"சொல்ல வேண்டியவைகளையெல்லாம்
நிறையச் சொல்லிவிட்டார்கள்எழுத வேண்டியவைகளையெல்லாம்
தெளிவாக எழுதிவிட்டார்கள்
நீயேன் உன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு
அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்திக்கொண்டு ".....
மனதின் மூலையில் புகையாய்
கிளம்பிய சலிப்புப் புகை
மனமெங்கும் விரைந்து பரவி
என்னைத் திணறச் செய்து போகிறது
நான் மிகச் சோர்ந்துச் சாய்கிறேன்
என் மனைவியிடம் நெருங்கியமர்ந்த பேத்தி
" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்
நிஜமாகவே பீட்ஸா கிடையாதா
சுடிதார் கிடையாதா ?
அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"
என ஆச்சரியமாய்க் கேட்கிறாள்
" இல்லை அவையெல்லாம் அப்போது
தேவையாய்த தெரியவில்லை " எனச் சொல்லி
பாட்டி எப்படியோ சமாளிக்கிறாள்
நான் அதிர்ந்து போகிறேன்
ஒரு கால் நூற்றாண்டில் தேவைகள்
எப்படியெல்லாம மாறிவிட்டன ?
வாழ்வின் போக்கில்
உணவு உடை இருப்பிடம் மட்டுமின்றி
கலை பண்பாடு கலாச்சாரம
அனைத்திலும்தான்
எத்தனை எத்தனை மாறுதல்கள் ?
வசதி வாய்ப்புகளே தேவைகளை முடிவு செய்ய
தேவைகளை விளம்பரங்கள் முடிவு செய்ய...
சந்தர்ப்பங்கள் தர்மத்தை முடிவு செய்ய...
செல்வமும் செல்வாக்கும் நீதியை முடிவு செய்ய ..
உறவுகளைக் கூடப் பயன் முடிவு செய்ய...
உணவினைக் கிடைக்கும் நேரம் முடிவு செய்ய...
உடலுறவைக் கூடக் கிழமை முடிவு செய்ய..
காலம் புதுப் புதுச் சூழலை உருவாக்கிப்போக ..
புதுச் சூழல் புதுப் புதுப் பிரச்சனைகளை உண்டாக்கிப்போக ...
சட்டெனப் பற்றிய சிந்தனை நெருப்பு
கொழுந்து விட்டு எரியத் துவங்க
புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்
பதிவு செய்யப்படவேண்டிய பட்டியல்
அனுமார் வாலாய் நீளத் துவங்குகிறது
என்னுள்ளும் இதுவரை குட்டையாய்
அடங்கிக் கிடந்த உற்சாகம்
கங்கைபோல் பரந்து விரியத் துவங்குகிறது
3 comments:
அருமை. கங்கை கரைபுரண்டு ஓடி, கவி வெள்ளத்தை வழங்கட்டும்
மாறாதது மாற்றம் ஒன்றுதானே?
அனுமார் வாலாய் நீளும் பட்டியல்... இப்படி மாறியவை எத்தனை எத்தனை...
Post a Comment