Friday, July 15, 2016

உணர்தலும் அறிதலும்....

" உணர்ந்து
இரசித்தவர்களால்
படைக்கப் படும்
படைப்பிற்கும்

அறிந்து
இரசித்தவர்களால்
படைக்கப்படும்
படைப்பிற்கும்

அதிக வித்தியாசம் தெரிகிறதே
அது ஏன் ? எதனால் ? "

என்றான் நண்பன்

வீட்டின் வெளியில்
பச்சைப் புல் விரிப்பில்
மாலை வெய்யிலின்
இதமான சூட்டில்
குளிர்ந்துக்  கிடந்தோம் அப்போது

மெல்லத் தலை நிமிர்ந்து
"அதை நீ
அறியச் சொல்லவா ?
அல்லது
உணரச் சொல்லவா '" என்றேன்

சற்று யோசித்தவன்
"உணரவே சொல் ? என்றான்

அவனை முன்னறையுள்
கண்ணாடி ஜன்னலருகில் நிறுத்தி
மாலைச் சூரியனைக் காட்டினேன்

சூரியன் அங்குதான் இருந்தது
ஒளியும் அதே நிலையில்தான் வந்தது
ஆயினும் சூடு மட்டும் இல்லை

"நேரடியாய் ஒளியை அனுபவித்ததற்கும்
ஒன்றின் வழி அனுபவிப்பதற்கும்
என்ன வித்தியாசம் "என்றேன்

அவன் பதில்
"சூடாக "இருக்கும் என நினைத்தேன்

 அவனும் படைப்பாளி என்பதால்
"ஜீவன் "என்றான் சிரித்தபடி
என் விளக்கத்தை இரசித்தபடி

4 comments:

  1. ஜீவனோடு பின்னப்பட்ட கவிதையும் உள்ளார்ந்த ஆழமான கருத்தும் அருமை ஐயா.

    கோ

    ReplyDelete
  2. பதிவை உணர்ந்து இரசித்தேன் கவிஞரே
    த.ம. 2

    ReplyDelete
  3. ஒரு படைப்பாளி என்ற முறையில், உங்களிடமிருந்து தெறித்த வார்த்தைகள்,அனுபவமான வரிகள்.

    ReplyDelete
  4. அருமையான உதாரணம் தந்து விளக்கியது நன்று.

    ReplyDelete