Monday, February 22, 2016

கலிகாலத்தில் பிழைக்கும் வழி

மன வயிற்றில்
கொதிகலனாய் எரியும்
தன் முனைப்புப் பசிக்கு
இரைதேடி
வெறிபிடித்தலையும்
மிருகங்களுக்கு
ஞான போதனை செய்து
வெறிகூட்டிவிடாது
கொஞ்சம் உணவிட்டு விலகிப்  போ

அது தவறென நிச்சயம் தெரிந்தாலும்...

நம்பிக்கைத் துரோகம்
எதிரிக்குச் சாத்தியமில்லை
உடன் ஒட்டித் திரியும்
நண்பானாலேயே
ஆகச் சாத்தியம் எனத் தெரிந்தும்
மனம் சுருக்காது
இருப்பதில் சிலவற்றை
இழக்கவென்றே   எடுத்து  வைத்திரு...

அது  ஏமாளித்தனம் எனத் தெரிந்தாலும்...

பகுத்தறிவாளனின்  பகல்வேஷமும்
பக்திமானின்  கபட வேஷமும்
ஏமாற்றுக் காரர்களிடம்
சிக்கிவிட்ட சாகச முகமூடி எனச்
சந்தேகமின்றித் தெரிந்தாலும்
ஒருபக்கமும் சாயாதிரு
வீட்டுக்குள் விபூதியும்
வெளியிடத்தில் கருப்புச்சட்டையுமே
பிழைக்கும் வழியெனப் புரிந்து கொள்....

இது பச்சோந்தித்தனம் எனத் தெரிந்தாலும்....

சமத்துவமும் சகோதரத்துவமும்
அடிமனதில் இருந்தாலும்
கண் சிவப்பையும்
முறுக்கு மீசையையும்
பார்வையில் இருக்கும்படி
எப்போதும் பராமரி
பிரச்சனைகுரியவன் எனும்படியான
பாவனைப் பராமரிப்பே
கலிகாலத்தில் பிழைக்கும் இராஜரகசியம்...

இது மனதிற்கு ஒப்பவில்லை என்றாலும்.

5 comments:

  1. ராஜரகசியம்! உண்மைதான்!
    தம +1

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    காலம் உணர்ந்து எழுதிய பதிவு சிறப்பு ஐயா.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. காலத்தை சொன்ன கவிதை. அருமை.
    த ம 4

    ReplyDelete
  4. உண்மைதான் ராஜரகசியம்தான்..அருமை..

    ReplyDelete