Wednesday, May 4, 2022

கொஞ்சம் செவி கொடுப்போமா

 👆👆👆👆👆

தமிழர்களுக்கான உரிமைக்குரல்


பொய்யான குற்றம் சாட்டப்பட்டு அரசவையில் முன்னிறுத்தப்பட்ட கோவலனை முழுமையாக விசாரிக்காத பாண்டிய மன்னன், கோவலனுக்கு மரணதண்டனை அளித்தான். தன் கணவன் கொல்லப்பட்டதை அறிந்த கண்ணகி, பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று நீதி கேட்டு, மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கிவிட்டு அங்கிருந்து கோபத்துடன் வெளியேறுகிறாள். அங்கிருந்து 14 நாட்கள் நடந்து, தேனி மாவட்டம், கூடலூர் அருகிலிருக்கும் மலையுச்சிக்குச் சென்று, அங்கிருந்து தன் கணவனுடன் விண்ணுலகம் சென்றார்.


அதை நேரடியாகப் பார்த்த மலைவாழ் மக்களான பளியர் இன மக்கள், தாங்கள் கண்ட காட்சியை சேர மன்னன் செங்குட்டுவனிடம் தெரிவிக்க, சேர மன்னன் செங்குட்டுவன் வடக்கேப் படையெடுத்துச் சென்று, இமய மலையிலிருந்து கல் எடுத்து வந்து கண்ணகிக்குச் சிலை செய்து கோயில் கட்டினான். அந்தக் கண்ணகி கோயிலே, மங்கலதேவி கண்ணகி கோயில் என்று அழைக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், கூடலூர், பளியன்குடி எனுமிடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்கு நடைபாதை மட்டுமிருந்த நிலையில், 1976 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கோயிலுக்குச் சாலை அமைக்கத் திட்டமிட்டது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, கேரள அரசு குமுளியிலிருந்து கோயிலுக்குச் செல்வதற்காக 14 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சாலையமைத்தது. இந்தச் சாலை அமைக்கப்பட்ட பின்பு, இந்திய அரசின் தொல்லியல் துறை, கண்ணகி கோயிலை நிர்வகிக்கும் உரிமையைக் கேரள அரசிடம் வழங்கியது. தமிழக எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் கண்ணகி கோயில் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றதால், தமிழ்நாட்டு மக்கள் கண்ணகி கோயிலுக்குச் சென்று வழிபடும் உரிமையை இழந்து தவிக்கின்றனர். 


கேரள அரசு கண்ணகி கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல, ஆண்டுக்கொரு முறை, ஒரு நாள் (சித்திரை முழுநிலவு நாள்) மட்டுமே அனுமதிக்கிறது. 


இந்தக் கோயில் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்குச் செல்லத் தமிழ்நாடு அரசு சாலையமைக்க வேண்டுமென்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்காடிய வழக்கறிஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள், “மங்கலதேவி கண்ணகி கோயில்” குறித்து முழுமையான செய்திகளை உரையாக வழங்கவிருக்கிறார்.


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்தி வரும் “இணைய வழியிலான தமிழியல் உரை மற்றும் கலந்துரையாடல்” நிகழ்வில், வருகிற 8-5-2022, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு, சென்னை, வழக்கறிஞர் திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள், “மங்கலதேவி கண்ணகி கோயில்” எனும் தலைப்பில் வழங்கும் உரை, வெறும் உரையல்ல... அது தமிழர்களுக்கான உரிமை... குரல்.   


இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள், https://meet.google.com/hzr-ekri-gmf எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

தகவலுக்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தகவல்...

இராய செல்லப்பா said...

கேரளத்தில் ஆட்சி புரிபவர்கள் இன்று தமிழ்நாட்டில் ஆட்சி புரியும் ஸ்டாலின் அவர்களின் கட்சிக்கு வேண்டியவர்களே. இன்று காங்கிரஸ் பிழைத்திருப்பதே ஸ்டாலின் தயவால்தான் என்னும்போது, இந்த்ச் சிறிய பிரச்சினையை ஸ்டாலின் நினைத்தால் சரிசெய்துவிட முடியாதா?

Post a Comment