Tuesday, June 7, 2016

மயில்களும் காகங்களும்

" நீ யார் பக்கம் "என
 மனவெளியில்
எப்போதும் போல
எண்ணிக்கையும் தரமும்
போரிடத் தயாராகி
அவனைக்  குழப்பின

இருவர் கைகளிலும்
கேடயங்கள்
விதம் விதமாய்
ஆயுதங்கள்

"எங்கும் எதிலும் எப்போதும்
வெற்றியை தீர்மானிப்பது நான்தான்"என
மீசையை முறுக்கியது எண்ணிக்கை

"தற்காலிக சந்தோஷமே
வெற்றி எனக் கொண்டால்
நீ சொல்வது சரி

நீடித்து நிலைத்து நிற்பது
வெற்றி எனச் சொன்னால்
அது நான்தான் "என
எப்போதும்போல
அடக்கமாகப் பேசியது தரம்

எகத்தாளமாகச் சிரித்தது எண்ணிக்கை
"நீடித்து நிலைத்து என்றால் எப்போது ?
போய்ச் சேர்ந்த பின்பா?

மூச்சுத் திணறி இறந்த பின்
வீசுகிற புயற் காற்று
பிணம் புரட்டித்தான் போகும்
உயிர் காக்காது " என்றது

பதிலேதும் பேசாது
தடுமாறித்   தரம் நிற்க

ஏற்கெனவே
குழப்பத்தை ரசித்த எண்ணிக்கை
இப்போது
குரங்காட்டம் போடத்துவங்கியது

அன்றாட நிகழ்வுகளில்
அநியாயக் காரனின் அட்டகாசங்கள்
களியாட்டம் போட

நியாயஸ்தனின் வாதங்கள்
தலை கவிழ்ந்து நிற்பது போல
அவனுக்குள்ளும் ஒரு  சிறுச் சறுக்கல்

தரத்தினை  விடுத்து
எண்ணிக்கையை
கூட்டலாமா என்ற
ஒரு பித்தலாட்ட எண்ணம்
அவனுள்  மெல்லத்  துளிர்ப்பதை
அவனால்ஏனோ  தவிர்க்க இயலவில்லை

6 comments:

  1. தரம் - அது
    நிரந்தரம் - எனவே
    தரம் நாடுவோர்
    தவறாமல் நாடுவது
    என்பதே
    தரம் பெறும் தரம்

    ReplyDelete
  2. எதையோ மனதில் நினைத்து எழுதுவது போல் இருக்கிறதே

    ReplyDelete
  3. எண்கள் எல்லாம் மாயை! எல்லாம் உணர்ந்த தாங்கள் தடுமாறலாமா? தரமே நிரந்தரம்!

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    நினைப்பெதெல்லாம் நடப்பது என்றால் இறைவன் ஏது

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete