Thursday, July 30, 2015

புகழுடம்பு

தேடிநித்தம் சேர்த்ததெல்லாம்
தெருக்குப்பை ஆகிவிடும்
தேடியோடிப் படித்ததெல்லாம்
தொலைந்தெங்கோ  ஓடிவிடும்
கூடியாடிக் களித்ததெல்லாம்
வெறுங்கனவாய் மாறிவிடும்
தேடிவந்து காலனவன்
மூச்சடைக்க நடந்துவிடும்

வெளியோடி உள்ளோடி
உயிரதற்கு ஆதரவாய்
ஒலியதனைத் தினம்கடத்தும்
ஒப்பற்றச் சாதனமாய்
நொடிதோரும் உழைத்திட்ட
வளியதுவும் திசைமாறும்
வெளியோடு நின்றுடலை
பிணமாக்கி சுகம்காணும்

தினமுலவி வாழ்வதற்கும்
நிம்மதியாய் சாய்வதற்கும்
தினந்தோரும் வகைவகையாய்
தின்றுவுயிர் வளர்ப்பதற்கும்
மனமிளகித் தாய்போலத்
தனைத்தந்த நிலமகளும்
மனங்கெட்டு அரக்கியாகி
உடல்தின்னத் துணிந்துவிடும்

நதியாகித் தினமோடி
நாடெல்லாம் செழிப்பாக்கி
தவிப்பெடுத்த உயிரனைத்தின்
தாகமதை தினம்தீர்த்த
அதிமதுர நீரதுவும்
நிலைமாறும் முகம்மாறும்
பொதியான பிணம்கழுவும்
புழக்கடைநீர் போலாகும்

உடல்நலத்தைத் தினம்காக்கும்
உணவாக்க உறுதுணையாய்
கசடுயெனத் தினம்சேரும்
கழிவழிக்கப் பெருந்துணையாய்
உடனிருந்த பெருந்தீயும்
கொண்டகுணம் விட்டுவிடும்
உடலெரித்துப் பசியடக்கப்
பேராசைக் கொண்டுவிடும்

நான்கினையும் உள்ளடக்கி
ஏதுமில்லை என்பதுபோல்
காண்பதற்குத் தெரிந்தாலும்
கடவுள்போல் யாதுமாகி
ஆண்டுவரும் வெளியதுவும்
அரக்ககுணம் கொண்டுவுடல்
தாண்டிவரும் உயிரதனை
விழுங்கிடவே தினமலையும்

உடலோடு உயிரிருக்க
உள்ளன்பின் துணையோடு
உலகத்தார் மேன்மையுற
உழைக்கின்ற உழைப்பொன்றே
உடல்விட்டு உயிர்பிரிந்தும்
உலகுவிட்டு மறையாது
புகழுடம்பு எடுத்திங்கு
எந்நாளும் நிலைத்திருக்கும்

9 comments:

  1. //உலகத்தார் மேன்மையுற
    உழைக்கின்ற உழைப்பொன்றே
    உடல்விட்டு உயிர்பிரிந்தும்
    உலகுவிட்டு மறையாது
    புகழுடம்பு எடுத்திங்கு
    எந்நாளும் நிலைத்திருக்கும்//

    நல்ல சிந்தனை ஐயா. உழைப்பின் சிறப்பு சொல்லிய விதம் நன்று.

    த.ம. 2

    ReplyDelete
  2. ஒவ்வொன்றாக சொன்னவிதம் அருமை... முடித்தவிதம் அற்புதம் ஐயா...

    ReplyDelete
  3. சந்தங்கள் நிறைந்த கவிதை. சந்தம் என்றால் மலையாளத்தில் அழகு என்று பொருள்

    ReplyDelete
  4. புகழுடம்பு என்றும் நிலைத்திருக்கும். உண்மை.

    ReplyDelete
  5. வணக்கம்,
    ஆம் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
    நன்றி.

    ReplyDelete
  6. கவிதை அருமை

    ReplyDelete
  7. புதிய முயற்சியில் படைத்துள்ள கவிதை! அருமை! தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. உலகத்தார் மேன்மையுற
    உழைக்கின்ற உழைப்பொன்றே
    உடல்விட்டு உயிர்பிரிந்தும்
    உலகுவிட்டு மறையாது
    புகழுடம்பு எடுத்திங்கு
    எந்நாளும் நிலைத்திருக்கும்// ஆம் உண்மைதான்! நண்பரே! உழைப்பின் அருமையைச் சொல்லியவிதம் நன்று!

    ReplyDelete
  9. அருமையான தத்துவப் பாடல் !

    ReplyDelete