ஒவ்வொரு நொடியும்
எது தேவை எனப்
பார்த்துப் பார்த்துச் செய்த பின்னும்
தன் குழந்தை ஏன்
தன்னைச் சுற்றி சுற்றியே வருகிறது
என யோசித்தபடி
"பாப்பாவுக்கு என்ன வேணும்
என்ன வேணும்" எனக் கொஞ்சுகிறாள் தாய்..
எதுவும் வேண்டாம் என
தலையினை பக்கவாட்டில் அசைத்தபடி
தாயை அணைத்துக் கொள்கிறது குழந்தை
ஈன்றபொழுதினும் பெரிதுவந்து
கண்ணீர் மல்க
இறுகக் கட்டிக் கொள்கிறாள் அன்னை..
மகிழ்ந்து வாழவும்
செழித்து ஓங்கவும்
எல்லாம் வழங்கிய பின்னும்
எது வேண்டும் என
என் பிரஹாரம் சுற்றுகிறான் பக்தன்
என யோசித்தபடி
அவன் வேண்டுதலுக்கு
செவிசாய்த்து காத்திருக்கிறான் ."அவன்"
"குறையொன்றுமில்லை" எனப் பாடியபடி
"அவன்" பெயருக்கே அர்ச்சனை செய்துவிட்டு
நன்றியுடன் நகர்கிறான் பக்தன்
கொடுக்கையில் மகிழ்ந்ததற்காக அன்றி
முதன் முதலாக
கொடுத்ததற்காக மகிழ்ச்சி கொள்கிறான் "அவன் "
7 comments:
அருமை
எது உயர்ந்தது என்கிற ஞான நிலை.
மிக அருமை.
வேண்டாம் என்றும், குறை இல்லை என்றும் சொல்லும் மனிதனை
இறைவன் என்றும் கைவிடமாட்டான்.
அருமை...
மிக அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.
துளசிதரன்
ஒப்பீடு அருமை...
//முதன் முதலாக
கொடுத்ததற்காக மகிழ்ச்சி கொள்கிறான் "அவன் "//
குறையொன்றுமில்லை என்று பக்தன் பாடியதால் 'அவன்' மகிழ்ந்திருப்பான்...அட! ஞானம் கொடுத்ததற்கு?!!!
கீதா
Post a Comment