Wednesday, November 4, 2026

இன்கவி பெறலாம் யாரும்

 விளமதும் மாவும் தேமா

வகையென அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
இலகுவாய்ப் புரியு மாறு
இயற்றிட நானும் நாளும்
பலமுறை முயன்றுப் பார்த்தேன்
பயனிலை தோற்றே வீழ்ந்தேன்

தினம்தினம் இதுபோல் நானும்
தவித்திடும் நிலையைக் கண்டு
மனக்குறைப் போக்கும் வண்ணம்
மகிழ்வது கொள்ளும் வண்ணம்
எனதுயிர் நண்பன் ஓர்நாள்
ஒருவழி எனக்குச் சொன்னான்
வினவிடக் கேட்டு நானே
வியப்பினில் உச்சம் போனேன்

"கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்

"இதந்தரு மனையின் நீங்கி"
எனவளர் கவிதை தன்னை
சுதந்திரத் தாபம் கூட்டும்
சுடர்கவி பாடல் தன்னை
நிதமொரு முறையே நீயே
நயம்பட படித்தால் போதும்
மதகதைக் கடக்கும் நீராய்
கவியது பாயும் " என்றான்

தினம்தினம் காலை மாலை
திருத்தமாய் பாடல் தன்னை
மனனமே செய்தல் போல
மகிழ்வுடன் சொல்லச் சொல்ல
தனத்தனத் தான தான
எனுமொலி இயல்பாய் என்னுள்
இணக்கமாய் இணைந்து கொள்ள
உடன்கவி பிறக்க லாச்சு

இங்கணம் இப்போ தெல்லாம்
எப்பொருள் குறித்தும் பாட
சங்கடம் கொள்வ தில்லை
சந்தமே முதன்மை யென்னும்
சங்கதி அறிந்த தாலே
சஞ்சல மேதும் இல்லை
இம்முறை முயன்றால் நாளும்
இன்கவி பெறலாம் யாரும்

Tuesday, November 3, 2026

என் முகவரி

 கடலுக்கு அலையே முகவரி

நிலவுக்குப் பனியே முகவரி
மலருக்கு  மணமே முகவரி-என்
மகிழ்விற்கு "அவளே" முகவரி

கொடையதற்குக் கருணை முகவரி
காதலுக்கு அன்பே முகவரி
படையதற்குத் தலைவன் முகவரி-என்
புகழுக்கும்"அவளே" முகவரி

மனதுக்கு நினைவே   முகவரி
நினைவுக்கு மொழியே  முகவரி
பகலுக்கு ஒளியே  முகவரி-என்
உயர்வுக்கும் "அவளே" முகவரி

கடவுளுக்கு கோவில் முகவரி
கனியினுக்கு சுவையே முகவரி
உடலுக்கு முகமதே  முகவரி-ஆம் 
எனக்கென்றும் "கவிதையே   " முகவரி

Monday, November 2, 2026

ஆண்டுகள் நூறு தாண்டிய சங்கம்

 சந்தாக் கட்டி சண்டை போடும்

சங்கம் நூறு உண்டு---இங்கு
சங்கம் நூறு உண்டு

சந்தைப் போலக் கூடிக் கலையும்
சங்கம் எங்கும் உண்டு----வெட்டிச்
சங்கம் எங்கும் உண்டு

சிந்தை தன்னில் சேவை எண்ணம்
உள்ள வர்கள் மட்டும்--நிலையாய்க்
கொண்ட வர்கள் மட்டும்

ஒன்றாய்க் கூடி உள்ள சங்கம்
ஒன்றே ஒன்று தானே --அது நம்
அரிமா சங்கம் தானே

ஜாதி சமய பேதம் என்று
பிரிவு ஏதும் இன்றி--மனப்
பிளவு ஏதும் இன்றி

கோடி உள்ளோர் இல்லார் என்ற
பேதம் ஏதும் இன்றி--பிரிவுக்
கூறு ஏதும் இன்றி

வாடி நிற்போர் துயரம் போக்க
ஓடும் எண்ணம் மட்டும்---தொடர்ந்து
ஓடும் எண்ணம் மட்டும்

நாடி தன்னில் கொண்ட வர்கள்
அரிமா மக்கள் நாமே--அதுநம்
உதிரப் பண்பு தானே

உலகம் முழுதும் ஆண்ட நாடும்
நூறைத் தாண்ட வில்லை--தன்னிலை
தொடர முடிய வில்லை

உலகம் வியக்க சிவந்த நாடும்
நூறைத் தாண்ட வில்லை--சிதறலைத்
தடுக்க இயல வில்லை

இயக்கம் ஒன்று ஆண்டு நூறைக்
கடந்து  நிற்கு தென்றால்--உலகை
வியக்க வைக்கு தென்றால்

உலகில் நமது இயக்கம் ஒன்றே
என்று அறிந்து மகிழ்வோம்--அதனை
உயிராய்ப் போற்றித் தொடர்வோம்

( நான் சார்ந்துள்ள உலக அரிமா இயக்கம்
நூறாம் ஆண்டைக் கடக்கும்
மகிழ்ச்சியான தருணத்தை வாழ்த்தி
எழுதப்பட்டது )

கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம்

 கிடைக்கிற மூன்று கற்களை

சமமாக அடுக்கி
சுற்றி கிடைக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி
பற்றவைத்து
பேப்பருக்குள் எடுத்து வந்த
 மளிகைச்சாமானகளை வைத்தே
சமைக்கத் துவங்குகிறாள் ஆச்சி

சமமற்ற தரையோ
சுழன்றடிக்கும் காற்றோ
எடுக்க மறந்த பொருட்களோ
அவளுக்கு ஒரு பொருட்டாய் இல்லை
கொதிக்கிற குழம்பின் வாசம்
கோவில் வெளியெங்கும்
பரவி விரிகிறது
என்றுமில்லா பசி
குடலுக்குள் உருண்டு புரள்கிறது

நிழலிருக்கும் இடத்தைப் பெருக்கி
சமதளம்ற்ற தரையில்
இலையைப் போடுகிறாள் ஆச்சி
ஊட்டினாலும் முகம் திருப்பும்
பேரப்ப்பிள்ளைகளெல்லாம்
போட்டி போட்டு இலை நிரப்பி
சப்புக் கொட்டி உண்ணுகிறார்கள்

நவ நாகரீக அடுப்படி
அனைத்துப் பொருட்களும் உள்ள
அஞ்சறைப்பெட்டி
சுத்தீகரிக்கப் பட்ட தண்ணீர்
தேக்காலான சாப்பாட்டு மேஜை
இவைகளின்றி ஏதும் செய்ய இயலாத
மருமகள் கள் எல்லாம்
வரிசையாய் அமர
பரிமாறத் துவங்குகிறாள் ஆச்சி

சட்டிக் குழம்பும்
அண்டாச் சோறும்
கற்பூரமாய்க் கரைய
ஏனோ கண்கலங்குகிறாள்
வீட்டில் கேஸ் அடுப்பு கூட
பற்றவைக்கத் தெரியாத
 "அந்த க் காலத்து ஆச்சி "