Tuesday, November 18, 2014

அத்தைப் பெத்த அழகுப் பொண்ணே தங்க ரத்தினமே

அத்தைப் பெத்த அழகுப் பொண்ணே
தங்க ரத்தினமே-என்
மொத்த மனசும் சுருட்டிப் போகும்
சொத்துப் பத்திரமே-என்
சித்த மெல்லாம் கலங்கிக் கிடக்கு
கொஞ்சம் கிட்டவா-நாம
செத்த நேரம்  நெருங்கி இருப்போம்
பக்கம் ஒட்டிவா

வித்தை நூறு கத்து வச்சு
ஆசை மச்சானே-என்னை
இச்சைக் கூட்டி மடக்க நினைக்கும்
அன்பு மச்சானே-நான்
பச்சைப் புள்ள இல்ல எந்தன்
அருமை மச்சானே-கொஞ்சம்
எட்டி நின்னே விவரம் சொல்லு
புரியும் மச்சானே

சினிமா நூறு பாத்தும் உனக்கு
விவர மில்லையா-தினமும்
தனியாய்த் தவிக்கும் மாமன் மனசு
புரிய வில்லையா
பனிபோல் லேசா பட்டுப் போனா
மனசு குளிருமே-அந்த
இனிய சுகத்தில் கொஞ்ச காலம்
வண்டி ஓடுமே

பஞ்சு கிட்ட வத்தி வச்சா
பத்திகிடும் மச்சான்-சுகம்
இஞ்சி அளவு கண்டா கூட
புத்திகெடும் மச்சான்-ஒரு
மஞ்சக் கயிறு மட்டும் கழுத்தில்
ஏறட்டும் மச்சான்-பின்னே
எந்தப் பொழுதும் உந்தன் மடிதான்
என்னிருப்பு மச்சான்

14 comments:

  1. விவரமான புள்ளதான் :)
    த ம 1

    ReplyDelete
  2. கிராமத்து வீதியிலே அத்தை மகளை கேலி செய்த நினைவலைகள் வந்து விட்டது.

    ReplyDelete
  3. என்னங்க திடீர்னு அத்தை பொண்ணு மேல கவனம் திரும்பிடிச்சு? எதுக்கும் ஜாக்கிரதை யாக இருங்க ! சனிப்பெயர்ச்சி வேற!

    ReplyDelete

  4. வணக்கம்!

    உடல் நலம் நன்றாக இருக்கிறதா?
    மேலும் நலம்பெற
    இறையைத் தொழுகின்றோம்!

    அத்தை பெத்த அழகுப் பொண்ணு
    அசத்தும் பாட்டுப்பார்! - மலா்க்
    கத்தை கமழும் கருத்தைக் கவரும்
    காமன் கூட்டுப்பார்! - காதல்
    வித்தை காட்டும் விந்தைச் சொற்கள்
    வீரம் மூட்டும்பார்! - பசும்
    தத்தை யாகத் தமிழைப் பாடி
    அமுதை ஊட்டும்பார்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  5. குளிர்காலம் இப்போதே ஆரம்பித்து விட்டதே...! ஹா... ஹா...

    ReplyDelete
  6. ஆஹா! ரமணி சார்! சூப்பர் ரொம்பவே ரசித்தோம்....

    ReplyDelete
  7. உறவுகளில் காதல் திருமணம் என்பதெல்லாம் மாறிவரும் காலமிது. உறவுகளில் திருமணம் என்பது
    /சொத்துப் பத்திரமே/ என்பதற்குத்தானோ.? பாடல் அருமை. கருத்தில்தான் மாற்று சிந்தனை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ரசித்தேன் ஐயா. தம. 5

    ReplyDelete
  9. அசத்தும் கிராமத்து மண் வாசனை . மிக மிக அருமையாக வந்திருக்கிறது உரை. பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  10. இயல்பான கிராமத்து நடையில் அழகான கவிதை.

    த.ம. +1

    ReplyDelete
  11. காதல் மழையில் நனையும் உணர்வைக் கவிதை மழையாய்ப் பொழிந்தன கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  12. ரசிக்க வைத்த கிராமிய கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. தங்க ரத்தினம் தான் தங்களின் கவிதை இரமணி ஐயா.

    ReplyDelete
  14. அழகிய கவிதை ரமணி சார்!

    கவிதையை வாசிக்கையில் என்.எஸ். கிருஷ்ணனும் மதுரமும் ஞாபகத்துக்கு வருகிறார்கள் :)

    ReplyDelete