Thursday, August 9, 2018

முகம் மறைத்துப் புரட்சித் தீமூட்டும்....

பிரச்சனையாளர்களாய் இருப்போம்
எப்போதுமே
பிரச்சனையாளர்களாய் இருப்போம்

பிரச்சனை சிறிது எனில்
ஊதி ஊதிப் பெரிதாக்குவோம்

பிரச்சனை ஏதும் இல்லையெனில்
நாமே அதை உண்டாக்குவோம்

ஏனெனில் பிரச்சனை இல்லையெனில்
நம்மை கண்டு கொள்வார் இல்லை

நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள
நியாய வழியில் வாய்ப்பே இல்லை

நேரடிச் சண்டையில்
சிறிதேனும் காயம் பட வாய்ப்புண்டு

நிழல் யுத்தத்தில்
சிறுகீறலுக்கும் நிச்சயம் வாய்ப்பில்லை

கவனமாய் முகம் தெரியாது
முகமூடி அணிந்து கொள்வோம்

பிறர் பொருளுக்கு ஆசைப்படும்
திருடனுக்கு மட்டுமல்ல

சமூக அமைதியைக் குலைக்கும் நமக்கும்
அது  நிச்சயம் அவசியம்

சொல்பவர்கள் ஆயிரம் சொல்லட்டும்

தானெரித்த  வீட்டில் சிகரெட்டுக்கு
நெருப்பெடுக்கும் சுகம்
அனுபவித்தால்தான் புரிந்து கொள்ள முடியும்

எரிபவர்கள் குறித்து வருந்துபவனுக்கு
இந்தச் சுகம் புரிய
நிச்சயமாய்  வாய்ப்பே இல்லை

முகம் மறைத்துப் புரட்சித் தீமூட்டும்
நவயுகப்  போராளிகளே...

வாருங்கள்

இன்றைக்கு எதைப் பற்ற வைப்பது
என்பது குறித்துச் சிந்திப்போம்

நாடு எப்படியோ நாசமாகட்டும்

நம்மை அடையாளப் படுத்திக் கொள்வதில்
நாம் நம்  கவனத்தைக் குவிப்போம்

10 comments:

  1. ஊர் ரெண்டு பட்டால்தானே கொண்டாட்டம்!

    ReplyDelete
  2. அழிவுப்பாதையைப் பற்றிய
    ஆக்கபூர்வமான எழுத்துக்கள்.

    தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள வரிகள்
    ஒவ்வொன்றிலும் உங்களின் ஆவேசம் புரிகிறது.

    தங்களைத் தாங்களே
    அடையாளப் படுத்திக் கொள்ளாவிட்டாலும்,
    தன்னலமற்ற தியாகிகள் பலர் வாழ்ந்து
    மறைந்துள்ள நாடு இது.

    // நாடு எப்படியோ நாசமாகட்டும் //
    என எவர் நினைத்தாலும்
    அது மாபெரும் தவறு ஆகும்.

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    \\ஏனெனில் பிரச்சனை இல்லையெனில்
    நம்மை கண்டு கொள்வார் இல்லை//

    நிச்சயம் புரட்சி செய்ய வேண்டும்..நல்ல விடயத்துக்காக.அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. சமூகத்திற்கு சவுக்கடி வார்த்தைகள்.

    ReplyDelete
  5. கிண்டல், ஆதங்கம், வேதனை அனைத்தையும் வெளிப்படுத்திய விதம் அருமை.

    ReplyDelete
  6. இப்படித்தான் இருக்கிறது...

    ReplyDelete
  7. யாரையாவது குறித்தா

    ReplyDelete
    Replies
    1. ஆம் முகம் காட்டாது பிரச்சனைக்குரிய விஷயங்களாக எழுதி தன்னை வீரர்களாகக் காட்டிக் கொள்ளும் அனைவரையும்..

      Delete
  8. நாட்டு நடப்பே அப்படித்தான் இருக்கிறது அதை சட்டி காட்டியமைக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  9. தற்போது சிறு பிரச்சனையை பெரிதாக ஊதியேதான் அனைத்து அரசியல்வாதிகளும் கவனம் ஈர்கிறார்கள்

    ReplyDelete