Tuesday, November 3, 2015

விசித்திரப் பூதங்கள்

கோடிக் கண்களும்
கோடிக் காதுகளும்
பல கோடிக் கைகளும் கொண்டு
மூளையும் காதுகளும் அற்ற
 எந்த அரசும் விசித்திர பூதங்களே

அதனால்தான்..
குடிமக்களின் தலையைக் காக்க
தலைக் கவச ஆணையைக்
கட்டாயப் படுத்தும் அவை களுக்கு
மது பானம் மூலம்
குடல் கருகுவது தெரிவதே இல்லை

 மிக்ஸியும் கிரைண்டரும்
இலவசமாய் தரும் அவை களுக்கு
அதனைப் பயன்படுத்த
மின்சாரம் வேண்டும் என்கிற சிறுதகவல்
அதற்குப் புரிவதே இல்லை

மக்களின் பசித்துயர் தீர்க்க
விலையில்லா அரிசி தரும் அவை களுக்கு
எரி பொருள் விலையேற்றமோ
மளிகைப் பொருட்கள் விலை நிலவரமோ
அதற்கு பொருட்டாய் இல்லை

அனைத்துச் சீர்கேட்டுக்கும்
ஆண்டு முடித்த கட்சியையே
குறை சொல்லித் தப்பிக்கும் அவை களுக்கு
அதை சரிசெய்யத்தான்
இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்கிற
சிறு உணர்வு கூட இருக்கச் சாத்தியமே இல்லை

ஏனெனில்
எதிர்ப்பாளர்களை மிகச் சரியாக்க் கண்டறிய
கோடிக் கண்களும்
எதிர்ப்புகளை ஒரு நொடியில் நசுக்கி எறிய்
அதிகார ஆயுதங்களுடன் கூடிய
கோடிக் கைகளும் கொண்ட
 இந்த விசித்திர பூதங்களுக்கு
மூளையும் காதுகளும் மட்டுமல்ல
இளகிய மனம் கூட
இருந்ததாக சரித்திரமே இல்லை

நாம் இப்படிப  பொறுமையாய்
எதையும் சகித்துக் கொண்டு
விட்டேத்தியாய்
வாழ்ந்துத் திரிகிற வரையில்
வந்த  பூதத்திற்காயினும்  சரி
இனி வர இருக்கிற  பூதத்திற்காயினும் சரி
அது வளர்ச்சி கொள்வதற்கான சாத்தியமும்
சத்தியமாய் இல்லவே இல்லை

9 comments:

  1. பூதங்களை குற்றம் சொல்வதை விட மனிதர்களின் குறையை வில(ள)க்குதலே . நல்லதென தோன்றுகிறது,,.

    பஞ்ச பூதங்களும்,,,.
    பட்டினத்தில் பூதமும்,,,..
    அலாவுதீனின் அற்புதம் செய்த பூதமும்.. தமக்கென ஏதாவது சேர்த்து வைதிருக்கின்றனவா?

    மாறாக என்று தன் முடிவு என்பதையே அறியாத சில அற்ப மணிதர்தான்...
    இந்த பூ(த)வுலகையே மொத்தமாக தன் சொந்தமாக்க முற்படுகின்றார்...

    தாங்கள் குறிப்பிட்டுள்ளதை கண்டதும் எனக்கும் வந்தது தானாக ஓர் கர்வம்...
    இதுவரை இலவசமாக அவர்கள் தந்த காட்சிபெட்டியையோ..? இவர்கள் தரும் பல பெட்டிகளையோ பெறப் போகாதவன் நான். அதனால் விலை போகாதவன் தான் .. அவர்களுக்கு ஓர் வேண்டுதல்.. கொடுக்கட்டும் தாராளமாய்.. அதை அவர்கள் பணத்தில் இருந்து கொடுக்கட்டும். அதை விடுத்து அரசின் வருவாயிலிருந்து தம் விருப்பம்போல் வீணடிக்கும் இவர்களை யார்தான் கேட்பது...

    ஒரு வேண்டுகோள்
    அய்யா பூதங்கள் மிக எளியவை..
    அவற்றை இவர்களோடு எடையிட்டு மலிவுப்படுத்த வேண்டாம்...

    ReplyDelete
  2. ஐயா எழுதும் போது சற்றுக் கவனமாக இருக்க வேண்டும் இன்று பத்ட்க்ஹிரிக்கையில் ஒரு சேதி படித்தேன் இந்தகுடிபற்றியும் இலவசங்கள் பற்றியும் எழுதிப் பாடிய ஒருவர் மீது sedition குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதாம் த ஹிந்து பெங்களூர் ஆங்கிலப் பதிப்பின் எடிடோரியலில் படித்தேன்

    ReplyDelete
  3. பல சமயங்களில் படைப்பை விட
    பின்னூட்டங்கள் மிகச் சிறப்பாக
    அமைவதுண்டு

    எனக்கு அந்த ராசியும் அதிகம் உண்டு
    முன்பு மஞ்சு அவர்கள் இப்படி அருமையான
    பின்னூட்டங்கள் எழுதி என் படைப்புக்கு
    அதிகப் பெருமை சேர்ப்பார்கள்

    இப்போது தாங்கள்...

    தங்கள் வரவுக்கும் அற்புதமான
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. G.M Balasubramaniam //

    அருமையான அக்கறையுடன் கூடிய
    பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி

    நிர்வாகம் /அரசு / முதலானவைகள் மீது
    வைக்கிற பொதுப்படையான விமர்சனங்களுக்கும்
    தனிப்பட்ட விமர்சனங்களுக்குமான
    வித்தியாசம் தெரியாத அளவு மோசமாக
    இன்னமும் அவர்கள் ஆகவில்லை
    என நினைக்கிறேன்

    ReplyDelete
  5. அற்புதமான கவிதை! அருமையான கருத்து! பூதங்களை உருவாக்கும் நாம் இனியாவது கொஞ்சம் விழிப்போடு இருப்போம்!

    ReplyDelete
  6. குடிகாரர்கள் தள்ளாடினாலும்
    குடம் தள்ளாடுவதில்லையே இரமணி ஐயா.

    ReplyDelete
  7. கருத்து அற்புதம். ஆனால் கருத்துச் சுதந்திரம் பறி போய் விடுமோ என்ற பயமும் கூடவே வந்து கொண்டிருக்கின்றது...

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா
    நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. நல்லதொரு சாடல். புரிய வேண்டுபவர்களுக்கு புரிய வேண்டுமே....

    ReplyDelete