Monday, March 23, 2015

துயிலின் அருமை

பிரிவுத் துயரை
அனுபவித்து அறிய
பிரிய வேண்டியதுதான்
கட்டாயம் என்பதில்லை

அவ்வப்போது
பார்வையளனாய் சென்றுவரும்
புகைவண்டி நிலையமே
போதுமானதாய் இருக்கிறது

வலியின் வலுவினை
நோய்வாய்ப்பட்டே
அறிய வேண்டியதுதான்
அவசியம் என்பதில்லை

அவ்வப்போது
ஆறுதல் சொல்லச் சென்றுவரும்
மருத்துவமனையே
அதனை உணர்த்திவிடுகிறது

நிலையற்ற வாழ்வினைப்
புரிந்து கொள்ள
ஞானம் கொள்ளத்தான்
வேண்டுமென்பது அவசியமில்லை

அவ்வப்போது
தவிர்க்க இயலாது சென்றுவரும்
சாவு வீடுகளே
போதுமானதாய் இருக்கிறது

மனப்பாரம் இறக்கி
நிர்வாணம் சுகித்திட
போதி மர நிழலே
தேவை என்பதாயுமில்லை

ஒவ்வொரு இரவும்
சிறு மரணத்தில் ஆழ்த்திப்போகும்
ஆழ்ந்த துயிலே
(வாய்க்கப்பெற்றால் )
போதுமென்றாகிப் போகிறது

14 comments:

  1. வாழ்க்கையின் உண்மை நிலை இதுதான் குரு, அருமை !

    ReplyDelete
  2. அருமை கவிஞரே சிறந்த வரிகள்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. இந்தத்தங்களின் பதிவே போதிமரமாய் நம் வாழ்க்கையின் பல உண்மைகளைச் சொல்லியுள்ளது.

    ஆழ்ந்த துயில் (வாய்க்கப்பெற்றால்) கொள்வோம் !

    இப்போதைக்கு அது தான் நம்மால் முடிந்தது.

    சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. யாதார்த்த வாழ்க்கையின் உண்மை நிலை இதுதான் அதை எளிமையாக புரிய வைத்துவிட்டீர்கள்

    ReplyDelete
  5. எனக்கெல்லாம்
    வலியின் வலுவினை
    நோய்வாய்ப்பட்டே
    அறிய வேண்டியதுதான்
    அவசியம் என்பதில்லை

    அவ்வப்போது
    மனைவியின் கையில் இருக்கும்
    பூரிக்கட்டையே
    அதனை உணர்த்திவிடுகிறது

    ReplyDelete
  6. மிக அழகு!

    நா.பார்த்தசாரதி தனது நாவல் ஒன்றில் ' மரண‌ம் என்பது நீண்ட உறக்கம், உறக்கம் என்பது தற்காலிக மரணம் ' என்று பொருள்பட வெகு அழகாகச் சொல்லியிருப்பார்!

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    வாழ்க்கையின் உண்மை நிலை இதுதான் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி. த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. ஒவ்வொரு வரியும் நச்! அருமை அருமை! அதுவும் மரணம் பற்றியும், ஞானம் பற்றியுமான வரிகள்....ஆஹா!! அதுதானே உண்மை! மரணம் பற்றி நா.பா சொன்னதைச் சொல்ல வந்து அடித்து விட்டுப் பார்த்தால் சகோதரி மனோ அவர்களும் சொல்லியிருந்தார்கள். ஆம் அதே! மிக மிக பொருள் வாயந்த வரிகள்!

    ReplyDelete
  9. ஒவ்வொரு நாளும் புதிய (பிறந்த) நாளே...!

    ReplyDelete
  10. //ஒவ்வொரு இரவும்
    சிறு மரணத்தில் ஆழ்த்திப்போகும்
    ஆழ்ந்த துயிலே
    (வாய்க்கப்பெற்றால் )
    போதுமென்றாகிப் போகிறது//

    உண்மை. அருமையான வரிகள்.

    ReplyDelete
  11. ஒவ்வொரு நாளும் உறங்கி எழும்போது ஒரு புதிய நாளைக் காண்கிறோம் என்று புரிதலை ஒவ்வொரு இரவும் பகலும் சொல்லும் பாடம்/

    ReplyDelete
  12. அருமையான படைப்பு! அருமையான கருத்து! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. எல்லோரையும் ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டீர்கள் போலும். எளிமை, அருமை, வளமை.

    ReplyDelete