக்கிறதோ இல்லையோ தவிர்க்கமுடியாதது தேர்தல் திருவிழா. அதனை சிறப்பாக உணர்த்துகிறது உங்கள் கவிதை.

    ReplyDelete
  20. தேர்தல் திருவிழா குறித்த தங்களின் கவிதை அருமை! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  21. தேர்தல் திருவிழா....மிக அருமை ஐயா.

    ReplyDelete

  22. எத்தனை அழகாய்
    இத்தனை பெரிய
    தேர்தல் திருவிழா

    ReplyDelete
  23. இன்னும் கொஞ்ச நாளில் அடுத்த (சட்டமன்ற) தேர்தல் வந்துவிடும். நிலைமை அப்போதும் கவிஞர் சொன்னது போலவே இருக்கும்.

    கவிஞருக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


    ReplyDelete
  24. ஆமாம். இந்த திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து கொண்டிருக்கிறோம் நாம். மிக அருமையாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  25. திருவிழாக் கூட்டம்.... சரியான பார்வை!

    ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஏமாற்றுகிறார்கள். ஏமாறுகிறோம்!

    ReplyDelete