Monday, January 15, 2018

ஞாநி .பாசாங்குகள் அற்ற ஓர் மாமனிதன் ( 2 )

ஏற்கெனவே மதுரையில் திட்டமிட்டிருந்தபடி
உடன் வந்த அனைவரும் தங்குவதற்கான
ஏற்பாடுகளைச் செய்து விட்டு நானும்
முனைவர் மு.ரா அவர்களும் ஞாநி அவர்களைச்
சந்திக்க அவர் வீடு தேடிப் போனோம்

அவர் அப்போது சி,ஐ.டி காலனியில்
இருந்த நினைவிருக்கிறது

அவர் வீட்டிற்குள் நுழைகையிலேயே
வராண்டாவில் அவருடைய தாயார்
எதிர்ப்பட்டார்

கணவனை இழந்த ஆசாரமான பிராமணக்
குடும்பப் பெண்கள் தலைமழித்து காவிஉடை
அணிவது போல் அவர் அணிந்து இருந்தது
எனக்கு ஆச்சரியமாக இருந்தது

இத்தனை முற்போக்கு எண்ணம் கொண்ட
அவர் வீட்டிலேயே அப்படியா என எனக்கு
முதலில் ஆச்சரியமாக இருந்தது

பின் அவரிடம் எங்கள் சூழல் குறித்து
விளக்கி அவரின் குழுவிலோ அல்லது
கூத்துப்பட்டரையிலோ இந்த இக்கட்டான
சூழலை சமாளித்து நடிக்கத் தக்க நல்ல
நடிகைகள் யாரும்  நடித்து கொடுக்கும்படி
இருந்தால் நல்லது என கேட்டுக் கொண்டோம்

சிறிது நேரம் யோசித்தவர் "இன்று மாலைக்குள்
இந்தக் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடிக்கத்
தக்கவர் என்றால் அது மிகச் சிரமமான
காரியமே.ஆனாலும் எனக்குத் தெரிய
இந்தச் சவாலை என் துணைவியாரால்
ஏற்றுச் சமாளிக்க் முடியும் "என்றார்

அந்த பதில் எங்களுக்கு கொஞ்சம்
தெம்பளிப்பதாக இருந்தது

"அப்படியானால் கொஞ்சம் கேட்டுச்
சொல்லமுடியுமா ?" என்றோம்

"அவர்களால் நடிக்க முடியும்
என்பதைத்தான் நான் சொல்ல முடியும்
நடிப்பதையும் நடிக்காமல் இருப்பதையும்
அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்
நீங்கள் நேரடியாக அவரிடமே கேளுங்கள் "
என்றார்

அப்போது எனக்கு இந்தப் பதில் மிகவும்
ஆச்சரியமளிப்பதாக இருந்தது

என்னைப் பொருத்தவரை மதுரையை ஒட்டிய
ஜாதிக் கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு குக்கிராமத்தில்
ஆசாரமான சூழலில் வளர்ந்த எனக்கு
மனைவிக்கான அனைத்து முடிவுகளையும்
கணவன் எடுப்பதையே கண்டு பழகிவிட்ட எனக்கு
நடிப்பதையும் நடிக்காததையும் அவர்தான்
முடிவெடுக்க வேண்டும் எனச் சொன்னது
கொஞ்சம் ஆச்சரியமான விஷயமாகவே பட்டது

(பின் நாங்கள் கேட்டுக் கொள்ள அவர்
நடித்துத் தருவதாக ஒப்புக் கொண்டு
வசனப்பிரதியை வாங்கிக் கொண்டு மாலையில்
நடந்த கடைசி ஒத்திகையை மட்டும்
கவனித்து,பின் அருமையாக நடித்துக்
கொடுத்தார்

நாடகம் முடிந்து பின் நடந்த கலந்துரையாடலில்
எங்களுக்கு ஏற்பட்ட அசாதரணமான சூழலை
விளக்கி ஒரே ஒரு ஒத்திகையில்
மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்த அந்தக்
கதாப்பாத்திரம் எது எனக் கேட்ட போது
பார்வையாளர்கள் யாரும் அவரைக் குறிப்பிட்டுச்
சொல்லாததே அவரின் நடிப்புத் திறமைக்குச் சான்று )

இன்றைய நிலையில் கூட வெளியே
ஒரு புரட்சிக்காரனைப் போல பேசிக் கொண்டும்
நடித்துக் கொண்டும்

வீட்டில் ஒரு ஆணாதிக்க
வாதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிற சூழலில்

அன்றைய நிலையிலேயே தன் தாய்க்குரிய
நம்பிக்கைகளிலோ, துணைவியாருக்குரிய
சுதந்திரத்திலோ தலையிடாது

தன்னளவில் வெளிப்புறத்தில் தன்னைக்
காட்டிக் கொண்டதைப் போலவே
தனிப்பட்ட வாழ்விலும்

அன்று முதல் தன் கடைசி மூச்சுவரை
ஒரு பாசாங்கற்ற மனிதராகவே வாழ்ந்து
வந்த ஞாநி அவர்களை நினைவு  கூர்வதில்
பெருமிதம் கொள்வதோடு அவர் ஆன்மா
சாந்தியடையவும் பிரார்த்திப்போமாக

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பாசாங்கங்கற்ற மனிதரை இழந்திருக்கிறோம்
பேரிழப்பு ஐயா
தம+1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பாசாங்கற்ற மனிதர். நூற்றுக்கு நூறு உண்மை.

நெல்லைத் தமிழன் said...

ரொம்ப ஆச்சரியமா இருக்கு நீங்க சொல்றது. பெரும்பாலும் எல்லோரும் மேடையில் ஒரு முகம், வெளியே ஒரு முகம், நண்பர்களிடத்தில் ஒரு முகம், வீட்டில் ஒரு முகம் என்று பல்வேறு முகமூடிகள் அணிந்திருக்கிறார்கள். நீங்கள் சொன்ன சம்பவம், ஞானியை உயர்த்திக் காண்பிக்கிறது.

Post a Comment