Thursday, November 27, 2014

நதி மூலம் ரிஷி மூலம் ......

ஹோட்டலில் உணவை இரசித்து
உண்ணும் ஆசை இருக்கிறதா ?
தயவு செய்து  சமயலறையை
எட்டிப் பார்க்காதிருங்கள்
அதுதான் சாலச் சிறந்தது

ஒரு சிற் பத்தின் அற்புதத்தை
இரசித்து வியக்க ஆசை இருக்கிறதா ?
அதற்குச் சிற்பம் செதுக்குமிடம்
ஏற்ற இடமில்லை
கலைக் கூடமே சரியான இடம்

பெருக்கெடுத்தோடும் ஆற்றின்
அழகை இரசித்து மகிழ ஆசையா ?
அதற்கு உற்பத்தி ஸ்தானம்
சரிப்பட்டு வராது
விரிந்தோடும் மையப் பகுதியே அழகு

குழந்தையின் அழகை மென்மையை
தொட்டு ரசிக்க ஆசையா ?
அதற்குப் பிரசவ ஆஸ்பத்திரி
சரியான இடமில்லை
அது தவழத்துவங்குமிடமே மிகச் சரி

கவிதையின் பூரணச் செறிவை
ருசித்து மகிழ ஆசையா ?
அதற்கு கவிஞனின் அருகாமை
நிச்சயம் உசித மானதில்லை
தனிமையே அதற்கு யதாஸ்தானம்

நதி மூலம் ரிஷி மூலம் மட்டுமல்ல
எந்த மூலமுமே அழகானதுமில்லை
கற்பனை செய்தபடி நிஜமானதுமில்லை
அதனை அறிந்து தெளிந்தவனுக்கு
ஏமாற்றம் நேர்வதற்கு வாய்ப்பே இல்லை

( மனம் கவர்ந்த ஒரு படைப்பாளியை
நேரடியாகச் சந்திக்க விளைந்த ஏமாற்றம்
தந்த  சிந்தனை )

17 comments:

  1. சிந்தனைகள் அனைத்துமே வைரமாக ஜொலிக்கிறது கவிஞரே....
    தலைப்பு பொருத்தமானதே...
    த.ம.2

    ReplyDelete
  2. ஏமாற்றத்தினால் வந்த கவிதை என்றாலும் என்னை ஏமாற்றவில்லை ,ரசிக்க வைத்தது !
    த ம 3

    ReplyDelete
  3. இதுபோன்ற சிந்தனை உங்களால் மட்டுமே சாசாத்தியம்

    ReplyDelete
  4. ''..மனம் கவர்ந்த ஒரு படைப்பாளியை
    நேரடியாகச் சந்திக்க விளைந்த ஏமாற்றம்
    தந்த சிந்தனை ..'' எதையும் ரசிப்பதோடு நின்று விடவேண்டும்.
    அதைத் தோண்டப் போனால் இது தான்....
    Vetha.Langathilakam.

    ReplyDelete
  5. கவிதை சொல்லும் உண்மைகள் அற்புதம்.

    ReplyDelete
  6. மூலம் எப்பொழுதுமே சிரமம்தான்! (நோயையும் சேர்த்துச் சொல்கிறேன்!!)

    அது சரி ஏமாற்றம் தந்த அந்த கிசுகிசு படைப்பாளி யார்... என் காதில் மட்டும் சொல்லுங்களேன்! :))))))))))

    ReplyDelete
  7. நன்றாகவே சொன்னீர்கள். இன்னும் சேற்றில் மலர்ந்த செந்தாமரை, வாசனை தரும் புனுகு – என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
    த.ம.8

    ReplyDelete
  8. எளிமையான வரிகளில் நல்ல கருத்துக்கள். நாம் நினைக்கும்படி அல்லது எதிர்பார்த்தபடி நதிமூலம் ரிஷிமூலம் அமைவதுமில்லை.

    ReplyDelete
  9. ரசனை ஒன்றுதான் சிறந்தது. மூலம் அறியப் புறப்பட்டால் பல நேரங்களில் நாரிப் போய் ஏமாற்றத்தைத்தான் தருகின்றது. அருமையான கவிதை.

    ReplyDelete
  10. நதிமூலம் ரிஷிமூலம் குறித்த தெள்ளத்தெளிவான விளக்கம். அற்புதமான சிந்தனை வித்து தாங்கள்.

    ReplyDelete
  11. நல்ல சிந்தனை கவிதயாயிருக்கிறது.
    ஏமாற்றம் தந்த சீரான கவிதைப் போற்றும்படி உள்ளது.
    வாழ்த்துகள் அய்யா!

    ReplyDelete
  12. எழுதுபவனிடம் எதை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தீர்கள். படைப்பாளியின் மூலம்... என்னவாயிருக்க நினைத்து ஏமாந்தீர்கள்.

    ReplyDelete
  13. மிக அருமையான கருத்து! சிறப்பாக தந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete