Friday, November 20, 2020

படித்ததும் பகிரப்பிடித்தது..

 *இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!*

*திருப்பூர் கிருஷ்ணன்*

...........................................................

 `தம்பீ! நூறு ரூபாயை நீயே வைத்துக் கொள். நாளை இந்தப் பாதையில் வரும்போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புகிற மாதிரி நானும் உன்னை நம்புகிறேன். நான் வயசானவள். திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகி விட்டால் நேரே கடவுளிடம் போய்ச் சேர வேண்டும். உன் எழுபது ரூபாயைத் திரும்பத் தருவதற்காக நான் மறுபிறவி எடுக்கக் கூடாது!`

...........................................................


 *உலகில் எத்தனையோ தீமைகள் இப்போது அதிகரித்துள்ளன. லஞ்சம், ஊழல், பாலியல் வன்முறை என இன்று நம்மை வந்துசேரும் செய்திகள் பல நம் மனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. ஆனால் இதே உலகில் இன்றைய காலகட்டத்திலேயே பல நல்ல செயல்களும் நடைபெறத்தான் செய்கின்றன. அவை அதிகம் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை. அவற்றைப் பற்றிப் பலர் அறிவதில்லை. 


 அத்தகைய செயல்களைச் செய்யும் நல்லவர்களால்தான் இன்றும் மழைபெய்கிறது! `நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!` என்பதல்லவா தமிழ் மூதாட்டி அவ்வையின் திடமான தீர்மானம்!....


 *நண்பரொருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ரயிலில் வந்து இறங்கினார். வடபழனி தாண்டிப் போகவேண்டும். ஆட்டோ பிடித்தார். நான்கரைக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ கட்டணம் ரூ 230. 


 பர்ஸை எடுத்துப் பார்த்தார். என்ன சங்கடம். ஐநூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார்.


 `நீங்கள்தான் முதல் சவாரி ஐயா. என்னிடமும் சில்லரை இல்லையே?` என்றார் ஓட்டுநர். 


 அதிகாலை நான்கரை மணிக்கு எந்தக் கடையும் திறந்திருக்காது. யாரிடம் போய்ச் சில்லரை வாங்குவது? யோசித்த நண்பர், பெருமூச்சுடன், `சரி. மீதி உன்னிடமே இருக்கட்டும்` எனச் சொல்லிவிட்டார். ஆட்டோ ஓட்டுநர் அவரின் செல்பேசி எண்ணைக் கேட்டு வாங்கிக் கொண்டார். 


 காலை பத்தரை மணி இருக்கும். நண்பரின் செல்பேசியில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. குறுஞ்செய்தி அனுப்பியவர் அந்த ஆட்டோ ஓட்டுநர்தான். குறுஞ்செய்தியில் இடம்பெற்றிருந்த தகவல் என்ன தெரியுமா? 


 `உங்களுக்கு நான் தரவேண்டிய மீதித்தொகை ரூ 270 க்கு உங்கள் செல்போனில் ரீசார்ஜ் செய்துவிட்டேன்! நன்றி.`


 மிகுந்த வியப்படைந்த நண்பர் தன் செல்போனையே தன் கண்ணில் ஒற்றிக்கொண்டார். 


  ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டருக்கு மேல் பணம் கேட்பதையே முன்னிலைப் படுத்திச் சொல்கிறோம். அவர்களிடையே இப்படிப் பட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் சொல்வதில்லை....


 *இன்னொரு நண்பர் குடும்பத்தோடு காரில் பெங்களூர் புறப்பட்டார். வழியில் சாப்பிடுவதற்கு உரிய சாப்பாட்டை டிபன் கேரியரில் எடுத்துக் கொண்டார். 


 சாப்பாட்டு நேரம் வந்தபோது காரை நிறுத்தி எங்காவது அமர்ந்து சாப்பிட முடிவு செய்தார்கள். ஒரு வயல்வெளியும் ஒரு கிணறும் அதன் அருகில் ஓர் ஆலமரமும் தென்பட்டன. 


  அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட எண்ணிய குடும்பத்தினர் காரைச் சாலையோரமாக நிறுத்திவிட்டு டிபன் கேரியரோடு மரத்தடிக்குச் சென்றார்கள். 


 மரத்தடியில் ஏற்கெனவே அந்த வயலுக்குச் சொந்தக்காரரான ஒரு விவசாயி தன் சாப்பாட்டைச் சாப்பிட ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். கீழே ஒரு தட்டு. பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர். மற்றும் உணவுப் பொட்டலம். 


 இவர்களை அன்போடு வரவேற்ற விவசாயி, இங்கேயே நீங்கள் சாப்பிடலாம் என்று கூறி அருகேயிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுத்து அவர்களுக்கு உதவினார். 


 குடும்பமும் சாப்பிட்டு முடித்தது. அந்த விவசாயியும் தன் உணவை உண்டு முடித்தார். நண்பர் ஒரு விஷயத்தைக் கவனித்தார். அந்த விவசாயி தான் பருகுவதற்குத் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த தண்ணீரைத்தான் பயன்படுத்தினாரே அன்றி அந்தக் கிணற்று நீரைப் பயன்படுத்தவில்லை. நண்பருக்கு வியப்பு. விவசாயியிடம் கேட்டார்:


 `கிணற்று நீர் உப்புக் கரிக்காமல் நன்றாகத் தானே இருக்கிறது? கிணறும் உங்களுடையது தானே? அப்படியிருக்க நீங்கள் ஏன் கிணற்று நீரைப் பயன்படுத்தாமல் உங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள்?` 


 தன் மேல் துண்டால் கையைத் துடைத்துக்கொண்டே கள்ளங்கபடமில்லாமல் சிரித்தவாறு விவசாயி சொன்ன பதில் இது:


 `ஐயா! இந்தக் கிணறு என்னுடையதுதான். இதை வெட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினேன். அந்தக் கடன் இன்னும் தீரவில்லை. அது தீரும்வரை வயலில் பாய்ச்சுவதற்கு மட்டுமே கிணற்று நீரைப் பயன்படுத்துவது என்றும், வயல் பயன்பாட்டுக்குத் தவிர சொந்தப் பயன்பாட்டுக்கு இந்த நீரை எடுப்பதில்லை என்றும் நானும் என் மனைவியும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். 


  இப்படி இருந்தால்தான் கடனைச் சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற புத்தி வரும் என எனக்கு அறிவுறுத்தியவள் என் மனைவிதான். 


  ஆயிற்று. இன்னும் மூன்று நான்கு மாதங்களில் வங்கிக் கடனை அடைத்துவிடுவேன். அதன்பிறகு உங்களைப் போல் நானும் ஆனந்தமாக இந்தக் கிணற்று நீரைப் பருகத் தொடங்குவேன். அப்போது வீட்டிலிருந்து தண்ணீர் கட்டிக் கொண்டுவரும் பாடு இருக்காது!`


  இதைக் கேட்டு நண்பரும் நண்பர் குடும்பத்தினரும் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. கோடிகோடியாய் வங்கிப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு வெளிநாட்டிற்கு ஓடுபவர்கள் இருக்கும் இதே நாட்டில்தான், இதே காலகட்டத்தில்தான் இத்தகைய நேர்மையான விவசாயிகளும் இருக்கிறார்கள். 


  *இரு சக்கர வாகனத்தில் வழக்கமான பாதையில் அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்த நண்பருக்கு தன் மனைவி பூ வாங்கிவரச் சொன்னது திடீரென ஞாபகத்திற்கு வந்தது. சாலையோரத்தில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பூக்காரக் கிழவியைப் பார்த்தார். 


 இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அந்த மூதாட்டியிடம் இரண்டு முழம் மல்லிகைப் பூ வாங்கினார். முழம் பதினைந்து ரூபாய். அந்தப் பெண்மணிக்கு முப்பது ரூபாய் கொடுக்க வேண்டும்.


   இவரிடம் சில்லரை இல்லை. நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். அந்தப் பாட்டியிடமும் எழுபது ரூபாய் திருப்பிக் கொடுப்பதற்குச் சில்லரை இல்லை. 


  `நூறு ரூபாயை இன்றைக்கு வைத்துக் கொள்ளுங்கள் பாட்டி. நாளை இதே வழியில்தான் வருவேன். அப்போது உங்களிடம் மீதி எழுபது ரூபாயை வாங்கிக் கொள்கிறேன்!` என்றார் நண்பர். 


 `தம்பீ! நூறு ரூபாயை நீயே வைத்துக் கொள். நாளை இந்தப் பாதையில் வரும்போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புகிற மாதிரி நானும் உன்னை நம்புகிறேன். 


  நான் வயசானவள். திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகி விட்டால் நேரே கடவுளிடம் போய்ச் சேர வேண்டும். உன் எழுபது ரூபாயைத் திரும்பத் தருவதற்காக நான் மறுபிறவி எடுக்கக் கூடாது!`


  பூவிற்றுப் பிழைக்கும் எளிய மூதாட்டியின் எண்ணப் போக்கு நண்பரை திகைப்பில் ஆழ்த்தியது. 


  வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி லட்ச லட்சமாகப் பணம் வாங்கிக் கொண்டு ஊரைவிட்டே ஓடிப்போய்விடும் மனிதர்கள் நிறைந்த இதே உலகில்தான், சாலை ஓரமாக ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வாழ்க்கைத் தரத்தில் அமைந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இந்த மூதாட்டி பூ விற்றுக் கொண்டிருக்கிறார். 


  இவரைப் போன்றவர்களால் அல்லவா உலகில் நல்ல குணங்களின் நறுமணம் கமகமவென வீசிக் கொண்டிருக்கிறது! 


 *நண்பர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கினார் இன்னொருவர். இரண்டு மாதங்களில் கடனைத் திருப்பித் தந்துவிடுவதாகச் சொன்னார். எல்லாம் பேச்சுவார்த்தை தானே தவிர எழுத்து பூர்வமாக எதுவும் எழுதிக் கொள்ளப் படவில்லை. 


 கடன் வாங்கிய நண்பர் திடீரென இதய அதிர்ச்சி ஏற்பட்டுக் காலமாகி விட்டார். கடன் கொடுத்தவர், தான் கடனாகக் கொடுத்த தொகையைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. 


  அது போனால் போகிறது. ஆனால் அந்த நண்பர் காலமாகிவிட்டாரே! இந்தச் சூழலில் அந்தக் குடும்பம் எப்படித் தத்தளிக்கிறதோ எனப் பதறியவாறு அவர்கள் இல்லத்திற்குச் சென்றார். 


 இறந்தவரின் மனைவி அவரைத் தனியே அழைத்துப் பேசினாள்:


 `நீங்கள் சரியான சமயத்தில் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து என் கணவருக்கு உதவியதை என் கணவர் இறப்பதற்கு முன் என்னிடம் சொன்னார். சடலத்தை எடுப்பதற்கு முன் ஐயாயிரம் ரூபாயை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. நான் கடனாளியாக இறக்கக் கூடாது என்று கூறிவிட்டுக் காலமானார். 


  அவர் ஆத்மா சாந்தி அடையவேண்டும். அதனால் மறுக்காமல் இந்த ஐயாயிரம் ரூபாயை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்!` 


 அந்த சகோதரி ஐயாயிரம் ரூபாய் கொண்ட கவரை நண்பரிடம் கொடுத்தபோது நண்பர் விழிகளிலிருந்து வழியத் தொடங்கிய கண்ணீர் நிற்க நெடுநேரமாகியது....


 *அந்த ஆட்டோ ஓட்டுநர் போல, அந்த விவசாயி போல, அந்தப் பூக்கார மூதாட்டி போல, அந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்தவர் போல இன்னும் நம்மிடையே சிற்சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். 


 நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் போவதாகச் சொல்கிறாரே அவ்வை மூதாட்டி, அப்படி இவர்களுக்காகப் பெய்யும் மழைநீரைத் தான் நாம் எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம். இத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது உலகம் சொர்க்கமாகும். வானகம் இங்கு தென்படும். 


(அண்மையில் ராணி வார இதழில் வெளிவந்த கட்டுரை)

 ...........................................................

Wednesday, November 18, 2020

இது ஒரு மழைக்காலம்...

 வீட்டில் மின் பாதுகாப்பு 

 வழி முறைகள் .


1.எர்த் லீக்கேஜ் சர்குட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும்.


2.வீட்டிலுள்ள வீனாய் போயுள்ள, பழைய சுவிச்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும்.


3.தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிச் போர்ட்,வாஷிங் மிஷின்,ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.


4.எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு,

 வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும்,இதயம் இடது புறத்தில் உள்ளதால்.


4.பாத் ரூம் சுவிச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு,அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.


5.மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால்,

 அதன் விஷயத்தில் மிகவும் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.மும்பையில் ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம்.

தண்ணீர் இல்லாததால்,ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து ஃபேட்டல் ஆகியிருக்கிறார்.

ஹீட்டருக்கு கொடுக்க கூடிய

இன்லெட், அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது.

அவுட்லெட் ,ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னர் ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும்.

ELCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும்.


6.ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின்,கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது,சுவிச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ,மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.


7.இவ்வளவு கவனமாக இருந்தும்,

ஆக்சிடெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால்,

நேர்ந்து விட்டால்,

அருகிலுள்ளவர் ஒரு கம்பால், 

பாதிக்கப் பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி,விக்டிமை நேரடியாக தொடவே கூடாது.

கிரைண்டர் ஷாக் அடித்த மருமகளையும், பேத்தியையும் காப்பாத்த அவர்களை தொட்டு இழுத்து ,இறந்து போன மாமியாரையும்,

பல வருடங்களுக்கு முன்பு,

திருநெல்வேலி அருகே,இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு

 ,கீழே வீழ்ந்து கிடந்த டிவி  ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்ப் போன கணவன் 

தொடர்ந்து தொட்ட மகன், மகள், உறவினர்களென்று கிட்டத்தட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது.

இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல்,அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும்.செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல்.அதனால்,அடித்துக் கூட காப்பாற்றலாம்.


தண்ணீரில் வீழ்ந்தவரைக் காப்பாற்றப் போய் தானும் உயிர் விடற மாதிரி ஆகிவிடக் கூடாது.


8.கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது.


9.சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர்,

இரு முனை அயன்கிளாட் சுவிட்ச்சும்,

3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிட்ச்சும் வைத்திருக்க வேண்டும்.

நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்;

ஃப்யூஸ் போடக் கூடாது.

நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.


10.முதலில் சொன்னதையே இறுதியிலும் சொல்கிறேன்,ELCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள். 


 Lion  க நெடுமாறன் TNEB

 நாச்சியார்கோயில் பிரிவு

 கும்பகோணம் வடக்கு

Wednesday, November 4, 2020

ஆணிவேர் இங்கிருக்கு...

   கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள் எந்த மதத்தவராயினும் ஒன்றாக இருத்தல் தானே இயற்கை..மாறாக கடவுளை மறுப்பவர்களுடன் இணைந்திருப்பது எந்த விதத்தில் சரி...இந்தச் சிந்தனை கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வந்தால் போதும்.மதப்பிரச்சனை வரவே வராது..ஆனால் மதத்தை வைத்து ஆண்டவனுக்கும் பக்தனுக்கும் இடையில்  நிறுவனமாகி பெரும் வியாபாரம் நடத்தும் நிறுவனத் தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார்கள்...திருமணமோ மரணமோ அவர்களது ஒப்புதலின்றி நடத்தமுடியாது என்கிற நிலை இருக்கும் வரை இவர்களின் போக்கு பிடிக்கவில்லை ஆயினும் கூட அவர்கள் மதத்தில் உள்ள  சாமான்யர்களால்   இவர்களை விலக்கி ஒதுக்கவும் முடியாது..இதற்கெல்லாம் ஒரே தீர்வு பொதுச் சிவில் சட்டம் ஒன்றே...அது நிறைவேற்றப்பட வேண்டியது ராஜ்யசபாவில் மெஜாரிட்டி மட்டுமே..அது கூடிய விரைவில் ஆகச் சாத்தியமே....அது மட்டும் ஆகிவிட்டால் எல்லாம் சரியாக ஆவதும்  நிச்சயம் சாத்தியமே...

Sunday, October 25, 2020

கற்றலின் கேட்டலே சிறப்பு

 மூன்றாவது 

கவிதை நூலுக்கான வேலைகளில்

மிகத் தீவீரமாய் இருந்தான் என் நண்பன்


ஏற்கெனவே வெளியிட்ட

இரண்டு நூல்களும் பெருவாரியாய்

அறையை அடைத்துக் கிடக்க

மீண்டும் இவன் படும் அவஸ்தை

என்னை ஆச்சரியப்படுத்தியது


"எதற்காக எழுதுகிறாய்

உன்னை உலகுக்கு நிரூபிக்கவா ?

சொல்லவேண்டியவைகளை

உலகுக்கு சொல்லித்தான் ஆகவேண்டும்

எனும் உந்துதலை திருப்திப்படுத்தவா ? "

என்றேன்


நான் எதிர்பார்த்தைப் போலவே

ஒருவிதத்தில் 

எல்லா இலட்சிய எழுத்தாளர்களைப் போலவே

இரண்டாவது காரணத்தைத்தைத்தான் சொன்னான் அவன்.


"சரி ஒருமுறை

எத்தனைப் பிரதிகள் வெளியிடுவாய்"என்றேன்


"முதலில் ஆயிரம் அடுத்தது ஐநூறு

இப்போது முன்னூறு " என்றான்


"ஏன் குறைந்து கொண்டே போகிறது "எனக் கேட்க


"அவ்வளவுதான் போகிறது " என்றான்


தயாரிப்புச் செலவு

வெளியீட்டுச் செலவு எல்லாம் 

அவன் சொல்லச் சொல்ல

மலைப்பாக இருந்தது


"நானும் சில விஷயங்களை

உலகுக்கு சொல்லத்தான் நினைக்கிறேன்

அதற்காகவே பதிவுகளாக

என் பாணியில் எழுதுகிறேன்


குறைந்த பட்சம் நாளொன்றுக்கு

இருநூறு பேர் வாசிக்க

வருடத்திற்கு அறுபதாயிரம்  கணக்கில்

இப்போது பத்து வருடத்தில்

ஆறு இலட்சத்தைக் கடந்து கொண்டிருக்கிறேன்

அதுவும் உள்ளூரில் மட்டுமல்ல

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில்..."

நெட் செலவு தவிர வேறு செலவில்லை..."

எனச் சொல்லி நிறுத்த....


அதை ஹாலில் அமர்ந்து

கவனிக்காதது போல் இதுவரை

கவனித்துக் கொண்டிருந்த

அவருடைய மனைவி

சட்டென எழுந்து உள்ளே போய்

தட்டுடன் திரும்பி வந்து.....


"முறுக்கு நான் செய்து அண்ணே

சாப்பிட்டுக் கொண்டே பேசுங்க அண்ணே " 

என்றார்


அவரின் குறிப்பு எனக்குப் புரிந்தது


குறிப்பை என் இலட்சிய நண்பனுக்கும்

புரிய வைக்க முயன்று கொண்டிருக்கிறேன்...

Thursday, October 22, 2020

வெல்லும் தலைவர்கள்...

மூடத்தனத்தால்

பதிந்த நம்பிக்கையின் பலம்

பகுத்தறிவினால்

விளைந்த நம்பிக்கையில் இல்லை


சடங்கு சம்பிரதாயங்களால்

மனதுள் பதிந்த செயல்கள்

பயனறிந்து செய்ய முயல

அதன் சுவடுகளே தட்டுப்படவில்லை


விவரமறியா வயதில்

இணைந்த நட்பின் இறுக்கம்

விவரமறிய தொடரும் நட்பில்

துளியும் இல்லவே இல்லை.


இவையெல்லாம் இப்படி

என ஆகிப் போனதால்தானோ என்னவோ.

இந்தச் சூட்சுமத்தை.

நன்கு புரிந்து கொண்டதால் தானோ என்னவோ


பயனுள்ள தேவையான

விஷயங்களைவிட...

பயனற்ற சுவாரஸ்யங்க்களே

இங்கு அதிகம் விற்பனையாகின்றன


கடமையை பொறுப்பினை 

உணர்த்தும் தலைவர்கள்

செல்லாக் காசாக்கிப் போக


உணர்வினை ஆசையினைத்

தூண்டும் தலைவர்களே

வெல்லும் தலைவர்களாகிப் போவதைப் போலவே... 

Monday, October 12, 2020

மனம் நிறைந்த மனோ..


 SPBக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று திருவண்ணாமலையில் அவரது தங்கை S.P.சைலஜா விளக்கேற்றி வேண்டியுள்ளார்.. 


இதில் நெகிழ வைத்த நபர், நெற்றி நிறைய விபூதியுடன், வேட்டி சட்டையில் பயபக்தியுடன் விளக்கேற்றிய மனோ தான்..


பிறப்பால், பழக்க வழக்கத்தால் இஸ்லாமியரான அவரது இந்த சைகை தான் நம் சமூகத்தின் நிஜமான பிரதிபலிப்பு.. '


“வணக்கம் சொல்ல மாட்டேன்', 'பிற மதக் கடவுளுக்குப் பூஜை செய்ததைச் சாப்பிட மாட்டேன்' என்பதெல்லாம் நம் சமூகத்திற்கும் நம் பண்பாட்டிற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாத வந்தேறி வழக்கங்கள்.. 


சகமனிதன், வேறு நம்பிக்கை கொண்டிருந்தாலும் அதையும் மதிப்பது தான் நம் மண்ணின் மாண்பு.. மனோ அதைத் தான் கச்சிதமாகச் செய்து காட்டினார்..


வேறு மதங்களைப் பின்பற்றினாலும், அவற்றின் வந்தேறி வழக்கத்தைப் பிடித்துத் தொங்காமல், சக மனிதனின் நம்பிக்கைகளை மதிக்கும் மனோ, யேசுதாஸ் போன்றோர் தான் இந்த மண்ணின் மைந்தர்கள்.. 


இவர்கள் தான் சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இருக்க வேண்டியவர்கள்.. 


மாறாக திராவிட & கம்யூனிச ஆட்கள், தாங்கள் தான் செக்யூலரிசத்தின் ஒரே அத்தாரிட்டி என்பது போல் செயல்படுவதால் தான் இங்கு ஒருவருக்கொருவர் இத்தனை முட்டல் மோதல்கள்..


எந்த இந்துவும் சர்ச்சுக்குள்ளோ மசூதிக்குள்ளோ போக யோசிப்பதில்லை.. சிவன், பெருமாள் மாதிரி ஏசு & அல்லாவும் அவனுக்கு ஒரு கடவுள் தான்.. அதனால் தான் அவன் உருத்தாக பிரியாணி கேட்கிறான், வேளாங்கண்ணி மாதா படம் போட்ட மோதிரம், எண்ணெய் கேன் என பயன்படுத்துகிறான்.. 


இதையே பதிலுக்குச் செய்யும் மனோவும் யேசுதாஸும் தான் இந்தச் சமூகம் சமநிலையாக இருக்க முழுபலத்தோடு உதவுபவர்கள்.. 


மனோக்களும் யேசுதாஸ்களும் அதிகரிக்கும் போது தான் செக்யூலரிசம் எத்தனை போலியானது என நமக்குத் தெரிய வரும்..


துரதிர்ஷ்டவசமாக, மனோக்களையும் யேசுதாஸ்களையும் என்றும் அதிகரிக்க விடாது திராவிட & கம்யூனிச அரசியல்.. 'சிறுபான்மை, ஒடுக்குமுறை, பார்ப்பனீயம்' என்றெல்லாம் தூண்டிவிட்டு அவர்களை எந்நேரமும் பயத்திலேயே இருக்க வைத்து, பெரும்பான்மைக்கு எதிராகக் கொம்பு சீவி விடுவது மட்டுமே இவர்களின் குறிக்கோள்.. 


மனித குலத்தின் நோய் கம்யூனிசம் என்றால், தமிழ் இனத்தின் நோய் திராவிடம்.. இந்த நோய்க்கான மருந்து, மனோ, யேசுதாஸ் போன்ற இந்திய பாரம்பரியத்தை மதித்து வாழும் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமே


நன்றி Ram Kumar

Sunday, October 11, 2020

ஆம் பதிவர் சந்திப்பில் உச்சம் இதுவே...

  நான் சிறுவனாக இருக்கையில்

எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையாக
இருந்தவர்கள் எல்லாம்  சிவாஜி
எம்.ஜி.ஆர் விஷயத்தில் இரண்டாகப்
பிரிந்து விடுவோம்

யாராக இருந்தாலும் இரண்டில் யாராவது
ஒருவர் பக்கம் நின்றாகவேண்டும்

இரண்டு பக்கமும் என்பதற்கெல்லாம்
அப்போது வாய்ப்பே கிடையாது

எப்படித்தான் அருமையாக சண்டைப்
போட்டாலும்  எம்.ஜி ஆர்அவர்களுடன்
ஒப்பிட்டுப் பேசுதல் என்பது கிடையாது
அவர் லெவலே வேறு

ஆனால் புதிதாக நடிக்க வந்தவர்கள்
யாராக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்தால்
அவரை சிவாஜி அவர்களுடன் ஒப்பீடு
செய்வோம்.அனேகமாக அது
சிவாஜிக்கு முக்கால்  வருவார்,அரை வருவார்
கால் தூசி பெறமாட்டார் என்பதைப்
போலத்தான் எப்போதும் இருக்கும்

எனக்குத் தெரிய அந்த லிஸ்டில் மேஜர்
சவுந்திரராஜன்,ஏ.வி எம் ராஜன் எல்லாம்
 வந்து போனதுண்டு

ஆனால் யாரும் சிவாஜி அவர்களுக்கு
இணையாக வந்ததில்லை

அதைப் போலவே இனி பதிவர் சந்திப்பு
என்றால் புதுகைப் பதிவர் சந்திப்புத்தான்
நிச்சயம் ஒரு அளவுகோலாக இருக்கும்
புதுகைப் பதிவர் சந்திப்புப் போல் வராது
அல்லது புதுகைச் சந்திப்பைப்போலச்
சிறந்தது,அல்லது புதுகைப் பதிவர் சந்திப்பை
விட மிகச் சிறப்பாக இருந்தது
என்பதைப் போலத்தான் நிச்சயம் இருக்கும்

அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக பதிவர்
சந்திப்பை நடத்தி முடித்த அனைவருக்கும்
அதற்கு முழுமையாக அனைத்து விதத்திலும்
ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும்
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்வதோடு...

இந்த ஒற்றுமையும்,அமைப்பும் பதிவர்
சந்திப்பு நடத்துவதற்காகக்த்தான்
என்பதற்காக மட்டும் இல்லாது,

பதிவர்களுக்குள் எப்போதுமே ஒரு
இணப்புப் பாலமாக இருக்கும்படியான
ஒரு அமைப்பாக மாற்றினால்...

கூட்டு முயற்சியில் பொதுவாக ஒரு
வலைத்தளம்(தமிழ்மணம் போல் )
உருவாக்கும்படியான முயற்சியில் ஈடுபட்டால்...

புத்தகமாக தமது படைப்புகளை வெளிக்
கொணர விரும்புவோருக்கு  உதவும் ஒரு நல்ல
அமைப்பாக மாறினால்...

தொழில் நுட்ப ரீதியாக ஆலோசனை
வேண்டுவோருக்கு எப்போது வேண்டுமானாலும்
உதவும் ஓர் அமைப்பாக மாறினால்..

நல்லதோர் வீணையை  நலங்கெடாது
அதற்குரிய உயரிய பீடத்தில் வைத்தது போலாகும்
எனக் கூறி எனது இந்தத் தொடர்பதிவை
மகிழ்வுடன் நிறைவு செய்கிறேன்

வாழ்த்துக்களுடன்....(ஆம் இதே நாளில் 2015 ல் பதிந்தது )