Sunday, March 27, 2016

கவிதையைப் போலவும்...

"இப்படி
விழுந்து விழுந்து ரசிப்பதற்கும்
தொடர்ந்து விடாது ரசிப்பதற்கும்
இதில் அப்படி என்னதான் இருக்கு ? "
என விலகி நின்றும்
விலகியும்  போயினர் சிலர்

"இதில் இறங்க விருப்பமில்லை
தேவையுமில்லை "என
அதனால் விரிந்த முன்பரப்பில்
அமர்ந்து எழுந்து
மனம் ஒட்டாதே  போயினர்  பலர்

"இதனில்
முழுதும் நனைந்திடாது
பட்டும்படாமலும் ரசிப்பதே சுகம் "என
கால் மட்டும் நனைத்துப்
உற்சாகம் கொண்டு  நகர்ந்தனர் சிலர்

"இதனுள்
வீழ்ந்துக் கிடப்பதும்
நீந்திக் களிப்பதும்தான் பேரானந்தம் "என
செயற்கை அணிகலன்கள்
அனைத்தையும் அகற்றி
மூழ்கிச் சுகித்தனர் வெகு சிலர்

"இந்த
விரிந்து பரந்த
பிரமாண்டம்தான் எத்தனைப் பேரின்பம் "என
வியந்தும் விக்கித்தும்
தனைமறந்தும் சூழல் மறந்தும்
தவசியாய்க் கிடந்தனர் வெகு வெகு சிலர்

தன்னிலை மாறாது
எப்போதும்போல்
அதுவாகவே அது இருப்பினும்
எல்லோரின் நினைப்புக்கும்
ஏற்றதாகவும் இருந்தது
விரிந்து பரந்துக் கிடந்த அந்த நீலக்கடல்

கவிதையைப் போலவும்... 

5 comments:

  1. கவிதையையும் நீலக்கடலையும் ஒப்பிட்டுச் சொல்லியுள்ள தங்கள் ஆக்கம் மிக அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அருமை .வித்தியாசமான சிந்தனை.கடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல கற்பனைகளுக்கும் உறைவிடமாய அமையும் பிரம்மாண்டம் .

    ReplyDelete
  3. கடலும், கவிதையும் அருமை.

    ReplyDelete