Sunday, March 20, 2016

பாவப்பட்ட அவன்


உட்புறம் தாளிட்டுக்
கதவருகில் அமர்ந்தபடி
யாரேனும் வரமாட்டார்களாவென
வெகு நேரம் காத்திருந்து
மனச் சோர்வு கொள்கிறான்

இழுத்து அடைக்கப்பட்ட
ஜன்னலருகில் அமர்ந்தபடி
அறையினைக் கொதிகலனாக்கும்
வெக்கையில் புழுக்கத்தில் தன்மீதே
கழிவிரக்கம் கொள்கிறான்

தனிமைத் துயர்
குரல்வளை நெறிக்க
யாரேனும் அழைக்கமாட்டார்களாவென
தொலைபேசிக்கு அருகமர்ந்து
மனம் சலித்துப் போகிறான்

யாராவது சிரித்தால்
சிரிக்கலாமென்று ஆவலோடும்
யாராவது பேசினால்
பேசலாமென்று ஆர்வத்தோடும்
காலமெல்லாம் காத்துக்கிடந்தே
கவலை மிகக் கொள்கிறான்

விளைச்சலைப் பெற
முதலில் விதைத்தலும்
வேண்டியதைப் பெற
முதலில் கொடுத்தலும்
காரியம் வெற்றிபெற
முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே...

எதனையோ
எவரையோ
எதிர்பார்த்தபடியே

இன்றும் அவன் எப்போதும்போல்
காத்திருந்து காத்திருந்து
வெந்து நொந்துச் சாகிறான்
பாவப்பட்ட அவன்...

4 comments:

  1. வணக்கம்
    ஐயா
    சொல்வது உண்மைதான் சொல்லிய விதம் சிறப்பு ஐயா.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மனதில் ஊனம் உள்ளவன்.

    ReplyDelete
  3. மனதில் ஊனம் உள்ளவன்.

    ReplyDelete
  4. பிறர் அழைத்துப் பேசவேண்டும் என்று காத்திராமல் நாமே தொடங்கி வைப்போம் உரையாடலை.

    ReplyDelete