Friday, January 2, 2015

ஜென் சித்தப்பு ( 2 )

மதி நிறைந்த நன் நாளில்
அதி உன்னத இளங்காலை
சித்தப்புவின் வயதொத்தவர் எல்லாம்
அந்தச் சித்திரை வீதியில்
சிவப்பழமாய் பஜனை செய்தபடி
பவனித்துவர....

இவர் மட்டும் மொட்டை மாடியில்
வேர்க்க விறுவிறுக்க
ஸ்கிப்பிங்  ஆடிக்கண்டிருப்பதைப் பார்க்க
சித்திக்கு மட்டும் இல்லை
எனக்கும் கோபம்
பொத்துக் கொண்டு வந்தது....

சித்தி வழக்கம்போல் அடக்கிக் கொண்டாள்
என்னால் முடியவில்லை

என் முகச் சுளிப்பைக் கண்ட சித்தப்பு

"ஒன்று என் பக்கம் வா
அல்லது அவர்களுடன் போ
ஏனெனில் இரண்டும் ஒன்றுதான் "என்றார்

எனக்கு எரிச்சல் கூடிப் போனது
"அது எப்படி ஒன்றாகும்"
கோபம் கொப்பளிக்கக் கேட்டேன்

அவர் வேர்வையைத் துடைத்தபடி
நிதானமாகச் சொன்னார்

"அவர்கள் வீட்டினுள் அமர்ந்தபடி
கீர்த்தனைகளைப் பாடிக் கொண்டிராது
வீதியில் மூச்சிரைக்க
நாமாவளி பாடுவதும்...

வீட்டினுள் இல்லாது
மூச்சிரைக்க  வெட்ட வெளியில்
நான் ஸ்கிப்பிங்க் ஆடுவதும்
நிச்சயம் ஒன்றுதான்

அது காரணம் அறியா காரியம்
இது காரணம் அறிந்த காரியம்"
என்றார்

"எனக்கு ஏதும் விளங்கவில்லை
விளங்கச் சொல்லக் கூடாதா ? "
என்றேன் எரிச்சலுடன்

சித்தப்பு சிரித்தபடிச் சொன்னார்

"விளக்கிச் சொல்லப்படும் எதுவும்
நீர்த்துத்தான் போகும்
விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டவையே
நிச்சயம் நெடு நாள் வாழும் " என்றார்

நான் விளங்கிக் கொள்ள
முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்

23 comments:

  1. விளக்கிச் சொல்லப்படும் எதுவும்
    நீர்த்துத்தான் போகும்
    விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டவையே
    நிச்சயம் நெடுநாள் வாழும்!..

    நெஞ்சில் நிற்கும் கருத்து!..

    ReplyDelete
  2. விளங்கிக்கொள்ள முயற்சித்தாலும் சில இறுதிவரை விளங்கிக்கொள்ள முடியாமலே போய்விடுகின்றனவே..!

    ReplyDelete
  3. உண்மையான கருத்து கவிஞரே...

    ReplyDelete
  4. உண்மைதான். எல்லாமே காரணத்தோடு செய்வதுதானே...

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    அருமையான கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா!

    அருமையான ஜென் தத்துவத்தை
    அழகான கவிதை வடிவில் சொன்னீர்கள்!
    ஆழ்ந்து ரசித்தேன் ஐயா!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. "விளக்கிச் சொல்லப்படும் எதுவும்
    நீர்த்துத்தான் போகும்
    விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டவையே
    நிச்சயம் நெடு நாள் வாழும் "
    கவிதையும் இதற்குள் அடக்கம் எனலாமோ!!!!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. ஜென் சித்தப்புவின் தத்துவம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. பின்னுரை

    மார்கழி மாதம் ஓஸோன் படலம் பூமிக்கு மிக
    அருகில் இருக்கும் எனவும் சுற்றுப் புறச் சூழல்
    மிக சுத்தமாக இருக்கிற அந்தக் காலை வேளை
    வெட்டவெளியில் ஆழமாகச் சுவாசித்தல் உடலுக்கு
    மிகவும் நல்லது எனச் சொன்னால் யாரும்
    அதைப் பொருட்படுத்துவதில்லை

    மாறாக பக்தியுடன் இசையுடன் அதை இணைத்துச்
    செய்யும்படிச் செய்துவிட்டால் நிச்சயம்
    விடாது செய்வார்கள்

    நாமாவளியின் உச்சத்தில் அதிகமாக
    ஆழமாக மூச்சைச் சுவாசிக்கவேண்டி இருக்கும்
    நடையும் அதற்கு உறுதுணையாக இருக்கும்

    எதற்காக அதைச் செய்யச் சொன்னார்களோ
    அதை உணராமல் ஈடுபாட்டோடோடு
    நாமாவளியைச் சொல்லாமலோ
    வெளியில் நடவாது பாடினாலோ
    அது பயனில்லை என்பதைத்தான்
    என் ஜென் சித்தப்பு சொல்கிறார் எனப்
    புரிந்து கொண்டேன்

    "மூச்சிறைக்க " என்கிற சொல்லை
    மிகச் சரியாக இரு செயல்களிலும்
    சொல்லிப் போனதுதான் இதில் சிறப்பு
    என நினைக்கிறேன்

    நான் விளங்கிக் கொண்டது சரியா ?
    அவர் சொல்லமாட்டார்
    நீங்கள்தான் சொல்லவேண்டும்

    ReplyDelete
  10. விளங்கிக் கொண்டதும், விளக்கியிருப்பதும் சரியே. வணக்கமும் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  11. ஜென் சித்தப்பு கலக்கிட்டார்.
    சிந்திக்க வைக்கும் நிறைவு வரிகள்

    ReplyDelete
  12. ஜென் சித்தப்பு சொன்னது தப்புன்னு சொல்ல முடியாது :)கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில் எனக்கு உடன்பாடில்லை :)
    த ம 5

    ReplyDelete
  13. /விளக்கிச் சொல்லப்படும் எதுவும்
    நீர்த்துத்தான் போகும்/ எனக்கு உடன்பாடில்லை.விளக்கிச் சொன்னால் விளங்கிவிடும் விளக்காமல் விட்டால் ஆளுக்கொரு அர்த்தம் எடுத்துக் கொள்வார். அது அப்படி இல்லை என்று கூறி தப்பிக்கலாம்.

    ReplyDelete

  14. G.M Balasubramaniam sir //

    உரித்துக் கொடுத்ததை விட உரித்துத் தின்றதும்
    புரிந்து சொன்னதைவிட புரிந்து கொள்ள விட்டதும்
    கூடுதல் சுவை தரும் என்பதில் என்னைப் பொருத்தவரையில்
    (என்னைப் பொருத்தவரையில் என்பதை
    கொஞ்சம் கவனிக்கவும் )எந்தக் குழப்பமும் இல்லை

    முன்னர் பதிவிட்டதற்கும் பின்னுரைக்கும்
    உள்ள வித்தியாசமதையே கூட
    இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்

    தங்கள் வரவுக்கும் மனம் திறந்த
    மாற்றுக் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. ரசித்தேன். "மாற்றுக்கருத்து மன்னர்" அவர்களின் கருத்தும் வரவேற்கத் தகுந்ததே.

    ReplyDelete
  16. கருத்துரையில் விளக்கங்களையும் அறிந்தேன்...

    ReplyDelete
  17. ஜென் சிந்தனைக்குச் சரியான உதாரணம்
    தம7

    ReplyDelete
  18. அது காரணம் அறியா காரியம்
    இது காரணம் அறிந்த காரியம்"

    இந்த வாக்கியமே விளக்கிவிடுகிறது இரமணி ஐயா.
    சித்தப்பு வாழ்க!

    ReplyDelete
  19. NAMASTHE/-

    இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்--மாலி

    ReplyDelete
  20. ஆன்மிகம் பயம் இதில் வளர்த்த ஆரோக்கியம் .இதை நாளடைவில் உணரா நாத்திகம்.இதை விளக்கும் கவிதை பாராட்டுக்கள். நகம் கடித்தல் முதல் நாகம் கடித்தல் வரை ஆன்மீக அறிவியல் நம் முன்னோர்களுடையது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. அது காரணம் அறியா காரியம்
    இது காரணம் அறிந்த காரியம்"

    இரண்டும் அறிந்து கொண்டோம். காரணங்கள் விளக்கப்பட்டால்தான் அதுவும் சரியாக விளக்கப்பட்டால்தான் விளங்கும். நல்ல வரிகள்! அருமையான கருத்து!

    ReplyDelete
  22. வணக்கம் சகோதரரே!

    \\"விளக்கிச் சொல்லப்படும் எதுவும்
    நீர்த்துத்தான் போகும்
    விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டவையே
    நிச்சயம் நெடு நாள் வாழும் " //

    ஆம்.! உண்மையான வார்த்தைகள்.!.அனுபவங்கள்
    என்றும் வாழ்வின் பாடங்கள்..

    விளங்கும்படி, விளக்கமளித்தமைக்கு நன்றிகள்..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  23. ஆகா அற்புதம்.

    ReplyDelete