Sunday, August 5, 2012

சில "ஏன் "கள்

அழகானவர்கள் அதிகம்
அலங்கரித்துக் கொள்வதில்லை
சுமாரானவர்களே அதிகம்
அலட்டிக் கொள்கிறார்கள்

செல்வந்தர்கள் அதிகம்
பகட்டித் திரிவதில்லை
நடுத்தரவாசிகளே அதில்
அதிக கவனம் கொள்கிறர்கள்

நல்லவர்கள் தன்னை நிரூபிக்க
அதிகம் முயலுவதில்லை
பித்தலாட்ட்க்காரர்களே
அதிகம் மெனக்கெடுகிறார்கள்

சக்திமிக்கவர்கள் அதிகம்
சச்சரவுகளை விரும்புவதில்லை
பலவீனமானவர்களே எப்போதும்
நெஞ்சு நிமிர்த்தித திரிகிறார்கள்

அறிவுடையோர் தன்மீது
வெளிச்சமடித்துக் கொள்வதில்லை
முட்டாள்களே எப்போதும்
மேடைதேடி அலகிறார்கள்

ஆன்மீகவாதிகள் அதிகம்
கடவுள் நினைப்பில் இருப்பதில்லை
நாத்திகர்களே எப்போதும்
அவர் குறித்தே பேசித் திரிகிறார்கள்

மொத்தத்தில்

இருப்பவர்கள் இருப்பது குறித்து
அதீதக் கவனம் கொள்வதில்லை
இல்லாதவர்களே இல்லாமை குறித்து
அதீதக் கவலை கொள்கிறார்கள்

46 comments:

  1. இன்றைய வாழ்வில் நாம் சந்திக்கும் காட்சியை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். அதனால்தானே நம் முன்னோர்கள் சொன்னார்கள், அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான் என்று.

    ReplyDelete
  2. சிந்திக்க வேண்டிய விஷயங்களை எளிமையாகவும் அழகாகவும் கவிதை ஆக்கிவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  3. ஒவ்வொருத்தரும் எப்படி இருக்கிறார்கள் என்னும் உண்மையை அழகாக சொல்லி விட்டீர்கள்..

    நன்றி…
    (த.ம. 3)

    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  4. உண்மையான விசயங்களை அழகாக வடித்துள்ளீர்கள்....சார்
    பலமாக சிந்திக்கக் வேண்டிய வரிகள் (த.ம.4)

    ReplyDelete
  5. ஒரு நாத்திக குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டதன் மூலம், பண்பு, நியாயம், நேர்மை, மனிதநேயம் போன்ற அவர்களுடைய குணங்களின் இயல்பினை அனுபவ பூர்வமாய் உணர்ந்தவள் என்ற வகையில் கவிதையில் காணப்படும் ஆன்மீகவாதிகள் நாத்திகர்கள் குறித்தப் பத்தியில் மட்டும் மனம் உடன்பாடாகவில்லை. மற்ற அனைத்திலும் இருக்கும் உண்மை கண்டு வியந்துபோகிறேன் ரமணி சார். கடைசிபத்தியின் முத்தாய்ப்பான வரிகளில் மனம் பறிகொடுத்தேன். மனமார்ந்த பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  6. இல்லாத ஒன்றைப்பற்றித்தானே எப்போதும் நினைக்கிறோம். அருமை சார்.

    ReplyDelete
  7. உண்மை! சத்தியமான உண்மை.

    பல புராணக்கதைகளை நாத்திகர்கள் மூலமாகவே தெரிந்து கொண்டேன். ஆனால் குதர்க்கத்தை விட்டுவிட்டு வாசிக்கணும்:-)

    ReplyDelete
  8. ஒரு குடம் நிரம்பும்போது ஏற்படுத்தும் ஒலி அது நிரம்பிய பின் உண்டாவதில்லை.நிறைவுக்கும் வெற்றிடத்துக்கும் உள்ள இடைவெளி எப்போதுமே தொடர்ந்தபடியேதான் வாழ்க்கை நகர்கிறது.

    நல்ல பதிவு ரமணியண்ணா.

    ReplyDelete
  9. மொத்தத்தில் வற்றிய ஓலையே சலசலக்கும் .
    நிதர்சனமான உண்மையை எடுத்துச்
    சொன்ன விதம் அருமை ரமணி சார்.

    ReplyDelete
  10. எப்படி நண்பரே..
    கருக்களோடு அழகாக சிநேகம் வைத்திருக்கிறீர்கள்
    இருப்பதை இருக்கிறதென்று
    காண்பிக்க யாரும் விழைவதில்லை
    இல்லாததை பெருமைக்காக
    இருக்கிறதென்று காண்பிப்பதே இவ்வுலகம்..

    அதுசரி குறைகுடம் தானே கூத்தாடும்...

    ReplyDelete
  11. பலவீனமானவர்களே எப்போதும்
    நெஞ்சு நிமிர்த்தித திரிகிறார்கள்

    ReplyDelete
  12. //இருப்பவர்கள் இருப்பது குறித்து
    அதீதக் கவனம் கொள்வதில்லை
    இல்லாதவர்களே இல்லாமை குறித்து
    அதீதக் கவலை கொள்கிறார்கள்
    //

    நிறைகுடம் தளும்புவதில்லை....

    அருமையான வரிகள் மூலம் சொன்ன விஷயங்கள் நன்று. த.ம. 6

    ReplyDelete
  13. இதே மில்லிய டாலர் கேள்விகள் என்னுள்ளும்.

    ReplyDelete
  14. நிதர்சமான உண்மை அழகா சொன்னீங்க

    ReplyDelete
  15. சில‌ 'ஏன்'க‌ள் வெகு சுவார‌ஸ்ய‌மான‌வை.. தேட‌லில் தென்ப‌டும் நித‌ர்ச‌ன‌ம்!

    ReplyDelete
  16. இருப்பவர்கள் இருப்பது குறித்து
    அதீதக் கவனம் கொள்வதில்லை
    இல்லாதவர்களே இல்லாமை குறித்து
    அதீதக் கவலை கொள்கிறார்கள்///


    மிக சரியாக சொல்லியுள்ளிர்கள்

    ReplyDelete
  17. சிந்திக்க வேண்டிய விஷயம்...

    ReplyDelete
  18. மிகமிகச் சரியான கருத்து. இல்லாதவர்களே இல்லாமை பற்றிக் கவலை கொள்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு வரியிலும் நிதர்சனம் தெரிகிறது.

    ReplyDelete
  19. // இருப்பவர்கள் இருப்பது குறித்து
    அதீதக் கவனம் கொள்வதில்லை// ஆகா அற்புதம்

    ReplyDelete
  20. இருப்பவர்கள் இருப்பது குறித்து
    அதீதக் கவனம் கொள்வதில்லை
    இல்லாதவர்களே இல்லாமை குறித்து
    அதீதக் கவலை கொள்கிறார்கள்

    உண்மைதான் ஐயா இருப்பவர்களுக்கு பசியின் கொடுமை தெரியாது இல்லாதவருக்கே ருசியும் அதிகம் தெரியும்.

    ReplyDelete
  21. //இருப்பவர்கள் இருப்பது குறித்து
    அதீதக் கவனம் கொள்வதில்லை
    இல்லாதவர்களே இல்லாமை குறித்து
    அதீதக் கவலை கொள்கிறார்கள்//

    ரொம்பச்சரியான உண்மை.

    ReplyDelete
  22. அருமை....உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியது கவிதை...

    ReplyDelete
  23. எல்லாமே பதில் தெரியாத ஏன் கள்தான்

    ReplyDelete
  24. சிறப்பாக அனுபவத்தில் ஆராய்ந்து எழுதப்பட்ட வரிகள்!

    அழகாய் தொடருங்கள்..வாழ்த்துகள்!

    ReplyDelete
  25. அழகான வரிகள்...ரமணி சார்..

    நன்றி.

    ReplyDelete
  26. ஆமாம் சார். நீங்க சொல்றது சரி தான்

    ReplyDelete
  27. நீங்கள் சொன்ன மனிதர்கள் எங்கேயும் இருக்கிறார்கள். ராஜாவை விட ராஜா மாதிரி வேஷம் போட்டவன் ரொம்பவும் அலட்டுவான். அரண்மனையில் உள்ளே இருப்பவனைவிட வெளியில் நிற்கும் காவலாளி ரொம்பவும் நம்மை அதிகாரம் பண்ணுவான். கலைஞர் கருணாநிதி கூட ஒரு படத்தில் “ அரண்மனை நாயே அடக்கடா வாயை “ என்று வசனம் தீட்டி இருக்கிறார்.

    ReplyDelete
  28. உண்மைக்கு சாட்சி தேவையில்லை. பொய்க்கு பெரிய ஜோடனை தேவைப் படுகிறது! அருமையாகச் சொன்னீர்கள்.

    //இல்லாதவர்களே இல்லாமை குறித்து
    அதீதக் கவலை கொள்கிறார்கள்//

    என்பதை விட இருப்பது போல ஷோ காட்டுகிறார்கள்!! :)))

    ReplyDelete
  29. குறைகுடம் தளும்பும் தானே ரமணி ஐயா.

    அருமையான பதிவுங்க. எப்படிங்க நீங்கள் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...!!!

    ReplyDelete
  30. இல்லாதவர்களே இல்லாமை குறித்து
    அதீதக் கவலை கொள்கிறார்கள்
    // ஏன் ?

    அருமை அய்யா..

    ReplyDelete
  31. ஒவ்வொரு பதிவிலும் அனுபவச் செறிவு அப்படியே தெரிகிறது.பாடங்கள் படிப்பதாகவே படுகிறது எனக்கு.நன்றி ஐயா !

    ReplyDelete
  32. உண்மை தான். குறை குடம் தழும்பும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். நல்ல பதிவு.

    ReplyDelete
  33. சிந்திக்கத்தூண்டிய வரிகள்

    ReplyDelete
  34. உங்கள் கவிதை நடையை பாராட்டும் வேளையில், எனக்கு நீங்கள் எழுதிய ஒரு செய்தியில் உடன்பாடு இல்லை.

    1) // ஆன்மீகவாதிகள் அதிகம்
    கடவுள் நினைப்பில் இருப்பதில்லை //

    ஒரு நாளில், ஒரு நொடி கடவுளை மனதார நினைத்தால் வரும் இன்பம் அவர்களுக்கு தெரியாமல் இருப்பதில்லை.

    2) //நாத்திகர்களே எப்போதும்
    அவர் குறித்தே பேசித் திரிகிறார்கள் //
    நாள் முழுவதும் கடவுளை திட்டிக் கொண்டு இருந்தால், கடவுளை மறக்காமல் நினைப்பதாக கருதுவது, வெல்லம்/sweet என்று வாயால் சொன்னாலே போதும், அதன் சுவை கிடைத்து விடும் என்று சொல்வதுபோல இருக்கிறது.

    ReplyDelete
  35. அழகானவர்கள் அதிகம்
    அலங்கரித்துக் கொள்வதில்லை
    சுமாரானவர்களே அதிகம்
    அலட்டிக் கொள்கிறார்கள்//

    என்ன குரு பொசுக்குன்னு பொட்டுல அடிச்சிபுட்டிய ஹி ஹி...!

    ReplyDelete
  36. நல்லவர்கள் தன்னை நிரூபிக்க
    அதிகம் முயலுவதில்லை
    பித்தலாட்ட்க்காரர்களே
    அதிகம் மெனக்கெடுகிறார்கள்//

    இது செமையா யாருக்கோ லாடம் கட்டி இருக்கார் குரு...!

    ReplyDelete
  37. வாவ்....எல்லாமே அசத்தல் குரு...!

    ReplyDelete
  38. ஞானத்தங்கம் என்பது இதைத்தானோ?

    ReplyDelete
  39. //இல்லாதவர்களே இல்லாமை குறித்து
    அதீதக் கவலை கொள்கிறார்கள்//
    அருமையான வரி....என்னை சிந்தனை செய்ய வைத்து விட்டது சார். மிக்க நல்ல பதிவு.

    ReplyDelete
  40. நிஜத்தை சின்ன வரிகளாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்.....

    ReplyDelete
  41. சிந்திக்க வைக்கும் வரிகள் Sir! இருப்பதை விட மனம் என்றும் இல்லாததை தானே தேடுகிறது!

    ReplyDelete
  42. இருப்பவர்கள் இருப்பது குறித்து
    அதீதக் கவனம் கொள்வதில்லை
    இல்லாதவர்களே இல்லாமை குறித்து
    அதீதக் கவலை கொள்கிறார்கள்

    "நச்...."

    ReplyDelete