Monday, February 29, 2016

அது "வாகிப் போகும் அவன்

காலத்திற்கான குறியீடு
தானே என்னும் கர்வத்தில்
கொஞ்சம் முன்பின்னாக
அந்த மணிகாட்டி நடக்க
எரிச்சலில் நிறுத்திவைத்தேன் அதை

சலனமின்றி  எப்போதும்போல்
காலம் நகர்ந்து கொண்டிருக்க
ஒரு நொடியில்
சவமாகிப்  போனது
அந்த மணிகாட்டி

மன உணர்வுகளின்
உன்னத வெளிப்பாடு
என்மூலம் மட்டுமே
நிச்சயம் சாத்தியம் என
எகத்தாளமிட்டது கவிதை

வார்த்தைகளற்ற
உன்னத இசையின் ஒலியில்
பெருங்கூட்டமே கண்கலங்கி நிற்க
 கர்வம் தொலைத்த கவிதைச் சொன்னது
" நான் அற்பச் சுமைதாங்கி மட்டுமே"

பதவியும் வசதியும்
தந்த கர்வத்தில்
எல்லாமே  நான்  என
எல்லாம் எனக்குள் என
எகிறிக் குதித்தான் அவன்

கவனியாதிருந்தும்
சீராயிருந்த மூச்சுக்காற்று
சட்டென சுழிமாறிப் போக
உடல்விட்டு திசை மாறிப்போக
ஒரு நொடியில்
"அது "வாகிப் போனான் அவன்

குறியீடுகள்
சுமைதாங்கிகள்
அளவீடுகளின்
எல்லையினை
சக்தியினை
குழப்பமின்றி  அறிந்தவன்
வாழ்வைப் புரிந்தவனாகிப் போக
அறியாதவனோ   அற்பனாகிப்போகிறான்

Sunday, February 28, 2016

மரமும் மனிதனும்

ஜடமாக உபயோகமற்று
 நிற்கும் மனிதனை
மரத்துடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

அந்த ஒப்பீடு
மனிதனுக்கு வேண்டுமானால்
பெருமை சேர்ப்பதாக இருக்கலாம்.

ஆயினும் அது
மரத்தினை இழிவுபடுத்துவதாகவே அமையும்

மனிதனின் கழிவுகளைக் கூட
மனிதனுக்கான்
உயிர்காக்கும் உணவாக்கும் சூட்சுமம்
மரங்களுக்கு மட்டுமே தெரியும்

கிடைக்கிறவைகளை யெல்லாம்
உண்டு அனுபவித்துச் சுகித்து
கழிவுகளை  விருத்தி செய்யவே
மனித உடலுக்குத் தெரியும்

நீரிட்டு வளர்த்தவனைக் கண்டு
பூவாகிச் சிரிக்கவும்
கனியாகக் கொடுத்து இரசிக்கவும்
உயிருள்ள மரங்களுக்குத் தெரியும்.

படைத்துக் காத்தவர்களையே
மறக்கவும் இகழவும்
ஒதுக்கிவைத்து  வாழவுமே
ஆற்றவு மனிதனுக்குத் தெரியும்.

வெட்டுப்பட்டால்   கூட
நிலையாகி,சிலையாகி

பட்டுவிட்டால் கூட
விறகாகி உரமாகி

தன் வாழ்வினை
அர்த்தப்படுத்தும் வல்லமை
புனித மரங்களுக்கு உண்டு

இறந்த பின்பும் கூட
எதற்கும் பயனற்று
சகிக்கவொண்ணாப்  பொருளாகி
 தன் இருப்பை
சுமையெனச் செய்யும் வல்லமை
மனித உடலுக்குமட்டுமே உண்டு

இனிமேல் தயவுசெய்து
விளையாட்டாகக் கூட
ஜடமாக நிற்கும் மனிதனை
மரங்களோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

ஏனெனில்
அந்த ஒப்பீடு
மனிதனுக்கு வேண்டுமானால்
பெருமை சேர்ப்பதாக இருக்கலாம்.

Saturday, February 27, 2016

விஜயகாந்த் அண்ணே....

நானும் நம்ம மதுரைதான் அண்ணே.

கண்கள் சிவப்பேற ஆரம்ப கால சினிமாக்களில்
கொடியவர்களைப்  பந்தாடுவதையும்
காக்கிச் சட்டையில் ரவுடிகளையும்
போலி அரசியல்வாதிகளையும்
போட்டுத் தாக்கியதையும்
ரசித்து புரட்சித் தலைவருக்கு அடுத்து
உங்கள் படங்களைத்தான்  அண்ணே
அதிகம் பார்ப்பேன்

பின் கொஞ்சம் நகர்ந்து நடிகர்
சங்கத் தலைவர் ஆனது
அது வைத்திருந்த கடனை அடைத்தது
எல்லாம் தங்கள் மதிப்பை என்னுள்
கூட்டியது  நிஜம்தான் அண்ணே

அணி மாறி நின்னு பின்னால தனித்து
நின்னு நீங்க செய்த அரசியலையெல்லாம்
விரிவா எழுதனும்னா அதிகப் பக்கம்
ஆகிடும் அண்ணே.அதனால அதையெல்லாம்
விடுத்து நேரடியாக இப்ப விஷயத்துக்கு
வரேன் அண்ணே.

இப்படியெல்லாம் அறிந்தோ அறியாமலோ
அல்லது அரசியல் சூழலினாலோ அல்லது
சுய நல ஆதாயத்துக்காகவோ நீங்க
மாறி மாறி நின்னதுனால உங்களுக்குன்னு
ஒரு ஓட்டு சதவீதம் இருக்குன்னு
எல்லோருக்கும் புரிஞ்சு போச்சு அண்ணே

உங்களுக்கும் புரிஞ்சு போச்சு அண்ணே
அதனாலதான் நீங்களும் இப்ப ரொம்ப
போங்கு ஆட்டம் போடறிங்க  அண்ணே

ஆனா இப்ப மிகச் சரியா முடிவு எடுக்காட்டி
அது தலைகிழா மாறவும் தரிசாப் போகவும்
நிச்சயம் வாய்ப்பிருக்கு அண்ணே

எனக்குத் தெரிய தமிழகத்தில்
ஒவ்வொரு ஜாதிக்கும்
ஒரு பெல்ட் இருக்குண்ணே

உங்க இனத்துக்கு மட்டும் ஒரு பெல்ட்டுன்னு
இல்லாம பரவலா இருக்கிறது மட்டுமல்லாம
எண்ணிக்கை ரீதியாக நடுத்தர மக்களாகவும்
இன்னும் உழைக்கும் மக்களாகவும்
கணிசமான பணக்கார்களாகவும் பரந்து
கிடக்குண்ணே

அதனாலதான் புரட்சித்தலைவரை
தி.மு.கவே எதிர்த்து போராட்டம் நடத்தத்
தயங்கியபோது நாராயணசாமி நாயுடுவாலே
ஒரு பெரிய இயக்கத்தை தலைவருக்கு எதிரா
நடத்த முடிந்தது

தி.மு.க வில் சுப்புவுக்கு  (பின் அதிமுகவில்  )
மிக மோசமாக மின்சாரத்துறை இருந்தபோதும்
ஆற்காட்டாரை விடாது கலைஞர்
 தாங்கிக்  கொண்டிருந்ததெல்லாம்
மறைமுகமாகஉங்கள் ஜாதியைத்
திருப்திப்படுத்தத்தான் அண்ணே

வை.கோ அவர்கள் பிரிந்தபோது கூட
எல்லா கட்சியிலேம் நம்ம கறிவேப்பிலைபோல
பயன்படுத்தறாங்க, இதோ நமக்குன்னு
ஒரு தலைவர்ன்னுஅவர் பின்னால
போனாங்க அண்ணே

அவர் பாவம் நிலைமை புரியாம
மோசபோட்டொமியா,கிரீஸு,மார்க்ஸுன்னு
புலி சிங்கம்முன்னு  கவுண்டமணி
மாதிரி உள்ளூரைபத்தியே பேசாம
 வெறுப்பேத்தி நோகவிட்டுட்டாரு அண்ணே

அதுல வேறுத்துப் போனது பெரும்வாரி  ஜனம்
உன்னை நம்பி உங்கப் பக்கம் இருக்கு அண்ணே

இதை மனசுல வைச்சு முடிவு எடுங்க அண்ணே
நிலைமைய கொஞ்சம்  தெரிஞ்சுக்க  அண்ணே

இல்லாட்டி முன்னால சொன்னவங்க
நிலைமைதான் உங்களுக்கும் அண்ணே

எங்களுக்கு அதுல சந்தேகம் இல்ல அண்ணே

Friday, February 26, 2016

சிரிப்பின் பலமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

Thursday, February 25, 2016

எதிர்மறையே எப்போதும் முன்னே வா...

பசியே வா.....

ஊழிக்கால நெருப்பாய்
குடல் முழுதும் பரவி
முற்றாக என்னை எரி

எனக்கு ருசியின் அருமையை
முழுமையாய் ருசிக்க வேண்டும்

பிரிவே வா......

இதயத்தோடு
இரண்டறக் கலந்தவைகளையெல்லாம்
கிழித்துத் தூர எறி

நான அன்பின் ஆழமதை
அணுஅணுவாய் ரசிக்க வேண்டும்

பகையே வா......

உன் போர்த்தந்திரங்களையெல்லாம்
வெறியோடு பயன்படுத்தி
என்னை நிர்மூலமாக்க முயற்சி செய்

இருக்கும் பலம் போதாது
நான் இன்னும் பலம் பெற வேண்டும்

அஞ்ஞானமே வா.....

நீர் மறைத்த நிலமாய்
ஞானத்தை என்னிடமிருந்து
முற்றாக மறைத்துவை.

அசுர வெறியோடு தேடிப் போராடி
நானாக பூரணமாய்  அடைதல் வேண்டும்

எதிர்மறையே வா......

பகலுக்கு முன்வரும் இரவாய்
சுகத்திற்கு முன் வரும் துயராய்
எப்போதும் நீயே முன்னே இரு

நேர்மறையின் அருமையையும் பெருமையையும்
உனைவைத்தே நான் முழுமையாய்உணர  வேண்டும்

Wednesday, February 24, 2016

அவரவர் அளவுக்கு ......

என் நண்பன் தன் மகனை
குச்சியால் விளாசிக்கொண்டிருந்தான்
தடுத்து நிறுத்திக்  காரணம் கேட்டேன்

"எத்தனைமுறை சொல்லியபோதும்
கேட்காது தொடர்ந்து
பக்கத்து பையனிடம்
பேனா பென்சில்
திருடிக்கொண்டு வருகிறான்

நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்

கூடியிருந்த பக்தர்களை நோக்கி
கைகளை மிக உயர்த்தி
"கதவுகளைத் திறவுங்கள்
காற்று வரட்டும் "என்றார்
காவியில் இருந்த இளைய துறவி

தனித்து ஆசிரமத்திருக்கையில்
கதவருகில் இருந்த
ஆத்ம சீடனை நோக்கி
"கதவை மூடிப் போ
அவள் மட்டும் இருக்கட்டும்"என்றார்
ஜாலியில் இருந்த அதே துறவி

தமிழர்களின்
பண்பாடு குறித்து
கலாச்சார பெருமை குறித்து
கோடை மழையென
மேடையில்
கொட்டித் தீர்த்தார்
அரசியல்  தலைவர்

கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்துக்  கேட்டுக்கொண்டிருந்தனர்

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

Tuesday, February 23, 2016

ஊற்று வலையுலகஎழுத்தாளர்கள் மன்றம்

 ஊற்று வலையுலகஎழுத்தாளர்கள்  மன்றத்தின்
( மலேசியா )சார்பாகத்   தைப்  பொங்கலை
முன்னிட்டு  நடைபெற்ற கவிதைப் போட்டியில்
என்னையும் நடுவராக இருக்கப்
பணித்த   நிர்வாகிகளுக்கு  என் நன்றியைக்
காணிக்கையாக்கி  போட்டியின்  முடிவுகளை
வெளியிடுவதில்  மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வெற்றி வாகைச்  சூடிய   மற்றும்   போட்டியில்
பங்கு கொண்ட   கவிஞர்கள்கள்  அனைவருக்கும்
என் மனமார்ந்த  நல்வாழ்த்துக்கள்




கவிதைகளைப்  படித்து இரசிக்க  ....
http://ootru1.blogspot.com/2016/02/blog-post.html