Wednesday, August 5, 2015

நொடியில் யாரும் கவிஞராகக் கூடும்

விளம"தும் "மா "வும் தேமா
முறைப்படி அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
உடனடி யாக உன்னால்
இயற்றிடக் கூடு மாயின்
கவியென ஏற்பேன் " என்றான்
வலதுகை போன்றே நாளும்
என்னுடன் உலவும் நண்பன்

"இதந்தரு மனையி னீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும் "
முதல்வரி இதுவாய்க் கொண்டு
முத்தெனத் தொடரும் அந்தச்
சுதந்திரத் தேவிப் பாடல்
சந்தமென் நினைவில் ஊற
பதட்டமே சிறிது மின்றி
பகிர்ந்தேன் இந்தப் பாடல்

"சிந்தனை செய்ய வேணும்
சிலநொடி நேரம் வேண்டும் "
என்றுநான் சொல்வே னென்ற
நினைப்பினில் இருந்த நண்பன்
மந்திரம் சொல்லல் போல
நிமிடமாய்ச் சொல்லக் கேட்டு
வந்தெனைக் கட்டிக் கொண்டு
வாழ்த்தினைப் பகிர்ந்து கொண்டான்

எட்டயப் புரத்து வேந்தன்
இயற்றிய பாடல் தன்னை
நித்தமும் பயின்றால் சந்தம்
நிலையென நெஞ்சில் தங்கும்
பக்குவம் இதனை யாரும்
பழகினால் மட்டும் போதும்
நிச்சயம் நொடியில் யாரும்
கவிஞராய் மாறக்  கூடும்

17 comments:

  1. நண்பரே! தளைகள் தாண்டி
       நாட்டிய மாடும் சொற்கள்
    கண்களில் ஒளியாய் மின்னிக்
       கவிதையாம் அம்பின் விற்கள்
    தண்புனல் ஆறும் பள்ளம்
       தடுக்கிய அரு வியைப்போல்
    கொண்டுவந் திங்கே இன்பம்
       கொட்டினர் இரமணி ஐயா!

    அருமை ஐயா.

    ReplyDelete
  2. அருமை கவிஞரே வாழ்த்துகள்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  3. என்னையும் கவிதை பழகத் தூண்டுகிறது உங்கள் கவிதைகள்

    ReplyDelete
  4. அருமை அருமை ! ஐயா வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  5. நன்று...நன்று..

    ReplyDelete
  6. கவிஞா் கி. பாரதிதாசன் said...

    பெரும் பாக்கியம் செய்துள்ளேன்
    தங்கள் வாழ்த்தே எனக்குப்
    கிடைத்தற்கரிய பெரும் பேறு
    கரம் கூப்பி
    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
    வாழும் பாரதியே
    நீ வாழிய வாழியவே

    ReplyDelete
  7. சந்தம் நிலையாகத் தங்க தாங்கள் கூறிய வழிமுறையைப் பின்பற்றுவோம்.

    ReplyDelete
  8. அருமையான ஆலோசனை ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  9. தங்களைப் பின்பற்றினாலே நொடியில் எழுதலாம் ஐயா. இன்றைய வலைச்சர அறிமுகத்தில் தங்கள் அறிமுகம் கண்டேன். வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  10. வணக்கம்,
    ஆஹா அருமை,
    தங்கள் எழுத்துக்கள் நடையும் தான், வலைச்சரத்தில் தங்கள் அறிமுகம் கண்டேன், வாழ்த்துக்கள், நன்றி.

    ReplyDelete
  11. எல்லோருக்கும் கை கூடி வருமா தெரியவில்லை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வணக்கம்
    ஐயா

    ஐயனே கண்டேன் அன்பின் வார்த்தையை.
    ஐயமே அடங்கி அறிவு மயங்கி
    சட்டென உரைத்த செந்தமிழ் சொற்களை.
    சடுகதி விளங்கி அறிந்தேன்.

    அருமையாக உள்ளது ஐயா.
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் த.ம 10

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. எட்டயப் புரத்து வேந்தன்
    இயற்றிய பாடல் தன்னை
    நித்தமும் பயின்றால் சந்தம்
    நிலையென நெஞ்சில் தங்கும்
    பக்குவம் இதனை யாரும்
    பழகினால் மட்டும் போதும்
    நிச்சயம் நொடியில் யாரும்
    கவிஞராய் மாறக் கூடும்
    உண்மைதான் இரமணி ! இது என் சொந்த அனுபவம்

    ReplyDelete