கவிஞனாக அறிமுகமாயிருந்த
என் நண்பனிடம்தான்முதன் முதலாக
என் படைப்புகளைக் கொடுத்தேன்
பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த
அவன் முகம்திடீரெனக் சுருங்கத் துவங்கியது
"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை
இதை சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை
எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்
"என்ன செய்யலாம்" என பயந்த படி கேட்டேன்
"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்
அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"
என்றான்
கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்
புத்தகத்தில் புதைந்து கிடந்தார்
படைப்பினில் பாதி கடக்கும்போதே
அவர் உடல் குலுங்கத் துவங்கியது
சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்
"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை
உனக்கு போதிய பயிற்சியும் இல்லை"
என்றார்
"இதை என்ன செய்வது" என்றேன்
"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ
அவர்கள் தான் எதையும்
சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்
எழுதியபடியே இருந்த கதாசிரியர்
என்னைப் பார்ப்பதற்கே அரை மணி நேரம் ஆனது
நம்பிக்கை இழந்த நிலையில்
என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்
"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா"
என்றார்
அரசமரத்தடி பிள்ளையாரை
மௌனமாய் வேண்டியபடி
மறுநாள் அவரைப் பயத்துடன் பார்த்தேன்
அவர் மேசையில் என் படைப்பு இல்லை
தூரமாய் கூடைக்கருகில்
குப்பை போல் இருந்தது
"கதைக்கு அவசியம் கரு வேண்டும்
உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும்
நிகழ்வுகள் வேண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"
இன்னும் என்னென்னவோ சொன்னார்
எனக்கு எதுவுமே விளங்கவில்லை
முடிவாக
"இதனை இப்படியே கட்டி மூலையில் வை
ஓராண்டு தொடர்ந்து படி
பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்
"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி
நடுவீதிக்கு வந்தேன்
"கைகளில் என்ன பார்சல்"
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"
என்றான்எதிரில் வந்த
பத்தாம் வகுப்பில்தமிழில்
முப்பது மதிப்பெண்களே எடுத்ததால்
படிப்பிற்கே முழுக்குப் போட்ட
என் பால்ய நண்பன்.
"எழுத்தில் ஆர்வம்
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
இது எதில் சேர்த்தி என தெரியாமல்
அலைகிறேன்" என்றேன் பயந்தபடி
"பிள்ளையை பெற்று விட்டு
பேருக்காக அலைகிறாயா" என்றவன்
ஆவலாய் அதனைப் பிடுங்கி
அவசரம் அவசரமாய் படிக்கத் துவங்கினான்
ஒவவொரு பக்கம் முடிய முடிய
"பேஷ் பேஷ்" என்றான்
அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது
"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்"
என்றேன் மெதுவாக
கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"
என்றான்
முதன் முதலாக
எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்
இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்
திடுமென என் தோளைத் தட்டியபடி
"பிரமாதம்" என்றான்
தமிழில் தோற்றவனா என் எழுத்தை
ஏற்க வேண்டும்
எல்லாம் தலை விதி என்று நொந்து
"எப்படி" என்றேன்
"உன்னை பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாக புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா"
என்றான்
அவனை அதிசயமாய் பார்த்து
அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"
அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்
"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிதை கள் கிடைத்தன
அவைகளை புறக்கணித்தா விட்டோம்
எழுதியவரை " யாரோ "
எனச் சொல்லி சேர்த்துக் கொள்ளவில்லையா"
என்றான்
நான் அமைதியாய் இருந்தேன்
எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்
போதி மரத்து புத்தன் போல்
என் முன் அவன் பிரசன்னமானான்
எனது சிந்தனைகளை
இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ
ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை
இப்போதெல்லாம் நான்
கதை கட்டுரை கவிதைப் பக்கம்
தலை வைத்துப் படுப்பதே இல்லை
நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்
4 comments:
வணக்கம் சகோதரரே
.தங்கள் எழுத்தில் பதிவு அருமை.
/சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிதை கள் கிடைத்தன
அவைகளை புறக்கணித்தா விட்டோம்
எழுதியவரை " யாரோ "
எனச் சொல்லி சேர்த்துக் கொள்ளவில்லையா"
என்றான்
நான் அமைதியாய் இருந்தேன்
எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்/
தங்கள் நண்பர் சொல்வதும் உண்மைதான். புதுப் பதிவர்களாக நாங்கள் வந்த போது, எங்களுக்கு உங்களை அறிமுகபடுத்தியதும், உங்கள் எழுத்துக்களை எந்நாளும் நாங்கள் ரசிப்பதற்கு காரணமாக இருப்பதும், உங்களுக்கென ஒரு அடையாளமாக உள்ளதும் அதுவேதானே ..! அருமையான பதிவு. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்லது. மீள்பதிவோ? ஏற்கெனவே படித்த நினைவாய் இருக்கிறது.
எழுதுவது எல்லோர்க்கும் எளிதாம்
எழுதியது என்ன என்று விளங்குவது மிகவும் கடினம். குழந்தைகள் வரையும் படங்கள் போல. அவரவர்க்கு அவரவர் கண்ணோட்டம்.
Jayakumar
யாதோ - சிறப்பான அலசல். முன்னரே படித்திருக்கிறேனோ? ஸ்ரீராம் கேட்பது போல மீள்பதிவோ?
Post a Comment