Sunday, July 31, 2016

கலைகள் அனைத்துமே......

கலைகள்  அனைத்துமே
மகத்தானவை
அற்புதமானவை
அழகானவை மட்டுமல்ல
விளையாட்டுத்  தனமானதும் கூட

அதானாலேயே
தன்னைப் பயன்படுத்தி
தன்னை  உயர்த்திக் கொள்ள
முயல்வோனுக்கு
முக்காடிட்ட
முகம்காட்டும் அதுவே

தன்மை மறந்து
அதனில் கரைவோனுக்கு
முழுமுகம் காட்டி யும்
முறுவலித்தும்
வாழ்த்திப் போகிறது

ஆம்
கலைகள் அனைத்தும்
மகத்தானவை
அற்புதமானவை
அழகானவை மட்டுமல்ல
விளையாட்டுத்  தனமானதும்  கூட

கலைகள் என்னும்
பொதுப் பெயர்
கவிதைக்கும் பொருந்தும்  என்பது
சொல்ல வேண்டியதா  என்ன ?

Friday, July 29, 2016

முன்.......

குடை விரிக்கும் முன்
சட்டெனப் பெய்து
மனம் நனைக்கும்
கோடை மழையாய்

விழி பார்க்கும்முன்
மேகமெனத் திரண்டு
மனம் நிரம்பும்
மணமலராய்

கைவிரிக்கும் முன்
சட்டெனத் தாவித்
தோளேறும்
மழலைச் செல்வமாய்

பசி யறியும் முன்
கிண்ணத்தில்அமுதுடன்
எதிர்வரும்
அன்புத் தாயாய்

எழுத முனையும் முன்
எண்ணமாய் எழுத்தாய்
எதிர்விரியும்
அமுதத் தமிழே

கடலதன் முன்
கை நனைத்த்த சிறுவன்
கடலையறிந்ததாய்
களிகொள்ளும் கதையாய்

பேரண்டமே உம்முன்
சிறுபுழு நான்
பிதற்றித் திரிகிறேன்
கவியென்றே நாளும்

விழிமூடும் முன்
ஒருசிறு கவியேனும்
கவியென நிலைபெற
நவின்றிட அருள்புரி

Thursday, July 28, 2016

பதிவர் சந்திப்புப் பல்லவி

 சுவையான கனிகளை
இரசித்து உண்ட பின்
அது உண்டான மரம் பார்க்கும் ஆசை

வெக்கைப் போக
அந்த இதமான சூழலைத் தந்த
கருமேகங்களைக்  காண ஆசை

நல்ல விருந்தினை
இரசித்துப் புசித்தப்  பின்
அதைச் சமைத்தவனைப் பார்க்கும் ஆசை

மணக்கும் மல்லிகையைப்
நுகர்ந்ததும்
மதுரையைப் பார்க்கும் ஆசை

மொறுமொறு முறுக்கினை
கடித்து முடித்ததும்
மணப்பாறைப் பார்க்கும் ஆசை

நாவைக் குளமாக்கும் அல்வாவை
உண்டு முடித்ததும்
நெல்லையைக் காணும் ஆசை

விடாது தொடருதல் போல

சிறந்தப் பதிவுகளைப் படித்ததும்
அதைப் படைத்தவனைப்
பார்க்கும் ஆசை

விடாது தொடருதல் என்னுள்

நடந்து முடிந்த சந்திப்புக்கள்
தொடர்ந்து ஓடுது கண்ணுள்

என்று ?
எங்கு ?
எப்போது ?
என்னும் கேள்விகளோடு

வழக்கம்போல்
ஊதுகிற சங்கை ஊதிவைக்கிறேன்

விதைக்கிற விதையை விதைத்து வைக்கிறேன்

சரணங்களும்
அனுசரணங்களும்
பல்லவியைத் தொடரும்
என்கிற அதீத நம்பிக்கையுடன்  

Wednesday, July 27, 2016

நெஞ்சில் ஈரம் என்றும் காப்போம்



ஈரம் காப்போம்
வறண்டு விடாது
ஈரம் காப்போம்

மண்ணின் செழுமைக்கு
மண்ணில் ஈரம்
மனிதரின் வளமைக்கு
நெஞ்சில் ஈரம்

கோடைச் சூரியன்
எப்படித் தாக்கினும்
அடைமடி ஈரம்
காத்திடும் பூமி

எப்படிக் கறப்பினும்
கன்றுக்கு பாலினை
ஒதுக்கியே வைத்திடும்
அழகியத் தாய்ப்பசு

அதுபோல்

சுயநலச் சூரியன்
எப்படி எரிப்பினும்
அடிமன  ஈரம்
அகலாது காப்போம்

நம் நிலை எந்நிலை
ஆன போதிலும்
நம்சுகம் கொஞ்சம்
நலிவுறும் ஆயினும்...

ஈரம் வரும்வழி
மழைவழி நதிவழி
எவ்வழி என்று
பூமி பிரிப்பதில்லை

ஈரம் வரும் வழி
மதவழி இனவழி
எவ்வழி என்று
நாமும் பிரிக்காது

நெஞ்சில் ஈரம்
என்றும் காப்போம்
அனைவரும் உயர்ந்திட
ஆனதைச் செய்வோம்

(இந்த  நிகழ்வுக்கு அனைத்து விதத்திலும்
ஊற்று அமைப்பின் சார்பாக அனைத்து
விதத்திலும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர்கள்
மதிப்பிற்குரிய  ரூபன் ராஜா மற்றும்
நண்பர் யாழ்பாவாணன் ஆகியோரையும்
அறிவுக்குக்கண்  கல்விக்கு கைக்கொடுப்போம்
அமைப்பினரையும் மனதார பாராட்டுவதன் மூலம்
நாமும் இந்த நிகழ்வில் பங்குபெறலாமே )

வாழ்த்துக்களுடன் ....



Tuesday, July 26, 2016

கணந்தோறும் தினந்தோறும்

கணந்தோறும்
தினந்தோறும்

நகரக் காடுகளில்
காங்கிரீட் கூடுகளில்
தவித்துக் கிடக்கின்றன
தாய்ப்பறவைகள்

உடல் அலகுகள்
மனச் சிறக்குகள்
உறுதிப் பெற
பயிற்சிப் பெற

வெளிச் சென்ற
இளங்குஞ்சுகள்

காதல் வலைவிரித்துக்
காத்திருக்கும்
கயவர்களிடன் சிக்கிவிடாது

காம வில்லேந்திக்
காத்திருக்கும்
வேடர்களால் வீழ்ந்திடாது

கூடு வந்துச்
சேர வேண்டி

நாளும்பொழுதும்
இறைவனை வேண்டியபடி

நாளும்
வலையில் வீழும்
குஞ்சுகளின்
எண்ணிகையறிந்து
பயந்தபடியும்

தினமும்
அடிபட்டுப்பட்டுச் சாகும்
குஞ்சுகளின்
நிலையறிந்து
நொந்தபடியும்

நகரக் காடுகளில்
காங்கிரீட் கூடுகளில்
தவித்துக் கொண்டிருக்கின்றன
தாய்ப்பறவைகள்

தினந்தோரும்
கணந்தோரும்

இதற்கொரு
விடிதலை  வேண்டியபடியும்
முடிவினை நாடியபடியும்



Friday, July 22, 2016

இது கபாலிக்கும் பொருந்தும்...

எத்தனைச் சிறப்பாக
வடிவமைக்கப்பட்டிருக்கினும்
அதை இயக்குவோன்
எத்தனைத் திறன்
மிக்கவனாயினும்

வாகனம் பொறுத்து
அதற்கென ஒரு
வேக அளவுண்டு

அது
மிதி வண்டி ஆயினும்
நவீன விமானமாயினும்

அளவை மீறுகையில்

அந்த அற்புத
வாகன்ம் மட்டுமல்ல
அந்தத் திறன் மிக்க
இயக்குவோன் கூடத்

தனக்கான மதிப்பினிலிருந்து
இறங்கவே சாத்தியம்
தனக்கான இடத்திலிருந்து
சரியவே சாத்தியம்

இது
கட்டை வண்டிக்கு மட்டுமல்ல
கபாலிக்கும் பொருந்தும்

Thursday, July 21, 2016

நித்தமும் புதிதாய்ப பிறக்கிறேன்

நித்தம்
முத்துக் குளிக்கிறேன்

அடி ஆழம் போய்
நித்தம் குளித்து வந்தாலும்

முத்துக்களை விட
சிப்பிகள் கிடைக்கவே
அதிகச் சாத்தியம்
என்பது புரிந்தாலும்

முத்துக்கள் எடுக்க
முத்துக்கள் கிடைக்க
இதுவொன்றே
ஆன வழி என்பதாலும்

என்றாவது
எதனுள்ளாவது
முத்துக்கள் கிடைக்கச்
சாத்தியம் என்பதாலும்

நித்தமும்
முத்துக் குளிக்கிறேன்

இதனால்
ஒருவகையில்
நித்தமும்
புதிதாயும்   பிறக்கிறேன்