Tuesday, June 30, 2015

மீண்டும் ஒரு அலசல்

மெல்லக் கீறிப் போகிறேன்

கவனிக்கப்படாமல் போய்விடாதபடி
கொஞ்சம் அழுத்தமாகவும்..

எரிச்சலடையாமல் இருக்கும்படி
கொஞ்சம் மெதுவாகவும்..

அளவு மீறினாலோ,குறைந்தாலோ
கவனம் மாறிவிடச் சாத்தியம்
மிக அதிகம் என்பதால்..

கொஞ்சம் வெளிச்சம் காட்டிப் போகிறேன்

முழுவதும் சரியாகத் தெரியும்படி
அதிகம் இல்லாமலும்

கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும்படி
கொஞ்சம் குறைவாகவும்..

அளவு கூடினாலோ குறைந்தாலோ
கவனம் குவிக்கப்படாது போய்விடச்
சாத்தியம் உண்டு என்பதால்..

வித்தியாசமாகச் சொல்லிப் போகிறேன்

விட்டு விலகி ஓடிவிடாதபடி
கவிதையாகவும் இல்லாதபடி

பிரசங்கம் என உணராதபடி
அறிவுரையாகவும் இல்லாதபடி

இரண்டின் சேர்மானமும்
மிகச் சரியாக இல்லையெனில்
ஒதுக்கிவிடவே வாய்ப்பு அதிகம் என்பதால்...

தொடர்ந்து சொல்லிப் போகிறேன்

சொல்வது  ஏதேனும் பயனுள்ளதாக
இருக்கவேண்டும் என்னும் கருத்தில்
மாற்றம் கொள்ளாதபடி..

முன்ணனி மற்றும் ,தரப்பட்டியல் என்னும்
அள்வீடுகளின் மாயச் சங்கிலியில்
பிணைத்துக் கொள்ளாதபடி..

உங்கள் ஆதரவுடன்
நூறு நாடுகளுக்கு மேல் மூன்று இலட்சம்
பார்வைப் பதிவுகளைப்  பெற்றபடி

தொடர்ந்து சோராது
நான்கு ஆண்டுக்கு முன்பு இருந்த
ஆர்வமும் வேகமும் சிறிதும் குறையாதபடி..

வாழ்க அரசும் வளர்க நீதி மன்றங்களும்...

அரசையும் நீதிமன்றங்களையும் போல
மிக மிக வித்தியாசமாக
மக்களுக்காக சிந்திப்பதைப்போல
வேறு எவராலும் நிச்சயம்
சிந்திக்கவே முடியாது

குடலையும் உடலையும்
படிப்படியாய் உயிரையும் குடிக்கும்
மது விற்பனையை
தானே நடத்திக் கொண்டு
தலையை மட்டும் காப்பதில்
அரசு அதீத அக்கறை கொள்வதிலும்

நீதி மன்றங்கள்
தலையில் கவனம் கொண்டு
மது விற்பனையில்
அக்கறை கொள்ளதிருப்பதுவும்

குடிப்பதற்கு வகை வகையாய்
சரக்குகளை உற்பத்தி செய்ய
அனுமதி கொடுத்து விட்டு
குடிக் கூடங்களை நிறையத் திறந்து விட்டு
அரசு வருவாய்ப் பெருக்க முனைவதிலும்

குடி குடும்பத்தைக் கெடுக்கும்
வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு
என்கிற வாசகங்கள்
அவசியம் என்பதில் மட்டும்
நீதிமன்றங்கள் கவனமாய் இருப்பதுவும்

ஒட்டு மொத்த மனிதன்
குறித்த அக்கறைவிடுத்து
அவன் தலையை மட்டும் குறிவைக்கும்
அவைகளின் சமூக அக்கறை
அப்பப்பா
நினைத்தாலே புல்லரிக்கிறது

சட்டெனச் சாவதை தடுத்து
மெல்ல மெல்லச் சாக ஆவன செய்யும்
அதன் மக்கள் மீதான கரிசனம்
அம்மம்மா
நினைத்தாலே மெர்ஸலாகிறது

வாழ்க அரசும்
நீதி மன்றங்களும்

வளர்க அவைகளின் இதுபோன்ற
சமூகச் சிந்தனைகளும் அக்கறையும்...

Monday, June 29, 2015

சூட்சுமம் ?

நாம்தான் சூட்சுமம் தெரியாது
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோமா  ?

அழகிய மலரினைப்போல
குழந்தையின் சிரிப்பினைப்போல
அன்றாட விடியலைப்போல

அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்

மறைப்புகள் ஏதுமின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகையில்

நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடும்
மூடனாகத் திரிகிறோமா  ?

 தினம் எதிர் கொள்ளும்
சுனாமிச் சீற்றங்களும்
பூகம்ப அதிர்வுகளும்
எரிமலை குழம்புகளும் கூட
நம்முள்
எவ்வித சலனங்களையும்
ஏற்படுத்தாது போக....

வெகு சிலருக்கோ.....
...
முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..

கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..

அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட

விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போக
போதி மரமாகி போக

நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோமா  ?

நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சூட்சுமம் அறியும்  உபாயமறியாதிருந்து
 சவமாய் வாழ்ந்தே சாகிறோமா ?

Friday, June 26, 2015

ஏனில்லை எதிலும் தமிழ் ?

வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்
சங்கர் சைக்கிள் மார்ட் என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்
 " யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர் பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர் பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச் சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது
இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்
முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாக பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது
விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்
எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
நிச்சயமாக நம்மைப் போலவே  
அவனுக்கும் சில நாளில்  புரியக் கூடும்

Thursday, June 25, 2015

சில சந்தேகங்கள்

சராசரிகள் எல்லாம் பள்ளி நாட்களில்
புத்திசாலிகளாய் ஜொலிக்க
உலகுக்கு பல அபூர்வ கண்டுபிடிப்புகளைக்
கொடுத்தவர்கள் எல்லாம் ஏன்
பள்ளியில் சேரவே
தகுதியற்றவர்களாய்க் கருதப்பட்டார்கள் ?

கல்வித்திட்டம் சரியில்லையா அல்லது
நம் அனுமானங்கள் சரியில்லையா ?

சராசரிகள் எல்லாம் இளமைக்காலங்களில்
அறிவுப் பெருக்கத்திற்கு
நூல்களையும் சான்றோர்ளையும் சார்ந்திருக்க
தீர்க்கதரிசிகள் எல்லாம் ஏன்
தனிமையையும் காடு மலைகளையும்
விலங்கினங்களையும் சார்ந்தே இருந்தார்கள் ?

நூல்களைவிட தனிமையும் விலங்கினங்களும்
அதிகம் சொல்லித் தருமோ ?

அறிஞர்களும் சான்றோர்களும்
தங்கள் உணர்வுகளை எண்ணங்களை
நேரடியாக வெளிப்படுத்திப் போக
எல்லையற்ற சக்திமிக்கவனுக்கு மட்டும் ஏன்
தன்னை வெளிப்படுத்திக் கொள்ள
ஒரு அவதாரமோ ஒரு தூதுவனோ
அவசியத் தேவையாக இருக்கிறது ?

ஆண்டவன் என்பவன் மனிதனுக்கு
மட்டும்தானா ? அல்லது
மனிதனுக்குத் தான் ஆண்டவன் தேவையா ?

Wednesday, June 24, 2015

சர்வாதிகாரி- மிகக் குறைந்த அதிகாரத்தில்

பகலும் இரவும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பகலில் இரவில்
எதைச் செய்வது என்பது மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

பருவமும் காலமும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பருவத்திற்கும் காலத்திற்கும்
தகுந்தார்ப்போல நம்மை
தகவமைத்துக் கொள்ளும்
அதிகாரம் மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

ஆயுளும் முடிவும்
நம் கட்டுப்பாட்டில் நிச்சயம் இல்லை
ஆயுள் முடிவதற்குள்
எதைச் செய்து முடிப்பது என்பதை
முடிவு செய்யும்
அதிகாரம் மட்டுமே
நம் வசம் உள்ளது

வார்த்தைகளும் அதற்கான
அர்த்தங்களும் நம் கட்டுப்பாடில் இல்லை
அதனை முழுமையாகப் புரிந்து
மிகச் சிறந்த படைப்பைத் தருவது மட்டுமே
நம் அதிகாரத்தில் இருப்பதைப் போலவும்....

Tuesday, June 23, 2015

தலைமையின் பலமும் பலவீனமும்

அந்த முக்கியப் பிரமுகர் கடந்து செல்வதற்காக
எங்கள் வண்டியை ஓரம் கட்டினார் காவலர்
நாங்கள் எரிச்சலுடன் காத்திருந்தோம்

அந்தச் சிவப்புச்  சுழல் விளக்கு பொருத்திய வண்டி
அதற்கான நூற்றுக்கும் அதிகமான
இணைப்பு வண்டிகளுடன் கடந்து செல்ல
அரை மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது

போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விட்டது

போரடிக்காது இருப்பதற்காகவோ
நிஜமான சந்தேகத்திலோ
நண்பன் இப்படிக் கேட்டான்

"சமூக வாழ்வில் இத்தனை உயரம் தொட்டு
நம்மை வியப்பிலாழ்த்தும் இவர்கள்
தனி மனித வாழ்வில் ஏன்
சராசரிக்கும் கீழாகக் கிடக்கிறார்கள்

சமூகத்தையே சீர்திருத்து இவர்களுக்கு
தன் குடும்பத்தை சரியாக்கத் தெரியாதா ?"
என்றான்

எல்லோரும் அமைதியாக
என் முகத்தைப் பார்த்தார்கள்

"இதோ உனக்கான பதில்
நடு ரோட்டிலேயே நிற்கிறது "என்றேன்

"புரியவில்லை "என்றனர் கோரஸாக

"இதோ சில நிமிடங்களில்
சீர்கெட்டுப் போன இந்த போக்குவரத்தை
சீர் செய்யும் காவலருக்கு
கார் ஓட்டத் தெரியுமா என்பது கூட சந்தேகமே

ஆயினும்

மற்றவர்கள் முறையாக பயணம் செல்ல
மிகச் சரியாக வழிகாட்டத் தெரியும்

அவருடைய முழுத் திறனையும்
அதில் ரசிப்போம்

அவருக்கும்  நம்மைப் போல்
கார் ஓட்டத் தெரிந்து
என்ன ஆகிவிடப் போகிறது "என்றேன்

அவர்களுக்கு என் பதில்
புரிந்ததாகத் தெரியவில்லை

போக்குவரத்து சீராகிக்  கொண்டிருந்தது