Saturday, November 26, 2011

எல்லோரும் கவிஞர்களே (2)


சீர்மிகு கவிகள் செய்ய
சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்


( மரபுக் கவிதை புனைய அனைவருக்கும்
வழிகாட்டியாக விளங்கும்
புலவர் சா.  இராமானுசம் அவர்களுக்கு
இப்படைப்பை சமர்ப்பிப்பதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் )

Friday, November 25, 2011

முயற்சியும் வெற்றியும்

அந்தச் சிறு குன்றின் முன்
எதையோ உற்றுப் பார்த்தபடி
நான்கு சிறுவர்கள்
வெகு நேரம் நின்று கொண்டிருந்தார்கள்

நானும் பொறுமை இழந்து
வெகு நேரம் கழித்து
"என்ன பார்க்கிறீர்கள் " என்றேன்

"இங்கிருந்தால் எதிரொலி கேட்கும்
என நண்பர்கள் சொன்னார்கள்
நாங்களும் வெகு நேரம் நிற்கிறோம்
எந்த ஒலியும் கேட்கவில்லை "
என்றார்கள் சலிப்புடன்

"நீங்கள் ஒலி எதுவும் எழுப்பினீர்களா ? "என்றேன்

"இல்லை ஏன் ஒலி எழுப்பினால்தான் கேட்குமா ?"
என ஆச்சரியத்துடன் கேட்டார்கள்

நான் சிரித்துக் கொண்டேன்
எதிரொலி குறித்துச் சொன்னவர்கள்
குரல் கொடுக்கச் சொல்லித் தராதது
ஆச்சரியமாக இருந்தது

"குரல் கொடுத்தால்தான் கேட்கும்
அதுவும் நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ
எப்படிச் சொல்கிறீர்களோ அப்படித்தான் கேட்கும்
சப்தத்தை திருப்பிவிடத் தெரியுமே ஒழிய
அதற்கென தனியாக குரலில்லை " என்றேன்

அவர்கள் முதலில்
வினோதமான சப்தங்களை எழுப்பினார்கள்
அது திரும்பச் சொல்லச் சொல்ல
புதிது புதிதான நல்ல வார்த்தைகளை
சொல்லத் துவங்கினார்கள்

ஏதோ அறியாத ஒரு அரிய புதிரை
அறிந்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது
இனி அவர்கள் வெறுமனே நின்று
எதிரொலியை எதிர்பார்க்கமாட்டார்கள் என அறிய
மகிழ்ச்சியாய் இருந்தது

நான் என் வழியில் நடக்கத் துவங்கினேன்

Tuesday, November 22, 2011

அதிருப்தி


ஒரு உணர்வாகவோ
ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு

அதுவரை எங்கோ புதைந்து கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது

அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது

என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக  மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது

Saturday, November 19, 2011

கவித்துவம்

"ஒவ்வொரு முறையும்
இலக்கணப்படி எல்லாம் சரி
செய்யுள் செய்யத் தெரிந்திருக்கிறாய்
கவிதை படைக்கப் பழகு என்கிறாரே
கவிதைக்கும் செய்யுளுக்கும்
அப்படியென்ன வித்தியாசம் "
ஆசிரியர் மேலிருந்த கோபம்
முகத்தில் கொப்பளிக்ககக் கேட்டான் நண்பன்

"கட்டிடம் என்பதற்கும்
வீடு என்பதற்கும் உள்ள
சிறு வித்தியாசம் போலிருக்குமோ ? "என்றேன்

"சமாளிக்காதே சரியாகச் சொல் "என்றான்

வீட்டினுள்ளே நண்பனின் அப்பா
"கன்னுக்குட்டி சின்னக் குட்டி தாத்தா பார்
அழகான பொம்மை பார் " என
என்ன என்னவோ சொலலிப்
பேரனைக் கொஞ்சிப் பார்த்தார்
அது அழுகையை நிறுத்தவே இ ல்லை
சப்தத்தை கூட்டிக் கொண்டே போனது

சிரித்துக் கொண்டே வந்த நண்பனின் தாயார்
குழந்தையை மடியில் கிடத்தி
"சுச்சு சுச்சு கிச்சு கிச்சு "என என்னன்னவோ
வினோதமான சப்தங்களை எழுப்பிக் கொஞ்ச
குழந்தை அழுகையை நிறுத்தி சிரிக்கத் துவங்கியது

நானும் பரவசமாகிப் போனேன்

அர்த்தம் பொதிந்த தாத்தாவின் வார்த்தைகளில்
இல்லாத ஏதோ ஒன்று
பாட்டியின் சப்தத்தில் இருந்தது
குழந்தைக்கும் புரிந்தது எனக்கும் புரிந்தது
நண்பன் முகத்தைப் பார்த்தேன்
அவன் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை

Thursday, November 17, 2011

ஜென் சித்தப்பு


"எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ "
கத்திக்கொண்டிருந்த ரேடியோவின்
கழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு

"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்
இருபது இருபதாய்ப் பிரிப்பதே ரொம்பச் சரி " என்றார்
எப்போதும் தாடி மீசையுடன்
யோசித்தபடி இருப்பதாலோ
இப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ
"ஜென் "னென்றே கிண்டலடிக்கப் படும்
என் ஒன்றுவிட்ட சித்தப்பா

"எப்படி "என்றேன் வியந்தபடி

"முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி " என்றார்

"ஆஹா எளிதாய் இருக்கிறதே "என்றேன்

"இல்லையில்லை
கேட்கத்தான் எளிதாய் இருக்கும்
எதுவும் நம் கையில் இருக்காது
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்
நாலாம் இருபதை ஆசை தடுக்கும் "என்றார்

"அதை சரி செய்ய
என்ன செய்யலாம் "என்றேன்

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது

"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்
எப்படி முயற்சி எடுக்கலாம் "என்றேன்

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

 "இதற்கும் ஜென் தியரிக்கும்
ஏதேனும் சம்பந்தம் உண்டா? "என்றேன்

நான் உளறுவதாக நினைத்தாரோ
கிண்டலடிப்பதாக நினைத்தாரோ தெரியவில்லை
அவர் பதிலேதும் சொல்லவில்லை
"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி

Tuesday, November 15, 2011

நேரு மாமாவும் காந்தித் தாத்தாவும்......


குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிற
நமது முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால்
நேரு அவர்களின் பிறந்த தின நாளை முன்னிட்டு
நமது பதிவர் சைலஜா அவர்கள் துவக்கி வைத்த
தொடர் பதிவைத் தொடர்ந்து எழுதும் தொடர் பதிவிது

எந்தத் தலைவர் தனது பிறந்த நாளை தன்னுடைய
பிறந்த நாளாகக் கொள்ளாமல் பிறருக்கு
அர்ப்பணிக்கிறார்களோ அவர்களது பிறந்த நாளே
கோலாகலத்துடன் மக்கள் விரும்பும்
பிறந்த நாளாகக் கொண்டாடப் படுகிறது
அந்த வகையில் ஆசிரியர் தினமும் குழந்தைகள்
தினத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்

குறிப்பாக நான் பல ஆரம்பப் பள்ளி
ஆசிரியர்களைக்கவனித்திருக்கிறேன்.
அவர்கள் எவ்வளவு வயதானாலும்   அதிக
வயதானவர்கள் போல்
காட்சி அளிக்காமல் இளமையுடனே
காட்சி அளிப்பார்கள்அதற்கான உண்மையான
காரணம் அவர்கள் அதிக நேரம்
குழந்தைகளுடன் இருப்பதே என் நினைக்கிறேன்
மகாத்மா காந்தி அவர்கள் கூட மாமா வயதிலேயே
தாத்தா வாக அழைக்கப் பட்டதும் பண்டிட்நேரு
அவர்கள்தாத்தாவான வயதிலே கூட
ஏன் இன்றுவரையில் கூடமாமா வாக
அழைக்கப் படக் காரணம் அவர்கள்
அதிகமாக குழந்தைகளை விரும்பியதும்
குழந்தைகளுடன் மனதளவில் அதிகநெருக்கமாக
இருப்பதை விரும்பியதும் கூட
காரணமாயிருக்கலாம் என நினைக்கிறேன்

ஏனெனில் குழந்தைகள் உலகம் ஒரு அற்புத உலகம்
அதனுள் கற்கள் மாணிக்கக் கற்களாகவும்
 கல்லும் மண்ணும்கல்யாண சமையல்
சாதமாகவும்  இயல்பாக மாறிப்போகும்
பூவுலகு வரும் தெய்வங்கள் பெருவாரியான
சமயங்களில்அவர்களுடனேயே அமர்ந்து
விளையாடத் துவங்கிவிடுகிறார்கள்
அங்கு எல்லாமே நம்பிக்கையே
நம்பிக்கையின்மை என்பது இல்லாத
ஒரே பிரதேசம் இது ஒன்றுதான்
ஒரே ஒரு குறை அந்தச் சமவெளிக்குச்
செல்லும் பாதைமிகக் குறுகியது.
உங்கள் கிரீடங்களையும்முகமூடிகளையும்
அவிழ்த்து வைத்து குழந்தைகளாக
 தவழ்ந்து போகத் தெரிந்தால்மட்டுமே நீங்கள்
அந்த சொர்க்கபுரியின் வஸந்தத்தை
அனுபவிக்க இயலும்.இல்லையெனில் உங்களுக்கு
அதுவும் ஒரு வெறும் பிதற்றல் உலகு போலவே படும்

பதிவின் நீளம் கூடிப் போனதால் கவிதை குறித்து
யோசிக்கவே இயலவில்லை

புதிர்:தகுதியடையத் தேவையான மூன்று
 முக்கிய குணங்கள்
தகுதி அடைந்தபின் நிச்சயம் உயரிய பதவி கிடைக்கும்
அப்போது இருக்க மூன்று முக்கிய குணங்கள்

குறிப்பிட்டு யாரையும் தொடர் பதிவுக்கு அழைக்கவில்லை
என் பதிவைத் தொடர்பவர்கள் யாரேனும் இஷ்டப்பட்டு
தொடர்வீர்கள் ஆயின் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்

Sunday, November 13, 2011

இவர்கள் அவர்கள் தலைவர்கள்

அவர்கள் மீது இவர்கள் எப்போதும்
முழுக் கவனமாய் இருக்கும்படி
தலைவர்கள் இவர்களை
தூண்டியபடி இருக்கிறார்கள்

எப்போது தினமும் எழுகிறார்கள் ?
அவர்களது உணவுப் பட்டியல் என்ன?
எவரிடம் பயிற்சி பெறுகிறார்கள் ?
எந்த மைதானத்தில் பயிற்சி பெறுகிறார்கள் ?
அவர்களை ஊக்குவிப்போர் யார் யார் ?

இப்படி அவர்களது பலங்களை மட்டுமல்ல
பலவீனங்களைக் கூட
மிக நீளமாய் பட்டியலிட்டு வைக்கவும்
நாள்தோறும் பயிற்சி அளிக்கிறார்கள்

காலம் நேரம் மறந்து
தனது கடமைகளையும் மறந்து
இப்படி அவர்களுக்காக இவர்கள்
செலவழிக்கிற நேரங்களில்
ஆறில் ஒரு பங்கை மட்டும்
இவர்கள் இவர்களுக்காக மட்டுமே
செலவழிக்கத் துவங்கினால்
இவர்கள்தான் நிச்சயம் வெற்றியாளர்கள்

அந்த ஒரு விஷயம் மட்டும்
 இவர்கள் புரிந்து கொள்ளாதபடி
 தலைவர்கள் மிகக் கவனமாய் செயல்படுகிறார்கள்

எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே