Monday, March 21, 2016

தெறி"க்கும் புதுக்கவிதைத் துணையுடன்....

இமையது மூடியே
இரசித்திடும் வகையில்
இதமாய்ப் பதமாய்

இருசெவி வழியினில்
இதயம் தொடவென
முயன்று தோற்ற தாலே...

தலையினைச் சுற்றி
மூக்கினைத் தொடுதல்
அலுப்பைத் தந்ததாலே

சுண்டைக்காய்  கால்பணம்
சுமை கூலி முழுப் பணம்
ஆன கதையைப் போல

கருவின் அழகினை
இலக்கண ஒப்பனை
மறைத்துத் தொலைப்பதாலே

சந்தச் சந்தன
குளுமையும் மணமும்

சிந்தனைக் குருதியின்
வேகமும் வெப்பமும்

நேரெதிர் முனையென
என்றும் இணைய
இயலாப் பொருளென

கண்டு கொண்டதாலே
உணர்ந்து தெளிந்ததாலே

அதிரடிப் படையென
உடனடி இலக்கினை
அடைந்திடும் நோக்கினிலே

விழிவழி நுழைந்து
அறிவினை அடைந்திடும்
புதுமொழி கண்டோம் நாமே

சலிக்கும்
மரபினை விடுத்து
புதுவழி கண்டோம் இனிதே

"தெறி"க்கும்
புதுக்கவிதைத்  துணையுடன்
புது யுகம் செய்வோம்  இனியே 

6 comments:

  1. அழகிய வரிகள் அர்த்தம் பொதிந்தவை அருமை கவிஞரே...

    ReplyDelete
  2. மரபுஓசையில் தொடங்கி, புதுக்கவிதையாய் முடித்ததன் வேறு பொருள் ஏதுமுண்டா? (நீங்கள் சிலவற்றை நுட்பமாய்ச் சொல்லாமலே செய்வீர்களே அய்யா?)

    ReplyDelete
  3. அருமையான கவிதை. புதுக்கவிதை, மரபுக் கவிதை இரண்டையும் ரசிக்க நாங்கள் ரெடி!

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா

    கவிதை வரிகள் ஒவ்வொன்றையும் மிகஅருமையாக இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. புதுக்கவிதைக்கோர் புதுயுகம் படைத்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete