Friday, January 20, 2017

நிமிரச் செய்து போகிறது புதிய தலைமுறை....

கொசு ஒழிக்க விதம் விதமாய்
பொருட்களைப் பயன்படுத்தி
ஓய்ந்துப் போனது
எங்கள் தலைமுறை

சாக்கடையை ஒழித்துவிடத்
துணிந்துக் களத்தில்
இறங்கிவிட்டது
இன்றைய தலைமுறை

விஷமரம் ஒழிக்க இலை நசுக்கி
கிளை நறுக்கி சக்தி இழந்து
தவித்துப் போனது
எங்கள் தலைமுறை

ஆணிவேர் அறுத்து மரத்தை
அடியோடுச் சாய்த்து
வெற்றியடையுது
இளைய தலைமுறை

தலைமைக்குப் பின்னோடி
பிரச்சனைக்குத் தீர்வுத் தேடி
சோர்ந்துச் சாய்ந்தது
எங்கள் தலைமுறை

பிரச்சனையைத் தலைமையாக்கி
தலைவர்களை மூச்சிறைக்க
பின் தொடரச் செய்துவிட்டது
இளைய தலைமுறை

தகவல் தொடர்பு
யானைகளைக் கொண்டு
பிச்சையெடுத்துப்
பெருமை கொண்டது
எங்கள் தலைமுறை

தகவல் தொடர்பினைக்
கூர்வாளாக்கி
போராட்டக் களத்தை
கூர்மைப்படுத்திப்
பெருமைப் பெற்றது
புதிய தலைமுறை

அனைத்து முறைகளிலும்
நம்பிக்கையிழந்து
புலம்பி நித்தம்
ஓயத் துவங்கியது
எங்கள் தலைமுறை

புதியவகைஅணுகுமுறையில்
நிமிரத் துவங்கி
எங்கள் தலமுறையையும்
மெல்ல மெல்ல
நிமிரச் செய்து போகிறது
புதிய தலைமுறை

13 comments:

  1. உண்மை ஐயா. சிறந்த முறையில் இது நடந்து இருக்கிறது.

    ReplyDelete
  2. எழுச்சி தொடரட்டும்...

    ReplyDelete
  3. இந்த இவர்களின் நிமிர்ந்த நேர்கொண்ட போராட்டத்தைவிட .....

    தலைமுறை இடைவெளிகளையும்

    இதுகாறும் ஒவ்வொரு போராட்டங்களிலும் நாம் கடைபிடித்து வந்த வழுவட்டைத் தனத்தையும் ....

    இன்று புதிய இளம் இரத்தமான இவர்கள் நடத்திக்கொண்டு போகும் பேரெழுச்சி மிக்க போராட்டத்தையும் ஒப்பிட்டுத்

    தங்கள் பாணியில் தங்கமாகச் சொல்லிச் சென்றுள்ள வரிகளில் உள்ள எழுச்சிமிக்கப் பாணியை மட்டுமே நான் அப்படியே ரஸித்து மகிழ்ந்து சொக்கிப்போனேன். :)

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். :)

    ReplyDelete
  4. அரசியல்வாதிகளை ஓரம் கட்டியது ஒன்றே போதும்.

    //பிரச்சனையைத் தலைமையாக்கி
    தலைவர்களை மூச்சிறைக்க
    பின் தொடரச் செய்துவிட்டது
    இளைய தலைமுறை.. //

    என்ன ஒரு கவிதை! திருப்பித் திருப்பி படித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  5. இன்றைய நிலையில் உண்மை!

    ReplyDelete
  6. நிறைய தகப்பன் சாமிகள் உருவாகிவிட்டனர்

    ReplyDelete
  7. http://bakutharivaalan.blogspot.com/2017/01/blog-post.html

    ReplyDelete
  8. அரசியலில் இறங்காது
    தமிழனின் முதலீடான
    கல்வியை மேம்படுத்தியவாறு
    ஒழுக்கம், பண்பாடு பேணி
    எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான
    எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு
    மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி
    எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!

    ReplyDelete
  9. மிகவும் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற போராட்டங்கள் வெல்லும் என்பதையும் சொல்லியிருக்கிறது...

    ReplyDelete
  10. //பிரச்சனையைத் தலைமையாக்கி
    தலைவர்களை மூச்சிறைக்க
    பின் தொடரச் செய்துவிட்டது
    இளைய தலைமுறை.. // அருமை அருமை!!

    ReplyDelete
  11. கவிதையை ரசிப்பதா கூறு பொருளைப் பாராட்டுவதா தெரியவில்லை

    ReplyDelete
  12. ஆயிரம் இளைஞர்கள் இணைந்துவிட்டால் ஆயுதம் எதுவும் தேவையில்லை என்பதற்கு சிறந்த உதாரணமே எங்கள் தலைமுறை.

    இனிமேல் யாராலும் எங்களை ஏமாற்ற முடியாது.

    நன்றி ஐயா.

    ReplyDelete