Monday, November 30, 2015

சூழ் நிலைக் கைதிகள்

பிறப்பிடமும் இருப்பிடமும்
சேறுதான் சகதிதான் ஆயினும்
அவைகளுடன் எவ்வித சம்பந்தமுமின்றி
புனித நெருப்பாய்
...
வான் நோக்கியே
நாளும் தவமிருக்கிறது
குளத்தங்கரைத் தாமரை

தர்ம நியாயங்களை
வலிமையே தீர்மானிக்கிற
ஆரண்யங்களில்
வலிமை மிக்கதாக இருப்பினும் கூட

சைவமாகவே  நாளும் வாழ்ந்து
ஆச்சரியப்படுத்துகிறது
காட்டு யானை

தன் இருப்பும் பிழைப்பும்
நோயுடனும் நோயாளியுடனும் தான் ஆயினும்
அவைகளின் நிழல் தன் மீது படராது
ஆரோக்கியத்தின் சின்னமாய்


நாளும்வல்ம் வந்து
நம்பிக்கையூட்டுகிறார்
நாமறிந்த மருத்துவர்

அழகும் இளமையும்
செல்வமும் செழிப்பும்
சுற்றிச் சுற்றி வந்து
பாதத்தில் வீழ்ந்த போதும்
அறிவுத் துடுப்பை வலித்து
உடற்படகின் துணையோடு

உன்னதக் கரைசேர்வதில்தான்
கருத்தாய் இருக்கிறான்
நிஜமான யோகி

நுனிக்கிளை அமர்ந்து
முன்புறம் வெட்டும் முட்டாள்களும்
நூலறுந்தபட்டமாய்
உணர்வுக்காற்றின் வழியோடும்
சராசரிகள் மட்டுமே
சூழ் நிலைகளைக் காரணம்காட்டி

தானும் நொந்து போய்
சூழ்ந்தவர்களையும்
நோகடித்துப் போகிறார்கள்
தன் வாழ்வையும்
வீணடித்துச் சாகிறார்கள்

18 comments:

RAMJI said...

சூழ்நிலை கைதிகள் வெளிவரும் நல்ல நாள் எது
நல்ல ஒரு கவிதை தொடரட்டும் உங்கள் பணி

நிஷா said...

அத்தனையும் நிஜம், தானும் வாழ்வதில்லை அடுத்தவரையும் நிம்மதியாக வாழ விடுவதில்லை. காரணம் தான் இருக்கேன். சூழ் நிலை கைதியானேன் என்..சூழ்நிலையின் மேல் பழியாக்கி தப்பிக்க பார்ப்போரை நிஜமான் ஜெயிலில் போட்டும் கைதியாக்கணும் ஐயா.

ஸ்ரீராம். said...

அருமை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நமது இயலாமைகளுக்கு சூழ்நிலையை காரணம் காட்டி தப்பித்துக் கொள்கிறோம் பொருள் பொதிந்த கவிதை

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் ஐயா
அருமையான கவிதை
நன்றி
தம +1

Geetha said...

நல்ல கவிதை...

திண்டுக்கல் தனபாலன் said...

அத்தனையும் உண்மை ஐயா...

மீரா செல்வக்குமார் said...

நுனிக்கிளை அமர்ந்து
முன்புறம் வெட்டும் முட்டாள்களும்
நூலறுந்தபட்டமாய்
உணர்வுக்காற்றின் வழியோடும்
சராசரிகள் மட்டுமே
சூழ் நிலைகளைக் காரணம்காட்டி/////
உண்மைகள் உரத்துச்சொன்னீர்கள்...ஏன் இந்த விரக்தி?

மனோ சாமிநாதன் said...

உயர்ந்த சிந்தனை! அருமையான, சிந்திக்க வைக்கும் கவிதை!!

வலிப்போக்கன் said...

புறநிலை முதற்காரணம்... அகநிலை இரண்டாவது காரணம் அய்யா.....

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்!

தமிழ்மணம் 7

சூழ்நிலைக் கைதிகள் சூட்டும் கவிக்கருத்தின்
ஆழ்நிலை காணல் அறிவு!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

G.M Balasubramaniam said...

சராசரிகளே அதிகம் இருக்கும் இடமே எல்லாம்

சுந்தரா said...

புறக்காரணிகளால் பாதிக்கப்படாத எதுவுமே உயர்வுதான். சராசரிகளுக்குத்தான் சங்கடங்களெல்லாம். அருமையான கருத்துக்கள். நன்றிகள் ஐயா!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
உண்மையை சொல்லும் வரிகள் ஐயா அருமையாக உள்ளது. த.ம8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பிரமாதம் ஐயா

ஊமைக்கனவுகள் said...

மரபும் புதுக்கவிதையும் ஒருங்கே திறம்பட எழுதும் தங்களைப் போன்ற ஆளுமைகளைத் தொடர்ந்து கற்க வேண்டியது நிறைய உள்ளது.

வணங்கித் தொடர்கிறேன் ஐயா.

நன்றி.

சீராளன்.வீ said...

வணக்கம் ஐயா !

சூழ்நிலைக் கைதிகள்தான் நாமெல்லாம் அருமையாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தம +1

Thulasidharan V Thillaiakathu said...

அருமை!

Post a Comment