Friday, November 28, 2014

இதுவும் அதுவும் ஒன்னு தானே

ரோடெல்லாம்
துறுப்பிடித்த ஆனிகளைப்
பரப்புவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு

"ஜாக்கிரதையாக வண்டியோட்டுங்கள்
பாதையெல்லாம் துறுப்பிடித்த ஆனி "என
எச்சரிக்கைப் பலகை வைக்கும்
காவலர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?

ஊரெல்லாம்
மதுபானக் கடைகளைத் திறந்து
வைத்துவிட்டு

"குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு " என
எச்சரிக்கைப் பலகை வைத்து
பம்மாத்துக் காட்டும் அரசுக்கும்
இதற்கும் என்ன வேறுபாடாம் ?

குழந்தை தவழுமிடமெல்லாம்
விஷப்பாட்டில்களை திறந்து வைத்துவிட்டு
பாலையும் பிஸ்கெட்டையும்
எட்டத்தில் வைக்கிற தாயை
நீங்கள் பார்த்ததுண்டா ?

சந்து பொந்தெல்லாம்
சிகரெட்டும் குட்காவும்
கிடைக்கும்படியாக இருக்கவிட்டு

கல்வியையும் நீரையும்
விற்பனைக்கு என ஆக்கிவிட்டு
விட்டெத்தியாகத் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன மாறுபாடாம் ?

கரும் பலகையெல்லாம்
ஆபாசப் படங்களை
வரைந்து வைத்துவிட்டு

அதனைப் பார்த்துக்
கெட்டுப் போகாதே என எச்சரிக்கிற ஆசிரியரை
நீங்கள் சந்தித்ததுண்டா ?

ஊடகங்களிலெல்லாம்
ஆபாசங்கள் தலைவிரித்தாடுதலை
அனுமதித்து விட்டு

மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி
அறிவுறுத்தித் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன வித்தியாசமாம் ?

எது என்ன நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும் என
போதையில் வீதியில் கிடக்கும்
மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா ?

நாட்டில் எது நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும்
நாம் நம்மைக் காத்துக் கொள்வோம் என
சுயநலப் போதையில் திரியும்
பலருக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடாம் ?

13 comments:

  1. ஆஹா அருமையான ஒப்பினை கவிஞரே...
    நாடு ஏதும் சொல்லிவிட்டு போகட்டும் சுயஅறிவு கொண்டு நம்மை நாமே காத்துக்கொள்வோம் அருமையான பதிவு
    த.ம.2

    ReplyDelete
  2. ஆம் இதுவும் அதுவும் ஒன்னு தான் ஐயா.
    நல்லா நறுக்குன்னு சொன்னீங்க...
    தம 3

    ReplyDelete
  3. ///சுயநலப் போதையில் திரியும்
    பலருக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடாம் ?///
    உண்மைதான் ஐயா
    வேறுபாடு ஒன்றும் இல்லைதான்

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா

    தற்கால மனிதனுக்கு ஏற்ற வகையில் கருத்தாக சொல்லிய விதம் நன்றாக உள்ளது.த.ம5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. இவை இங்குதான் நடக்கும். அனைத்து எதிர்மறைச் செய்திகளும் எவ்வளவு விரைவில் மனதில் பதிகின்றன என்பதைச் சுட்டியுள்ள விதம் அருமை. தங்களின் வேதனையையும் பதிவில் அறியமுடிந்தது.

    ReplyDelete
  6. மாறுவது, மாற்றுவது சிரமம் தான்...

    ReplyDelete
  7. எல்லாமே வியாபார உத்தி......

    ReplyDelete
  8. செமத்தியாக அடிச்சிடீங்க..

    ReplyDelete
  9. பொறிபறக்கிறது கவிதையில்! திருந்த வேண்டியவர்கள் திருந்துவார்களா?

    ReplyDelete
  10. நாட்டு நடப்பை நன்றாகவே விமர்சனம் செய்தீர்கள். எங்கள் தங்கம் திரைப் படத்தில் “தமிழ்நாடு நல்ல தமிழ்நாடு” என்று எம்.ஜி.ஆர் கதாகாலேட்சபம், செய்யும் காட்சி நினைவுக்கு வந்தது.
    த.ம.8

    ReplyDelete
  11. நல்லவை எங்கும் பரவினால் அல்லவை தானாக மறையும்.
    நல்லவை பெருக வாழ்த்துவோம்.
    கவிதை நன்று.

    ReplyDelete

  12. புத்தியுள்ளவன் அரசாங்கம் என்ன செய்தாலும் என்ன சொன்னாலும் தமக்கு எது நல்லதோ அதை செய்து கொண்டே போவான். உதாரணமாக

    ஊரெல்லாம்
    மதுபானக் கடைகளைத் திறந்து
    வைத்தாலும் புத்தியுள்ள நீங்கள் அங்கு செல்வதுண்டா என்ன?

    அருமையான பகிர்வு. இப்படி எல்லாம் சிந்தித்து அழகாக எழுத உங்களால் மட்டுமே முடியும்

    ReplyDelete