Monday, October 31, 2011

இருப்பதற்கு ஏனில்லை பெயர் ?

" முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்து அற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர் "

"பழமொழி"யின் ஈற்றடி என்னை
மிகவும் கவர்ந்து போனது
இல்லாததற்கு எப்படி பெயர் இருக்க முடியும் ?

எத்தனை அழகான  சிந்தனை
கவிதையின் சிறப்பில் நான் வியந்து கிடக்க
 நண்பன் என்னை  ஏளனமாய்ப் பார்த்தான்

"இல்லாததற்கு பெயரில்லை சரி
இருப்பதற்கு ஏன் பெயரில்லை " என்றான்

எனக்கேதும் விளங்கவில்லை
அவனே தொடர்ந்தான்

"வரனுக்கு தட்சணை உண்டு
அதனால் வரதட்சணை என்கிற வார்த்தை உண்டு
வதூக்களுக்கு தட்சணை இல்லை
அதனால் வதூதட்சணை இல்லை சரி
இருவர் சேர்ந்து செய்யும் அபச்சார ம் விபச்சாரம்
அதில் விபச்சாரி என பெயரிருக்கிறது
விபச்சாரன் ஏன் இல்லை ?
கணவன் இறக்க பெண்ணுக்குப் பெயர் விதவை
மனைவி இறக்க கணவனுக்கு ஏன் பெயரில்லை ? "

அவன் கோபத்தில் அடுக்கிக்கொண்டே போனான்
நான் இந்த இரண்டிலேயே நின்றுவிட்டேன்
இல்லாததற்கு பெயரில்லை சரி
இருப்பதற்கு பெயரில்லை ஏன் ?

Friday, October 28, 2011

கவிதையும் குழம்பும்

கவிதைகள் குறித்து நானும் மனைவியும்
விவாதித்துக் கொண்டிருந்தோம்

"அனுபவங்களை மட்டுமே
மூலதனமாக்கிச் செய்த கவிதைகள்
வெற்றுப் புலம்பலையும்
கருவின் விளக்கத்தையே
இலக்காகக்  கொண்டவை
மழைக்காலத் தவளைகளையும்
வார்த்தை ஜாலங்களை மட்டுமே
நம்பிச் செய்தவைகள்
கழைக் கூத்தாடிகளையுமே நினைவூட்டிப்போகின்றன
மூன்றின் சம அளவுச் சேர்மானமே
நல்ல கவிதைகளாகின்றன  " என்றேன்

"அப்படியானால் கவிதைகள் கூட
குழம்பு போலத்தான் "என்றாள் துணைவி

"குழம்பு எப்படி கவிதையாகும் ? " என்றேன்

அவள் பொறுமையாய் விளக்கினாள்
" புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது ருசியில்லை
ஆயினும் அவைகளின் இருப்பு தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு " என்றாள்

"அப்படியானால் நன்கு  சமைக்கிற
பெண்கள் எல்லோரும் கவிதாயினிகள் தானா ? "என்றேன்

" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப் படைக்கும் குழம்பு - கவிதை
நாங்கள் பிறர் ருசிக்கச் செய்யும் கவிதை- குழம்பு" என்றாள்

Wednesday, October 26, 2011

பயணம்

நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த
புகைவண்டிப் பெட்டிக்குள்
அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி
எப்படி வந்தது எனத் தெரியவில்லை

தன் வண்ணங்களில்
தானே கௌரவம் கொண்டபடி
தான் பயணிக்கும் திசையையும் வேகத்தையும்
முடிவெடுக்கும் அதிகாரம்
தன்னிடம் இருப்பதான மமதையில்
மிக மிக சந்தோஷமாய்
பெட்டிக்குள் வலைய வந்து கொண்டிருந்தது
அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி

பெட்டிக்குள் பயணிக்கும் எது குறித்தும்
எவ்வித சிந்தனையுமற்று
வடக்கு திசை நோக்கி
அதி வேகத்தில் பறந்து கொண்டிருந்தது 
அந்த அதிசயப் புகைவண்டி

Sunday, October 23, 2011

உணவு உடை இருப்பிடம் மற்றும் கவிதை

என்ன செய்வது முன்புபோல
நான்கு வகை காய்கறிகளோடும்
ரசம் சாம்பார்  மோர் அப்பளம் என
வகை வகையாக சமைத்துண்ண
வசதி வாய்ப்புகள் பெரும்பாலோருக்கு இல்லை
அப்படி ஒருவேளை சமைத்தாலும்
பொறுமையாக ரசித்து உண்ண நேரமோ
செரிக்கிற உடல் நலமோ இல்லை

என்ன செய்வது முன்புபோல
உயர்கல்வி பயிலுகிற கன்னியராலோ
வேலைக்குச் செல்லும் பெண்களாலோ
தாவணி சேலை கட்டி
இயல்பாக வெளிச்செல்ல முடிவதில்லை
அப்படி ஒருவேளை போக முயன்றாலும்
இயல்பாக இருக்கவோ
சௌகரியமாய் உணரவோ இயலவில்லை

எப்படிச் சொல்வது முன்புபோல
ஆறு ஏழு பத்தி வீடுகளில்
தாய் தந்தை தாத்த பாட்டியென
உற்றார் உறவினரோடு
ஒன்று சேர்ந்து வாழ முடிவதில்லை
அப்படி ஒருவேளை இருக்க ஆசைப்பட்டாலும்
பணிச் சூழலோ வசதி வாய்ப்புகளோ
அப்படி இருக்க அனுமதிப்பதில்லை

எப்படிச் சொல்வது முன்பு போல
எதுகை மோனை அணிகளென
யாப்பிலக்கணத்திற்கு  ஏற்ப
கவிதைகள் இயற்ற இயலுவதில்லை
அப்படி ஒருவேளை முயன்று
கவிதைகள் படைத்துக் கொடுத்தாலும்
படித்து ரசிக்கவோ சிறப்பை உணரவோ
நேரமோ மனமோ இடம் கொடுப்பதில்லை

என்ன செய்வது எப்போதும்
மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விதிமட்டும் மாறாது சிரிக்கிறது
மாற உடன்படுகிற எதையும்
மிக எளிதாய் சிதைத்துப் போகிறது
இல்லையெனில் அன்னம்போல் யாளிபோல்
எத்தனை உயர்வுடையதாயினும்
கற்பனை போலாக்கி கைகொட்டிச் சிரிக்கிறது

Thursday, October 20, 2011

முரண்-

மையிருட்டு மனம் படைத்த அரசியல் வாதிகள்எல்லாம் ஏன்
தூய வெண்மை ஆடைகளையே அதிகம் அணிகிறார்கள் ?
நேர்மைக்கு சமாதிகட்டும் அவர்களேஅது குறித்து ஏன்
அதிகம் அங்கலாய்க்கிறார்கள் ?

வெகு நாட்கள் என்னைக் குடைந்தெடுக்கும் கேள்வி
யார் யாரிடமோ கேட்டும் தெளிவு பிறக்கவில்லை
கேட்டுத்தான் வைப்போமே என என் துணைவியிடம் கேட்டு வைத்தேன்

"விளக்கமாகச் சொன்னால் அலுப்பு தட்டும்.மறந்தும் போகும்
கதையாகச் சொல்லட்டுமா " என்றாள்

"இதற்கும் கதை இருக்காஅப்படியே சொல் அனைவருக்கும் ஆகும் "என்றேன்

அவள் தொடர்ந்தாள்

ஒரு காட்டுக்குள்  நான்கு பேர் போய்க்கொண்டிருந்தார்கள்
ஒருவருக்கு பார்வை கிடையாது
ஒருவருக்கு காது முற்றாகக் கேட்காது
ஒருவருக்கு இரு கால்களும் இல்லை
ஒருவருக்கு இரு கைகளும் இல்லை

காது கேளாதவர் வழி பார்த்துக் கூட்டிச் செல்ல
கண் தெரியாதவ்ர் அவரைப் பற்றித் தொடர
கால்கள் இல்லாதவர் கைகள் இல்லாதவர் மேல் அமர்ந்து கொள்ள....
இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து போய்க் கொண்டிருந்தார்கள்

அப்போது திடுமென்று காது கேளாதவர்
"தூரத்தில் குதிரைகள் வரும் ஒலி கேட்கிறதே "என்றார்

உடனே கண்கள் இரண்டும் தெரியாதவர்
" ஆமாம் ஆமாம் புழுதி பறப்பது கூடத் தெரிகிறதே
குறைந்தபட்சம்   இருபது குதிரைகளாவது இருக்கும் "என்றார்

அப்போது கால்கள் இரண்டும் இல்லாதவர்
"திருடர்களாய் இருக்கக் கூடும் நமக்கேன் வம்பு
வேகமாக ஓடிவிடலாம்" என்றார்

கைகள் இல்லாதவர் அலட்சியமாக
"அதெல்லாம் தேவையில்லை அவர்கள் அருகில்  வரட்டும்
நாமா அவர்களா ஒரு கை பார்த்துவிடுவோம் " என்றார்

நான் ஆர்வ மிகுதியால் "அப்புறம் " என்றேன்

"அப்புறமென்ன அப்புறம் எல்லாம் அவ்வளவுதான் "
எனச் சொல்லி எழுந்து போய்விட்டாள்

வழக்கம் போல  என்னுள் குழப்பமே கூடிக்கொண்டு போனது
கதைக்கு பதில் விளக்கமே கேட்டிருக்கலாமோ ?

 

Monday, October 17, 2011

படித்தவன் எப்போதும் புத்திசாலி

ஊர் இரண்டுபட்டுக்கொண்டிருந்தது

கையில் கிடைத்த
ஆயுதங்களைத் தூக்கியபடி
யார் யாரோ
எதிர் எதிர் திசையில்
வெறியோடு ஓடிக் கொண்டிருந்தார்கள்

தனித்து வந்த ஒருவரை நிறுத்தி
காரணம் கேட்டேன்
"விஷயம் தெரியாதா
நம்ம ஆளை அவங்கஆளு
வெட்டிப்போட்டாங்களாம் " என்றார்

இப்போது நான் என்ன செய்யனும் என
குழம்பிக் கிடைக்கையில்
மாமா ஓடி வந்தார்

"கிளம்பு கிளம்பு
கருப்புவை சின்னான் வெட்டிபுட்டான் " என்றார்

"அவர்களுக்குள்தான்
இடத் தகராறு இருந்ததே
அதனால் அடித்துக் கொண்டிருப்பார்கள் " என்றேன்

"அது எனக்குத் தெரியாதா
நமக்கும் இதே மாதிரி
வயல் பிரச்சனை இருக்கு
நமக்கும் நாலு பேரு வேணும்
நாம வெட்டப் போறோமா ?
வெட்ட வாங்கப் போறோமா ?
எவனோ நாலு முட்டப் பயக வெட்டப் போறான்
நாலு முட்டப்பயக வாங்கப் போறான்
போலீசெல்லாம் வந்தாச்சு
கிளம்பு கிளம்பு
கூட்டத்தோட நின்னுட்டு வருவோம்  " என்றார்

 மாமா அனுபவஸ்தர்
எது சொன்னாலும் அதில்ஆயிரம் காரணமிருக்கும்
நானும்  சட்டையைப் போட்டு கிளம்பினேன்

தூரத்தே  கலவர ஒலி
யுத்த பூமியை நினைவுறுத்தியது
வெட்டுப் பட்டு ரத்தம் கொப்பளிக்க
ஆஸ்பத்திரியை நோக்கி
நாலைந்து பேர் ஓடிக்கொண்டிருந்தார்கள்

வாசல் கதவை மூடுகையில்
பெயருக்கு முன்னும் பின்னும் இருந்த
ஆங்கில எழுத்துக்கள்
ஏனோ ரொம்பச் சிறிதாகத் தெரிந்தன
சரி செய்யனும்

Saturday, October 15, 2011

தேர்தல்

எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்
கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும் மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'
 
(அடுத்த தேர்தல்  வந்துவிட்டது  ஆயினும்
நிலைமைகள் எப்போதும்போல்தான்  உள்ளது 
எனவே புதிதாக  ஒரு பதிவு  போடாமல் 
பழைய பதிவையே  மிண்டும்  பதிவாகத
தந்துள்ளேன்  )