Monday, March 28, 2016

தலைவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்..

தலைவர்களைத்
தொந்தரவு செய்யாதீர்கள்

அவர்கள்
நமக்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

கொள்கைப்படி
இணைவது எனில்
முரண்பட வாய்ப்புண்டு என்பதால்

கொள்கைகளை ஓரம் வைத்து விட்டுத்தான்
நமக்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

அவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்

மிகக் குறைந்த செயல்திட்டம் எனில்
பதவி பிடிப்பதுதான்

அதற்கும் மிகக் குறைவாக
செயல்திட்டம் வகுத்துச் சேர
வாய்ப்பே இல்லை
அது கூட நமக்காகத்தான்

அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்

திருமணம்  அனைவரும் அறியச் செய்யலாம்
சீர் செனத்தி எல்லாம்
தனியாகப் பேசினால்தான் சரியாய் வரும்
மாறிச் செய்தல் மரபில்லை

பேசி முடியட்டும்
திருமணம் நம் முன்னால்தானே
கொஞ்சம் பொறுமையாய் இருங்கள்

இன உணர்வு
மத உணர்வு
மொழி உணர்வு
ஜாதி உணர்வு
பண உணர்வு
அனைத்தும் நமக்குண்டு என்பதுவும்

இந்தத் தேர்தலில்
எதைத் தூக்கி
எதை அமுக்கினால்
எல்லாம்  சரியாய் வரும் என்பது
அவர்களுக்கு நன்றாகத் தெரியும்

நாம் அவசரப் படாமல் இருப்போம்

கூட்டணி முடிவானபின்
ஒரே மேடையில்
ஒருவர் கையை ஒருவர் பிடித்து
உயரத்  தூக்கி
கொள்கைப் பிரகடனம் செய்வார்கள்

அது நமக்கும்
உடன்பாடாகத்தான் தெரியும்
அல்லது
தெரியவைப்பார்கள்

மதுக் கடையை
மூடச் சொல்லிக்  கோரும்
எந்தக் கட்சியும்
தொண்டர்களை குடிக்காதே எனத்
தொந்தரவு செய்வதில்லை அல்லவா

அது நமக்கு உடன்பாடுதானே

அப்படித்தான்

அவர்கள் கூட்டணித் தர்மத்தை
கொள்கை கோட்பாட்டை
நமக்கு உடன்பாடாக மட்டுமல்ல
நாம் இரசிக்கும்படியாகவே
மிக அருமையாகச் சொல்வார்கள்

எனவே தலைவர்களை
இப்போது
தொந்தரவு செய்யாதீர்கள்

அவர்கள் நமக்காகத்தான்
பேசிக் கொண்டிருப்பதாக
நடித்துக் கொண்டிருக்கிறார்கள்

நாமும் அவர்களை
நம்புவது போலவே
 நடித்துக் கொண்டிருப்போம்  

5 comments:

  1. அருமை கவிஞரே நயமான உள்க்குத்து நன்று
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. /மிகக் குறைந்த செயல்திட்டம் எனில் பதவி பிடிப்பதுதான்//

    ஓஹோ !

    //எனவே தலைவர்களை இப்போது தொந்தரவு செய்யாதீர்கள்//

    சரி !!

    //அவர்கள் நமக்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்//

    பேசிக்கொண்டே இருக்கட்டும்.

    கடைசியில் நடப்பது என்னவோ நடக்கத்தான் போகிறது. அதில் எந்தவொரு மாற்றமும் நிகழ வாய்ப்பே இல்லை என நன்றாகவே தெரிகிறது.

    அதுவரை நகைச்சுவைக் காட்சிகள் போல நாமும் இவர்கள் அனைவரின் பேச்சுக்களையும் கேட்டு மகிழ்வோம்.

    ReplyDelete
  3. கொள்கைகளை ஓரம் வைத்து விட்டுத்தான்
    நமக்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்//

    அருமை.

    ReplyDelete
  4. கொள்கையாவது கோட்பாடாவது. தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி. தேர்தல் முடிவுக்குப் பின் ஒரு கூட்டணி.

    ReplyDelete
  5. தேர்தல் காலத்தில் வெளிவந்த இந்தக் கவிதை பல சங்கதிகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது.
    த ம 5

    ReplyDelete