Wednesday, July 20, 2016

சூழல் கோகுலம் .. சொற்கள் கோபியர்கள்

சூழல் இரம்மியமாக
அதனை இன்னும்
இரம்மியமாக்கும் விதமாய்
மெல்ல மெல்லத்  தோகை விரிக்கும்
அந்த அழகு மயிலாய்...

மனச் சூழல் இரம்மியமாக
அதனை இன்னும்
இரம்மியமாக்கும் விதமாய்
மெல்லக் கவிக் குழலெடுத்து
இசைக்கத் துவங்குகிறான் அவன்..

குழலிசைக் கேட்டு
சுயமிழந்து
கள்ளுண்ட வண்டுகளாய்
கண்ணனைச் சூழும்
கோகுலத்துக் கன்னியராய்

கவிமனம் அறிந்து
ஒற்று விரிவு களைந்துச்
சுய அழகோடு நிர்வாணமாய்
அவனைச் சூழ்ந்து நிற்கிறது
அழகுத் தமிழ் வார்த்தைகள்

கௌசிகன் ஆணைப்படி
காலத்தால் இற்றுக் கிடந்தக்   கற்பாறையில்
கோதண்டராமன்
பொற்பாதம்   பதிக்க
புத்துயிர்ப்  பெரும் அகலிகையாய்

தோன்றிய நாள்முதல்
உருவுக்குப்  பொருள் மட்டுமே
காட்டி வந்த சொற்களெல்லாம்
கவிஞனின் தீண்டுதலில்
உணர்வுத் தீயாகித் தகிக்கிறது

அவன்
மேலும் இசைக்கிறான்

சூழல் கோகுலமாகிறது
சொற்கள் கோபியராகின்றனர்

அவனும் கண்ணனாகி
சொற்களுடன் மெய்ம்மறந்து
சல்லாபிக்க

இசை அக்கணம் முதல்
அவனை மீறி
இசைக்கத் துவங்குகிறது

அவனும்  இரசிகனாகி
அதனை  இரசிக்கத் துவங்குகிறான்

சல்லாபத்தில் உச்சத்தில்
இசை மெல்ல மெல்ல
தன் உருமாற
வரி வடிவாக...

ஒர் அற்புதக் கவிதை
ஜனித்துச் சிரிக்கிறது

6 comments:

  1. அப்போ வாசகர்கள் யார்?

    ReplyDelete
  2. ஒர் அற்புதக் கவிதை
    ஜனித்துச் சிரிக்கிறது

    ReplyDelete
  3. ஸ்ரீராம். //

    .உருப்பெற்றதும் இரசிப்பவர்கள்

    ReplyDelete
  4. உருப்பெற்ற கவிதை அழகு இரசித்தேன் கவிஞரே

    ReplyDelete
  5. அருமை... ரசித்தேன் ஜி!

    ReplyDelete
  6. கவிதை மிக்க ரசனையோடு உள்ளன

    ReplyDelete