Monday, February 2, 2015

எங்கோ இருந்து என்னை இயக்கும் அழகுப் பெண்ணே ரதியே

ஆத்து நீரு போகும் போக்கில்
போகும் மீனைப் போல-வீசும்
காத்தின் போக்கில் நித்தம் ஓடும்
கருத்த மேகம் போல-உன்

நினைப்பு போகும் போக்கில் தானே
நாளும் நானும் போறேன்-அந்த
நினைப்பில் பிறக்கும் சுகத்தைத் தானே
பாட்டாத் தந்துப் போறேன்

வண்டை இழுக்கப் பூத்துச் சிரிக்கும்
அழகு மலரைப் போல-இரும்புத்
துண்டை இழுத்து அணைத்துக் கொள்ளும்
விந்தைக் காந்தம் போல-உன்

அழகு போகும் போக்கில் தானே
மயங்கி நானும் போறேன்-அந்த
சுகத்தில் விளையும் உணர்வைத் தானே
கவிதை யென்றுத் தாரேன்

மறைந்து கிடந்து வீட்டைத் தாங்கும்
அஸ்தி வாரம் போல-மண்ணில்
மறைந்து இருந்து மரத்தைக் காக்கும்
ஆணி வேரைப் போல-மறைந்து

எங்கோ இருந்து என்னை இயக்கும்
அழகுப் பெண்ணே ரதியே-சகியே
உந்தன் தயவில் நானும் கவியாய்
மாறிப் போறேன் தினமே

17 comments:

  1. (நீ) 'ரதியானால் நான் கவியாவேன்' ன்று பாடி விட்டீர்களோ...!

    ReplyDelete
  2. //எங்கோ இருந்து என்னை இயக்கும்
    அழகுப் பெண்ணே ரதியே - சகியே
    உந்தன் தயவில் நானும் கவியாய்
    மாறிப் போறேன் தினமே!..//

    இயல்பு.. எளிமை..
    ஆற்றோரச் சோலை என
    சிலுசிலுக்கின்றது - கவிதை!..

    ReplyDelete
  3. இளையராஜா இசையும் சேர்ந்தால் சூப்பர் ஹிட் பாட்டுத்தான்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பாடலின் வரிகளை மெட்டோடு நினைத்து எழுதினீர்களா?அருகே இருந்து இயக்கும் ரதி கருத்து கூறினார்களா?.

    ReplyDelete
  5. அழகு ,கவிஞனை உருவாக்குகிறது!

    ReplyDelete
  6. #எங்கோ இருந்து என்னை இயக்கும்
    அழகுப் பெண்ணே ரதியே#
    எனக்கும் அந்த ரதியைப்பார்க்கணும் போல இருக்கு ...
    உங்க கண்ணுக்கே தெரியலைன்னு கேட்கும்
    போது வருத்தமாவும் இருக்கு :)
    த ம 5

    ReplyDelete
  7. காதல் ரசம் சொட்டுகிறது.....

    ReplyDelete
  8. உங்களது கவிதைகளைப் படிப்பதால் நாங்களும் கவிஞர்களாகிவிடுகிறோம். நன்று

    ReplyDelete
  9. திரைப்படத்தில் வரும் காலம் வெகு அருகில்...

    ReplyDelete
  10. அழகான ரதியே கவிக்கு உவமையாக வந்துவிட்டாள் .ரசித்த கவிதை ஐயா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மிகவும் ரசித்தோம்! காதல் ரசம் சொட்டவைக்கும், சொக்க வைக்கும் அழகு ரதியோ!!! எங்கே அவள்?!!!

    ReplyDelete
  12. பாட்டு நல்லாருக்கு..

    ReplyDelete
  13. படிக்கும் போதே ஏனோ கால்கள் தாளம் போட்டது... அழகு!

    ReplyDelete
  14. மனதினை வருடிய கவிதை.
    த.ம. +1

    ReplyDelete
  15. வணக்கம்
    ஐயா.

    உவமை மிக்க வரிகள் கற்பனை நன்று இந்த கவிக்கு இசை அமைத்து அழகாக பாடலாம்... பகிர்வுக்கு நன்றி ஐயா.
    த.ம12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. //வண்டை இழுக்கப் பூத்துச் சிரிக்கும் அழகு மலரைப் போல-இரும்புத்துண்டை இழுத்து அணைத்துக் கொள்ளும் விந்தைக் காந்தம் போல-//

    மிகவும் அழகான வர்ணனை. :) பாராட்டுக்கள்.

    ReplyDelete