Thursday, February 5, 2015

காதல் என்றால் இதுதானா ?

அவர்கள் காதலிக்கத் துவங்கியதிலிருந்து

அவனைப்பற்றி அவன் நினைப்பதை
அடியோடு மறந்துத்  தொலைந்தான்
எப்போதும் அவள்  குறித்த
 நினைவிலேயே  அலைந்து திரிந்தான்

அவளும் அவளைப்பற்றி
நினைப்பதை  அடியோடு விடுத்து
அவனைக் குறித்த சிந்தனையிலேயே
 நாளையும் பொழுதையும்  கழித்தாள்


அவளுடைய தேவைகள் குறித்தே
அவன் அதிக கவனம் கொண்டான்
அவனது  தேவைகளை மறந்தே போனான்

அவளும் அதுபோன்றே
அவனது தேவைகளையே
 நாளெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்

அவர்கள் காதலிக்கத் துவங்கிய நிமிடத்திலிருந்து

அவன் அவனுக்காக வாழுதலை
அடியோடு விட்டொழித்து
அவளுக்காகவே வாழத் துவங்கினான்

அவளும் தனக்காக வாழுதலை விடுத்து
அவனுக்காகவே வாழத் துவங்கினாள்

அவர்கள் காத்லிக்கத் துவங்கிய வினாடியிலிருந்து

அவன் அவளைக் காணும் போதெல்லாம்
இமையாது ஏதோ அதிசயத்தை பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தான்

அவளும் அவனைக் காணும் போதெல்லாம்
ஏதோ அபூர்வப் பொருளைப் பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தாள்

இந்த அதிசய மாறுதலுக்கு காரணம் புரியாது
நான் குழம்பிக்கிடந்த  வேளையில்
காதலித்துக் கொண்டிருந்த நண்பன்
 இப்படிச் சொன்னான்

"பிறந்தது முதல் ஓரிடத்திலே இருந்த உயிர்கள்
இடம் மாறியதால் உண்டாகிற பிரச்சனை இது

 தானிருந்த உடலை அதிசயித்து
அசையாது பார்த்துக் கொள்ளுவதும்
மீண்டும் அதற்குள் குடியேற முயன்று
காலமெல்லாம் தோற்கிற துயரமும்
 அது காதலர்களுக்கு மட்டுமே புரியும்
தேவ ரகஸியம்

அவரவர் உயிர்களை
அவர்களிடமே வைத்திருப்போருக்கு
நிச்சயம  இது புரியச சாத்தியமில்லை "என்றான்

நான் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்

12 comments:

  1. காதலுக்கு புரிதல் அவசியம்தானே....
    தமிழ் மணம் 2
    எனது புதிய பதிவு அரபிக்

    ReplyDelete
  2. தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன் ஐயா காண வருக.

    அருமை
    தம் 3

    ReplyDelete
  3. R.Umayal Gayathri //

    அருமையான பதிவர்களுடன்
    என்னையும் இணைத்து அறிமுகம்
    செய்தது மகிழ்வளிக்கிறது
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. அருமை! சிறப்பான தத்துவம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இவ்வளவு விவரமா சொல்லத் தெரிந்த நீங்களே ,நான் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன் என்றால் நான் எல்லாம் எம்மாத்திரம் :)
    த ம 4

    ReplyDelete
  6. காதலித்துப்பார்......

    ReplyDelete
  7. முயற்சி ஒருநாள் வெற்றி தரும்...

    ReplyDelete
  8. காதலித்தவர்களுக்குப் புரியும் காதலின் வலி. பலருக்கு திருமணத்திற்குப்பின் மனைவி கணவன் தான். இதெல்லாம் பட்டம் பெற்றபின் ௧௯௮௦ ஆண்டுக்குப் பின். விவாகரத்துக்கள் /கள்ளக்காதல் கொலை தற்கொலை ...காதல் அதிகரிக்காதிகரிக்க வரும் செய்திகள்.

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா.

    இரசிக்கவைக்கும் வரிகள் சொல்லிச் சென்ற விதம் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. காதல்.... காதலித்துப் பார் அதன் சுகம் தெரியும் என்று நண்பர் ஒருவர் சொல்வார். அது நினைவுக்கு வந்தது.

    நல்ல கவிதை.

    த.ம. +1

    ReplyDelete
  11. // அது காதலர்களுக்கு மட்டுமே புரியும் தேவ ரகஸியம்//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

    //நான் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்//

    கடைசிவரை நமக்குப் புரியாவிட்டாலும்கூட, காதலும் காதலர்களும் இதுபோலவே என்றும் தொடர்ந்து இனிமையாக நீடூழி வாழ்க என வாழ்த்துவோம் !!

    ReplyDelete