Wednesday, June 29, 2016

சிரிப்பின் சுகமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

9 comments:

  1. அருமையான கவிதை கவிஞரே ரசித்தேன் வாழ்த்துகள்
    இப்பொழுது அமெரிக்காவிலா ?

    ReplyDelete
  2. @KILLERGEE Devakottaiகுரு இருப்பது அமெரிக்காவில் அல்ல தெய்வம் வசிக்கும் இடத்தில் அதுதானுங்க அவர் மகள் வசிக்கும் இடத்தில்

    ReplyDelete
  3. KILLERGEE Devakottai //

    மதுரைத் தமிழனின் உணர்வுப்பூர்வமான
    வார்த்தைகள் நெகிழ்வூட்டுகிறது
    ஆம் இங்கு நியூஜெர்சியில்தான் இருக்கிறேன்

    (வரும் சனி ஞாயிறு வாஷிங்டன்
    செல்ல உத்தேசம் )

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு.

    அமெரிக்க அனுபவங்கள் பற்றியும் எழுதுங்கள் ஜி!

    ReplyDelete
  5. அருமையான கவிதை ஐயா! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. அருமை! அமெரிக்க அனுபவங்கள் தங்களிடமிருந்து வரும் என்ற ஆவலில் காத்திருக்கின்றோம்..

    ReplyDelete
  7. சிரிப்பின் அழகைப் பற்றி மிக சிறப்பாக சொன்னீர்கள்.

    ReplyDelete