Sunday, March 22, 2015

ஆயாசம்

அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தபடி
"கொஞ்சம் சீக்கிரம் 
அடுத்த காரியத்துப் போகவேண்டும் "
அவசரப் படுத்தினார் சாஸ்திரிகள்


"ஜங்ஷனுக்கு அரை மணி நேரத்தில்
போய் விடலாம் இல்லையா"
பக்கத்திலிருந்தவரிடம் பதட்டத்துடன்
கேட்டுக் கொண்டிருந்தார் சித்தப்பா"

ப த்து மணிதான் அதுக்கு மேலே தாங்காது
படபடன்னு வந்திரும்
சாப்பிட்டு மாத்திரை போட்டாகணும் " என
யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார் சம்பந்தி

தூரே மொத்தமாய் நின்றபடி
இன்றைய அரசியல் நிகழ்வு குறித்து
சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தனர்
அலுவலக நண்பர்கள்

"குளத்துத் தண்ணி ரொம்ப மோசம்
வீட்டில் போய் நன்றாகக் குளிக்க வேணும் "என
அவனாகவே பினாத்திக்  கொண்டிருந்தான
"அவரின் "  மூத்த மகன்

கண் கலங்கியபடி பேரன் மட்டுமே 
"அவரையே "பார்த்துக் கொண்டிருந்தான்

"அவருக்கும்" கூட
"அவர் "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது

14 comments:

  1. ம்ம்... கஷ்டம்தான்!

    ReplyDelete
  2. தமிழ்மணம் இன்னும் சப்மிட் ஆகவில்லை!

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    விபரமான பேரன்தான்... எல்லோரின் சிந்தனையும் ஒன்று இல்லை வேறுபட்டது என்பதை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அடுத்தவருக்கு மட்டுமே "அது" வரும் என நினைப்பதே..யதார்த்தம்! அதன் வெளிப்பாடுகள் தான் இவை!

    ReplyDelete
  5. ஆமாம். எனக்குமே அப்படித்தான் தோணித்து!

    ReplyDelete
  6. செத்துப்போனவரை இன்னும் செத்துப்போகாமல் இருப்பவர்கள் சென்று பார்த்துவிட்டு, துக்கத்தில் கலந்துகொண்டு விட்டு வருவது என்பது, நீண்ட நாட்களாக உள்ள ஓர் சம்பிரதாயமாகவே உள்ளது.

    நேற்று 22.03.2015 மாலை 4.30 முதல் 6.30 வரை எனக்கும் என் மனைவிக்கும் இதே [கசப்பான] அனுபவம் கிடைத்தது.

    அதைப் பற்றி விரிவாக நான் எழுத வேண்டுமானால் ஓரிரு பகுதிகள் மட்டும் எனக்குப் போதாது.

    அங்கும் [ஸ்ரீரங்கம்] அடுக்கு மாடி கட்டட வீடு. இட நெருக்கடி. சொந்தச் பந்தங்கள் + வருகை தரும் நண்பர்கள் என ஏராளமான கூட்டங்கள்.

    முதல் நாள் இரவு 8 மணிக்கு இறந்தவரை [வயது 85] மறுநாள் மாலை 6 மணிக்குமேல் எடுக்க வேண்டியதோர் சூழ்நிலை.

    அவருக்குப் பிறந்தவர்கள் அனைவருமே வெளியூர்களிலிருந்து வந்துவிட்டாலும் டெல்லியிலிருக்கும் கடைசி மகளின் வருகைக்காக மட்டுமே இந்தக் காத்திருப்பு நிகழ்ந்தது.

    காவிரியிலும் கொள்ளிடத்திலும் கால் பாதம் நனையும் மட்டுமே தண்ணீர் உள்ளது. ஊற்று ஏற்படுத்தி குவளையால் நீர் எடுத்து நாம் உடலை நனைத்துக்கொண்டாலும். கூடவே மணலும் கலந்து வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை.

    இறந்தவர் மட்டுமல்லாமல், அடுத்த இறக்க காத்திருப்போர் அனைவருக்குமே இது மிகவும் கஷ்டமாகத் தான் உணர முடிந்தது.

    மிகுந்த செலவுகளுடன் கூடிய நேற்றைய என் அனுபவத்தை இங்கு 26 வரிகளின் வெகு அழகாக சுருக்கமாக எடுத்துச்சொல்லி ‘ஆயாசம்’ என்ற தலைப்பும் கொடுத்துள்ளது என்னை வியக்க வைத்துவிட்டது.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. //"அவருக்கும்" கூட
    "அவர் "மீது வைக்கிற கொள்ளியை
    காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
    தேவலாம் போலத்தான் இருந்தது//
    கலங்க வைக்கிறது..

    ReplyDelete
  8. இழவு வீட்டில் நடக்கும் நிதர்சன உண்மைகள்.

    ReplyDelete
  9. காண முடியவில்லை! ஆயாசம் காரணமா!?

    ReplyDelete
  10. நிறைவு வரிகளில் லேசான நகைச்சுவை இழையோடினாலும்.உண்மை நிலையை நச்சென்று
    உரைத்தது

    ReplyDelete
  11. நிதரிசனம் கனக்கிறது.

    ReplyDelete
  12. இது உண்மையாகவே நிகழும் ஒன்றுதான் ஆனால் உண்மை மனதை கனக்க வைக்கின்றது....இதைச் சொல்லுபவர்களுக்கும் நாளைய கதி இதுதான்....

    ReplyDelete