Monday, June 8, 2020

நதி மூலம்...ரிஷிமூலம்..

ஹோட்டலில் உணவை இரசித்து
உண்ணும் ஆசை இருக்கிறதா ?
தயவு செய்து  சமயலறையை
எட்டிப் பார்க்காதிருங்கள்
அதுதான் சாலச் சிறந்தது

ஒரு சிற் பத்தின் அற்புதத்தை
இரசித்து வியக்க ஆசை இருக்கிறதா ?
அதற்குச் சிற்பம் செதுக்குமிடம்
ஏற்ற இடமில்லை
கலைக் கூடமே சரியான இடம்

பெருக்கெடுத்தோடும் ஆற்றின்
அழகை இரசித்து மகிழ ஆசையா ?
அதற்கு உற்பத்தி ஸ்தானம்
சரிப்பட்டு வராது
விரிந்தோடும் மையப் பகுதியே அழகு

குழந்தையின் அழகை மென்மையை
தொட்டு ரசிக்க ஆசையா ?
அதற்குப் பிரசவ ஆஸ்பத்திரி
சரியான இடமில்லை
அது தவழத்துவங்குமிடமே மிகச் சரி

கவிதையின் பூரணச் செறிவை
ருசித்து மகிழ ஆசையா ?
அதற்கு கவிஞனின் அருகாமை
நிச்சயம் உசித மானதில்லை
தனிமையே அதற்கு யதாஸ்தானம்

நதி மூலம் ரிஷி மூலம் மட்டுமல்ல
எந்த மூலமுமே அழகானதுமில்லை
கற்பனை செய்தபடி நிஜமானதுமில்லை
அதனை அறிந்து தெளிந்தவனுக்கு
ஏமாற்றம் நேர்வதற்கு வாய்ப்பே இல்லை

( மனம் கவர்ந்த ஒரு தலைவனை
நேரடியாகச் சந்திக்க விளைந்த ஏமாற்றம்
தந்த  சிந்தனை )

10 comments:

  1. வணக்கம் சகோதரரே

    அருமையான சிந்தனைக் கவிதை.
    நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மைதான்.

    /நதி மூலம் ரிஷி மூலம் மட்டுமல்ல
    எந்த மூலமுமே அழகானதுமில்லை
    கற்பனை செய்தபடி நிஜமானதுமில்லை
    அதனை அறிந்து தெளிந்தவனுக்கு
    ஏமாற்றம் நேர்வதற்கு வாய்ப்பே இல்லை/

    அருமையான வரிகள். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. ஏமாற்றம் தந்த சிந்தனை நல்லதோர் கவிதையாக.

    ReplyDelete
  3. எழுத்தாளர்களையோ பிரபலங்களையோ நெருங்கிச் செல்லாதிருப்பதே நல்லது - நமக்கு!

    ReplyDelete
  4. சிறப்பான சிந்தனை ஐயா.

    ஒரு நொடியில் ஏமாற்றம் தந்துவிடும் சில சந்திப்புகள்....

    ReplyDelete
  5. மனம்கவர்ந்தவர் ஏமாற்றியதும் நன்மைக்கே ஒரு அழகிய சிந்தனை வெளிப்பட்டது

    ReplyDelete
  6. நானும் சில சமயம் ஏமாந்திருக்கிறேன். லட்சிய புருஷர்களை
    அவர்களது கருத்துகள் வழியாகச் சந்திப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
    நம் கருத்தில் அவர் ஒருவர்தான். அவர் கருத்தில் நம்மைப் போல ஆயிரம்.
    .

    ReplyDelete
  7. அனுபவப்பாடம் அருமையான கவிதையின் பிறப்பிடமானது.

    வாழ்த்துக்கள்.

    கோ.

    ReplyDelete