Sunday, October 25, 2020

கற்றலின் கேட்டலே சிறப்பு

 மூன்றாவது 

கவிதை நூலுக்கான வேலைகளில்

மிகத் தீவீரமாய் இருந்தான் என் நண்பன்


ஏற்கெனவே வெளியிட்ட

இரண்டு நூல்களும் பெருவாரியாய்

அறையை அடைத்துக் கிடக்க

மீண்டும் இவன் படும் அவஸ்தை

என்னை ஆச்சரியப்படுத்தியது


"எதற்காக எழுதுகிறாய்

உன்னை உலகுக்கு நிரூபிக்கவா ?

சொல்லவேண்டியவைகளை

உலகுக்கு சொல்லித்தான் ஆகவேண்டும்

எனும் உந்துதலை திருப்திப்படுத்தவா ? "

என்றேன்


நான் எதிர்பார்த்தைப் போலவே

ஒருவிதத்தில் 

எல்லா இலட்சிய எழுத்தாளர்களைப் போலவே

இரண்டாவது காரணத்தைத்தைத்தான் சொன்னான் அவன்.


"சரி ஒருமுறை

எத்தனைப் பிரதிகள் வெளியிடுவாய்"என்றேன்


"முதலில் ஆயிரம் அடுத்தது ஐநூறு

இப்போது முன்னூறு " என்றான்


"ஏன் குறைந்து கொண்டே போகிறது "எனக் கேட்க


"அவ்வளவுதான் போகிறது " என்றான்


தயாரிப்புச் செலவு

வெளியீட்டுச் செலவு எல்லாம் 

அவன் சொல்லச் சொல்ல

மலைப்பாக இருந்தது


"நானும் சில விஷயங்களை

உலகுக்கு சொல்லத்தான் நினைக்கிறேன்

அதற்காகவே பதிவுகளாக

என் பாணியில் எழுதுகிறேன்


குறைந்த பட்சம் நாளொன்றுக்கு

இருநூறு பேர் வாசிக்க

வருடத்திற்கு அறுபதாயிரம்  கணக்கில்

இப்போது பத்து வருடத்தில்

ஆறு இலட்சத்தைக் கடந்து கொண்டிருக்கிறேன்

அதுவும் உள்ளூரில் மட்டுமல்ல

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில்..."

நெட் செலவு தவிர வேறு செலவில்லை..."

எனச் சொல்லி நிறுத்த....


அதை ஹாலில் அமர்ந்து

கவனிக்காதது போல் இதுவரை

கவனித்துக் கொண்டிருந்த

அவருடைய மனைவி

சட்டென எழுந்து உள்ளே போய்

தட்டுடன் திரும்பி வந்து.....


"முறுக்கு நான் செய்து அண்ணே

சாப்பிட்டுக் கொண்டே பேசுங்க அண்ணே " 

என்றார்


அவரின் குறிப்பு எனக்குப் புரிந்தது


குறிப்பை என் இலட்சிய நண்பனுக்கும்

புரிய வைக்க முயன்று கொண்டிருக்கிறேன்...

Thursday, October 22, 2020

வெல்லும் தலைவர்கள்...

மூடத்தனத்தால்

பதிந்த நம்பிக்கையின் பலம்

பகுத்தறிவினால்

விளைந்த நம்பிக்கையில் இல்லை


சடங்கு சம்பிரதாயங்களால்

மனதுள் பதிந்த செயல்கள்

பயனறிந்து செய்ய முயல

அதன் சுவடுகளே தட்டுப்படவில்லை


விவரமறியா வயதில்

இணைந்த நட்பின் இறுக்கம்

விவரமறிய தொடரும் நட்பில்

துளியும் இல்லவே இல்லை.


இவையெல்லாம் இப்படி

என ஆகிப் போனதால்தானோ என்னவோ.

இந்தச் சூட்சுமத்தை.

நன்கு புரிந்து கொண்டதால் தானோ என்னவோ


பயனுள்ள தேவையான

விஷயங்களைவிட...

பயனற்ற சுவாரஸ்யங்க்களே

இங்கு அதிகம் விற்பனையாகின்றன


கடமையை பொறுப்பினை 

உணர்த்தும் தலைவர்கள்

செல்லாக் காசாக்கிப் போக


உணர்வினை ஆசையினைத்

தூண்டும் தலைவர்களே

வெல்லும் தலைவர்களாகிப் போவதைப் போலவே... 

Monday, October 12, 2020

மனம் நிறைந்த மனோ..


 SPBக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று திருவண்ணாமலையில் அவரது தங்கை S.P.சைலஜா விளக்கேற்றி வேண்டியுள்ளார்.. 


இதில் நெகிழ வைத்த நபர், நெற்றி நிறைய விபூதியுடன், வேட்டி சட்டையில் பயபக்தியுடன் விளக்கேற்றிய மனோ தான்..


பிறப்பால், பழக்க வழக்கத்தால் இஸ்லாமியரான அவரது இந்த சைகை தான் நம் சமூகத்தின் நிஜமான பிரதிபலிப்பு.. '


“வணக்கம் சொல்ல மாட்டேன்', 'பிற மதக் கடவுளுக்குப் பூஜை செய்ததைச் சாப்பிட மாட்டேன்' என்பதெல்லாம் நம் சமூகத்திற்கும் நம் பண்பாட்டிற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாத வந்தேறி வழக்கங்கள்.. 


சகமனிதன், வேறு நம்பிக்கை கொண்டிருந்தாலும் அதையும் மதிப்பது தான் நம் மண்ணின் மாண்பு.. மனோ அதைத் தான் கச்சிதமாகச் செய்து காட்டினார்..


வேறு மதங்களைப் பின்பற்றினாலும், அவற்றின் வந்தேறி வழக்கத்தைப் பிடித்துத் தொங்காமல், சக மனிதனின் நம்பிக்கைகளை மதிக்கும் மனோ, யேசுதாஸ் போன்றோர் தான் இந்த மண்ணின் மைந்தர்கள்.. 


இவர்கள் தான் சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இருக்க வேண்டியவர்கள்.. 


மாறாக திராவிட & கம்யூனிச ஆட்கள், தாங்கள் தான் செக்யூலரிசத்தின் ஒரே அத்தாரிட்டி என்பது போல் செயல்படுவதால் தான் இங்கு ஒருவருக்கொருவர் இத்தனை முட்டல் மோதல்கள்..


எந்த இந்துவும் சர்ச்சுக்குள்ளோ மசூதிக்குள்ளோ போக யோசிப்பதில்லை.. சிவன், பெருமாள் மாதிரி ஏசு & அல்லாவும் அவனுக்கு ஒரு கடவுள் தான்.. அதனால் தான் அவன் உருத்தாக பிரியாணி கேட்கிறான், வேளாங்கண்ணி மாதா படம் போட்ட மோதிரம், எண்ணெய் கேன் என பயன்படுத்துகிறான்.. 


இதையே பதிலுக்குச் செய்யும் மனோவும் யேசுதாஸும் தான் இந்தச் சமூகம் சமநிலையாக இருக்க முழுபலத்தோடு உதவுபவர்கள்.. 


மனோக்களும் யேசுதாஸ்களும் அதிகரிக்கும் போது தான் செக்யூலரிசம் எத்தனை போலியானது என நமக்குத் தெரிய வரும்..


துரதிர்ஷ்டவசமாக, மனோக்களையும் யேசுதாஸ்களையும் என்றும் அதிகரிக்க விடாது திராவிட & கம்யூனிச அரசியல்.. 'சிறுபான்மை, ஒடுக்குமுறை, பார்ப்பனீயம்' என்றெல்லாம் தூண்டிவிட்டு அவர்களை எந்நேரமும் பயத்திலேயே இருக்க வைத்து, பெரும்பான்மைக்கு எதிராகக் கொம்பு சீவி விடுவது மட்டுமே இவர்களின் குறிக்கோள்.. 


மனித குலத்தின் நோய் கம்யூனிசம் என்றால், தமிழ் இனத்தின் நோய் திராவிடம்.. இந்த நோய்க்கான மருந்து, மனோ, யேசுதாஸ் போன்ற இந்திய பாரம்பரியத்தை மதித்து வாழும் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமே


நன்றி Ram Kumar

Sunday, October 11, 2020

ஆம் பதிவர் சந்திப்பில் உச்சம் இதுவே...

  நான் சிறுவனாக இருக்கையில்

எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையாக
இருந்தவர்கள் எல்லாம்  சிவாஜி
எம்.ஜி.ஆர் விஷயத்தில் இரண்டாகப்
பிரிந்து விடுவோம்

யாராக இருந்தாலும் இரண்டில் யாராவது
ஒருவர் பக்கம் நின்றாகவேண்டும்

இரண்டு பக்கமும் என்பதற்கெல்லாம்
அப்போது வாய்ப்பே கிடையாது

எப்படித்தான் அருமையாக சண்டைப்
போட்டாலும்  எம்.ஜி ஆர்அவர்களுடன்
ஒப்பிட்டுப் பேசுதல் என்பது கிடையாது
அவர் லெவலே வேறு

ஆனால் புதிதாக நடிக்க வந்தவர்கள்
யாராக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்தால்
அவரை சிவாஜி அவர்களுடன் ஒப்பீடு
செய்வோம்.அனேகமாக அது
சிவாஜிக்கு முக்கால்  வருவார்,அரை வருவார்
கால் தூசி பெறமாட்டார் என்பதைப்
போலத்தான் எப்போதும் இருக்கும்

எனக்குத் தெரிய அந்த லிஸ்டில் மேஜர்
சவுந்திரராஜன்,ஏ.வி எம் ராஜன் எல்லாம்
 வந்து போனதுண்டு

ஆனால் யாரும் சிவாஜி அவர்களுக்கு
இணையாக வந்ததில்லை

அதைப் போலவே இனி பதிவர் சந்திப்பு
என்றால் புதுகைப் பதிவர் சந்திப்புத்தான்
நிச்சயம் ஒரு அளவுகோலாக இருக்கும்
புதுகைப் பதிவர் சந்திப்புப் போல் வராது
அல்லது புதுகைச் சந்திப்பைப்போலச்
சிறந்தது,அல்லது புதுகைப் பதிவர் சந்திப்பை
விட மிகச் சிறப்பாக இருந்தது
என்பதைப் போலத்தான் நிச்சயம் இருக்கும்

அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக பதிவர்
சந்திப்பை நடத்தி முடித்த அனைவருக்கும்
அதற்கு முழுமையாக அனைத்து விதத்திலும்
ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும்
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்வதோடு...

இந்த ஒற்றுமையும்,அமைப்பும் பதிவர்
சந்திப்பு நடத்துவதற்காகக்த்தான்
என்பதற்காக மட்டும் இல்லாது,

பதிவர்களுக்குள் எப்போதுமே ஒரு
இணப்புப் பாலமாக இருக்கும்படியான
ஒரு அமைப்பாக மாற்றினால்...

கூட்டு முயற்சியில் பொதுவாக ஒரு
வலைத்தளம்(தமிழ்மணம் போல் )
உருவாக்கும்படியான முயற்சியில் ஈடுபட்டால்...

புத்தகமாக தமது படைப்புகளை வெளிக்
கொணர விரும்புவோருக்கு  உதவும் ஒரு நல்ல
அமைப்பாக மாறினால்...

தொழில் நுட்ப ரீதியாக ஆலோசனை
வேண்டுவோருக்கு எப்போது வேண்டுமானாலும்
உதவும் ஓர் அமைப்பாக மாறினால்..

நல்லதோர் வீணையை  நலங்கெடாது
அதற்குரிய உயரிய பீடத்தில் வைத்தது போலாகும்
எனக் கூறி எனது இந்தத் தொடர்பதிவை
மகிழ்வுடன் நிறைவு செய்கிறேன்

வாழ்த்துக்களுடன்....(ஆம் இதே நாளில் 2015 ல் பதிந்தது )
























Thursday, October 8, 2020

வெற்று உரலை இடித்தபடி

 கண்டதும்

கண்களை இமைக்கவிடாது
சுண்டி இழுக்கும்படியாய்
ஒரு அருமையான தலைப்பும்..

ஆரம்பமே
அமர்க்களமாய் இருக்கிறதே என
எண்ண வைக்கும்  படியாய்
சுவாரஸ்யமான பல்லவியும்

கருவிட்டு விலகாது
சங்கிலிக் கண்ணியாய்த்
தொடர்ந்து மயக்கும்
அசத்தலான சரணங்களும்

மூன்றையும்
மிக நேர்த்தியாய் இணைத்து
அட டா என தலையாட்டவைக்கும்
அருமையான முடிவும்

மிகச் சரியாய் அமைந்தால்
ஒரு கவிதை எழுதி விடலாம் என
அனுதினமும் காத்திருக்கிறேன்

என்றும் போல இன்றும் 
வெற்று உரலை 
வேதனையுடன் இடித்தபடி....

Tuesday, October 6, 2020

கண்டேன் சீதையை....

என் சிறு வயதில் ஏறக்குறைய

ஓராண்டு காலம் செவ்வாய் மற்றும்

சனிக்கிழமைகளில் இராமாயண உபன்யாசம்

கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.


உபன்யாசம் கேட்கப் போகாவிட்டால்

இரவு உணவு பாதிக்கப்படும் எனும்

நிலையில் வீட்டின் கண்டிப்பு இருந்ததாலும்

உபன்யாசகர் வெகு சுவாரஸ்யமாகக்

கதை சொல்லிப் போனதாலும் நான்

கூடுமானவரையில் உபன்யாசம் 

கேட்கப் போவதைத் தவிர்ப்பதில்லை


அன்று சிறு வயதில் கேட்ட இராமாயணக் கதை

மட்டுமல்ல சில குறிப்பிட்ட காட்சிப் படிமங்களும்

அன்று என்னுள் பதிந்தது இன்று வரை என்

நினைவில் இருப்பது என்பாக்கியம் எனத்தான்

சொல்லவேண்டும்


அவற்றுள் முக்கியமானது சீதையை

இலங்கையில் சந்தித்து பின் இராமனை

அனுமன் சந்திந்த நிகழ்வை அந்த

உபன்யாசகர் உபன்யாசம் செய்த விதம்...


அனுமனைத் தவிர அனைவரும் பல்வேறு

திசைகளில் சீதையைத் தேடிச் சென்று

எவ்வித நேர்மறையான தகவலும் இன்றித் திரும்ப

மீதம் நம்பிக்கையூட்டும்படியாய் இருந்தது

அனுமன் வருகைமட்டுமே என்றிருந்த நிலையில்..


அனுமன் வருகிற செய்தி அறிந்து இராமன்

கொள்கிற பதட்டத்தையும் அவன் என்ன சொல்லப்

போகிறாரோ என கொண்ட அதீத எதிர்பார்ப்பையும்

இராமானாகவும் அனுமனாகவும் அவர்

கதாப்பாத்திரமாகவே மாறி மாறி உபன்யாசம்

செய்து கேட்போருக்குள் பதட்டத்தைக் கூட்டி.....


சீதையைக் கண்டேன் எனச் சொல்லாமல்

கண்டேன் சீதையை எனச் சொன்னதன்

முக்கியத்துவத்தை கேட்போரும் உணரச்

சொன்னவிதம், அந்தக் காட்சி ஏன் அந்தச்

சூழல் கூட இன்று என்னுள் நிழற்படமாய்

இருக்கிற சூழலில்.....


இந்த கொரோனா காலத்தில் முக நூல்

மற்றும் வலைத்தளங்களில் வருகிற

சில பதிவுகளும் அதே தாக்கத்தை

ஏற்படுத்திப் போகிறது என்றால்

அது மிகையில்லை


பிறந்த நாள் வாழ்த்து மண நாள் 

வாழ்த்துகளைப் பதிவு செய்கிறவர்கள்

எல்லாம் முதலில் வாழ்த்துச் செய்தி 

என்று பதிவு செய்யாமல் சம்பத்தப்

பட்டவரின் புகைப்படத்தைப் பதிவு செய்துவிட்டு

பின் அவர் குறித்த சிறப்பான விஷயங்களை

எல்லாம் பதிவு செய்துவிட்டு பின் 

கடைசியாக பிறந்த நாள் வாழ்த்து எனவோ

மணநாள் வாழ்த்து எனவோ பதிவிடுவதற்குள்

ஏற்கெனவே பல்வேறு எதிர்மறைச் செய்திகளால் தகவல்களால் பாதிக்கப் பட்டிருக்கும் நம் மனம் எதையோ கற்பனை செய்து

படபடத்து முடிவைப் படித்ததும் தான்

ஆசுவாசம் கொள்கிறது..


எனவே இந்தக் கொரோனா கொடூரம்

முடிகிறவரையிலாவது முதலில் சம்பத்தப்பட்டவரின்

புகைப்படத்தைப் பதிவு செய்யும் முன்

சொல்லின் செல்வர் அனுமன் 

கண்டேன் சீதையை எனச் சொன்னதைப் போல

பிறந்த நாள் வாழ்த்து என்றோ

மண நாள் வாழ்த்து என்றோ பதிவிட்டுவிட்டு

பின் புகைப்படத்தைப் பதிவு செய்தால்

தேவையற்ற சில நிமிடப் பதட்டம் குறையும்

எனபதோடு இந்தச் சாக்கில் இராமனையும் அனுமனையும் சில நிமிடங்கள் நினைக்கிற பாக்கியமும் 

புண்ணியமும் நிச்சயம் வந்து சேரும்

என்பது என் அபிப்பிராயம்...


 சரிதானே.....

Monday, October 5, 2020

சிம்மாசனம் அமர்ந்த பிச்சைக்காரனாய்...

 மக்கள் மனமறிய

ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?