Saturday, February 27, 2021

............................................

 என்னை" அது "

தொடர்ந்து கவனிப்பதும் குரைப்பதும்

முதலில்

எரிச்சலூட்டுவதாகவும்

பின் அச்சமூட்டுவதாகவும் தெரிய...


அதன் கவனத்தைத் திசைதிருப்ப.

அதன் முன்  ஒரு

எலும்புத் துண்டை எறிகிறேன்..


கவ்விய வேகத்தில்

என்னை மறந்து 

அதனை "அது "

ஆக்ரோசமாய்க் கடிக்க...


வாய் கிழிந்து இரத்தம் கசிய...


எலும்பிலிருந்து வரும்

இரத்தமென மகிழ்ந்து

இன்னும் ஆக்ரோசமாய் அது கடிக்க...


இன்னும் அதிக இரத்தம் கசிகிறது..


"அது " குறித்து இப்போது

எனக்கேதும் கவலையில்லை

 "அதற்கும் " என்னை குறித்து

எந்த விசாரமும் இல்லை..


எதற்கும் இருக்கட்டும் என

இன்னொரு எலும்புத் துண்டையும்

அதன் அருகில் வீசி விட்டு

அது காவல் காத்த வீட்டைப் பார்க்கிறேன்..


வசதியான வீடு

என் தொழிலுக்கு

வாகாகவே இருக்கிறது...


(இதற்கு தலைப்பு இருந்தால்தான் புரியுமா என்ன ? )

Friday, February 26, 2021

அஸ்தமனத்திற்கு ஆரத்தி ?

 சமூக அக்கறைக் கொண்ட

சில அமைப்புகள் மட்டும்

குடிக்கெதிராய்ப்

போராடிக் கொண்டிருக்க


குடியால்

குடும்பம் 

சீரழிவது குறித்து

பெண்கள் மட்டுமே

தவித்துக் கொண்டிருக்க


குடித்துப் பழகிய

பெருங் கூட்டத்தின் 

பேரமைதி

பயமுறுத்துவதாய் இருக்கிறது


கூடவே குடியின் 

தீமை குறித்து

தம் தொண்டர்களுக்கு

அறிவுறுத்தாத தலைமை "களின்

 "கெட்டிக்காரத்தனமும்


"படிப்படியாய்  "என்பது

குடிகாரர்களுக்கு 

இப்போது இல்லை என்ற

சந்தோசமளிக்கும்

சமிக்கையோ என்றும்


சலுகைகளும்

இலவசங்களும்

" துயரில் அழுதிடும் 

பெண்களுக்குத் தருகிற

"குச்சிமிட்டாயாய் "

இருக்கலாமோ என்றும்


மிக லேசாய்

மனதில் ஒருஎண்ணம் பரவ

மனம் மிகப் பதைப்பதைக்கிறது

என்ன செய்யப் போகிறோம் ?


இனியாவது

தமிழகத்தின்

விடியலுக்கு 

வித்திடப் போகிறோமா ?


இல்லை

அஸ்தமனத்திற்கு

தொடர்ந்து

ஆரத்தி எடுக்கப் போகிறோமா?

Wednesday, February 24, 2021

திருடனைத் தாண்டி...

 திருடனைத் தாண்டி...


"அதோ திருடன் அதோ திருடன்

விடாதே பிடி "

எனக் கைகாட்டிக் கத்தியபடி

சங்கிலி அறுத்தத் திருடன்

முன்னே ஓடிக் கொண்டிருக்க...


அவன் சொல் கேட்டு

அவனை விடுத்து

அவனைத் தாண்டி

வெறியோடு  விரைகிறது.....


சாதிக்கப் போகும் நினைப்பில்

யோசிக்கும் திறன் இழந்த ஒரு சிறுகும்பல் ...


"கார்ப்பரேட்டுக்குச் சலுகை 

கார்ப்பரேட்டுக்கு விலக்கு

எனப்  பெருங்கூச்சலிட்டபடி 

பம்மாத்துப் பண்ணிக் கொண்டிருக்கிறது

சில கார்ப்பரேட் கட்சிகளும் 

அவைகளின் ஊதுகுழலாய் சில ஊடகங்களும்....


அவர்கள் ஜாலவித்தையில்

அவர்களை விடுத்து

அவர்கள் காட்டுமிடம் மட்டிலுமே

கவனம் கொள்கிறது.....


எல்லாம் அறிந்ததான நினைப்பில்

ஏதுமறியாதே வளர்ந்த அந்தச் சிறுமந்தை

Monday, February 22, 2021

உள்ளொளி...

 என் அபிமான

நாடக நடிகரின் பெயரைச் சொல்லி

"இன்று எங்களூரில் 

அவர் நடிக்கும்

அரிச்சந்திரன் நாடகம் நடக்கிறது வருகிறாயா ?"

என்றான் நண்பன்


இத்தகவல் எனக்கு

அதிக ஆச்சரியமூட்டியது


கடந்த வாரம்தான் அவரை நான்

நேரில் சந்தித்திருந்தேன்.


கொரோனா ஆடிய பெரும் ஆட்டத்தில்

வாய்ப்பேதுமின்றி

அரை உடம்பாகி இருந்தார் அவர்


ஒழுங்காக

மூன்று வேளை சாப்பிட்டலும் கூட

அவர் ஒரு ஆளாகத் தெரிய

நிச்சயம் ஒரு மாதம் ஆகும்

என எண்ணி இருந்தேன்..


இந்நிலையில்

அது எப்படி நடிக்கச் சாத்தியம் ?

அதுவும் மன்னனாக ..?


ஆயினும்...

திரை விலகியதும்

அரியணையில் அவர் அமர்ந்திருந்த

கம்பீரக் காட்சி கண்டவுடன்

எழுந்த கைத்தட்டல் ஓய

வெகு நேரமாயிற்று....


எப்படி வந்தது

இந்தக் கம்பீரம்..?

என்னால் நம்ப முடியவே இல்லை


பின் நேற்று..

அவரை நேரடியாகச் சந்தித்தபோது

"இது எப்படிச் சாத்தியமானது ."என்றேன்


"பிறவிக் கலைஞன்

பிச்சைக்காரனாகவே ஆயினும்

கிரீடம் தரித்தால்

நிச்சயம் இராஜ கம்பீரம் வந்துவிடும்

அது எப்படி..?

அது அவனுக்கே தெரியாது

ஏனெனில்.அது உள்ளம் செய்யும் மாயம் "என்றார்


இந்தப் பதில்

என் ஆச்சரியத்தை 

அடியோடு நொறுக்கிப் போனது


ஆம்....

உள்ளொளி கொண்டவனுக்கு

எதற்குப் புறவொளி....

சொல்வனம்....

 சொல்ல நினைத்தை

சொல்லவில்லை என்ற போதும்


சொல்லிச் சென்றது

தனக்கே புரியவில்லை என்ற போதும்


சொல்லியது புரியாததாலேயே

சிறப்படைகிறது எனப் புரிந்து...


அவன் படைப்பை அனுப்பி வைக்க..


எத்தனை முறை

படித்துத் தொலைத்த போதும்...


ஒவ்வொரு சொல்லாய்ப்

பிரித்துப் படித்த போதும்...


புரியாப் புதிராய் இருப்பதுவே

தரத்திற்கான தகுதி எனக் கருதி 


அவன் வெளியிட்டுத் தொலைக்க...


எப்படிப் படித்தும்

புரியவில்லை என்றாலும் கூட...


மீண்டும் மீண்டும் அதை

வாசித்தபடியே இருக்கிறேன் 


அதன் நாடிப் பிடித்து

சூட்சுமம் அறிய முயல்கிறேன் 


நானும் கவியாகிச் சிலிர்க்க...


( இவ்வார ஆனந்த விகடன் சொல்வனம் படிக்க

சட்டெனக் குதித்தக் கவிதை )