Tuesday, January 31, 2012

கால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்

கால எல்லைகளை
கடக்கத் தெரிந்தால்
இணக்கமாய் மனத்துள்
நினைக்க முடிந்தால்
புரியாத புதிர்கள்
புரிந்து போகுமோ ?
குழப்பிய நிகழ்வுகள்
சீராகிப் போகுமோ ?

கவிஞராக இல்லாது
வணிகராக இருந்தவர்
ஒருசிறு அதிர்வினில்
பெருங்கவிஞர் ஆவது
எங்ஙனம் சாத்தியம் ?

முத்தான கவிதை
என்பது கூட
நிச்சயமாய் சாத்தியம்
ஞானம் 100
எங்ஙனம் சாத்தியம்  ?

பட்டினத்து அடிகளின்
கதைகேட்டு நானும்
குழம்பித் தவித்ததுண்டு
நம்பாது கதையென்று
நாளும் நினைத்ததுண்டு

ஒரு நாள்..
கைபேசி மாற்றாது
"சிம்"மதனை மட்டுமே
சில நேரம் மாற்றிவிட
அலைபேசியின் உள்ளடக்கம்
அடியோடு மாறிவிட
புதிருக்குத் தெரிந்தது புதிய வழி
எனக்குள் புகுந்தது புதிய ஒளி

உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?
 

Sunday, January 29, 2012

கடவுளும் கடவுள் வாழ்த்தும்......

எல்லோருக்கும் எப்போதும்
மாலை நேரத்தில் மயக்கம்தான் வரும்
எனக்கென்னவோ சில நாட்களாய்
குழப்பம்தான் வருகிறது

துவங்கிய நிகழ்வு
தடங்கலி ன்றி முடிய
கடவுள்வாழ்த்து அவசியமென
எல்லோரும் நம்புகிறோம்
தவறாதும் சொல்லுகிறோம்

ஆனாலும்
கவிச்சக்கரவர்த்தி கம்பன்மகன் வாழ்வில்
அது ஏன் தவறாகிப் போனது?
அம்பிகாபதி பாடிய நூறு பாடல்களில்
கடவுள் வாழ்த்தினை
கணக்கில் கொள்வதா?
அல்லது
கொள்ளாமல் விடுவதா?
என்று எழுந்த கேள்வியே
கவிஞனைக் கொல்வதா?
அல்லது 
கொல்லாமல் விடுவதா? என்ற
குழப்பத்தினை உண்டாக்கி
முடிவில்
கடவுள்வாழ்த்துக் கணக்கே
அவனைக் கொன்றும் போட்டதால்.....

தடங்களின்றி காரியம் முடிய
கடவுள்வாழ்த்து
அவசியத் தேவையா?
அல்லது
அனாவசிய சேர்க்கையா?
என்கின்ற பெருங்கேள்வி என்னை 
குழப்பிக்கொண்டே இருந்தது

குழப்பத்தின் உச்சத்தில் நான்
ஓய்ந்துபோய் உறங்கிப் போக
கவிச்சக்கரவர்த்தி கம்பனே என்
கனவில் வந்து நின்றான்.

அவன்
கமலப்பாதங்களைத் தொட்டு வணங்கி
என் கேள்வியை நான் கேட்கும் முன்பே
கையமர்த்தி என்னை அமரச்சொல்லி
கண்கலங்க இப்படி சொன்னான்

"கடவுள்வாழ்த்துக் கணக்கில் நான்
என் கண்மணியை இழந்தாலும்
ராம காதையில் 
நானதைச் சொல்ல மறந்தேனா?
கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
கவனமாய் இருந்து 
காரியத்தில் கவனமின்மையேல்
கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது 
அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்
அம்பிகாபதியின் அவல மரணம்
அனைவருக்கும் சொல்லும் செய்தி இது"எனி
கண்கலங்கச் சொல்லிப் போனான் கம்பன்

நான் அதிர்ந்து விழித்து எழுந்தபோது
விடிந்தும் இருந்தது
என்னை வாட்டி எடுத்த குழப்பமெங்கோ
தொலைந்தும் இருந்தது

Thursday, January 26, 2012

பண்பாடும் கலாச்சாரமும்

பொருளின் நிலையும் தரமும் மாறுபடுகையில்
பழைய அளவு கோல்கள் கொண்டு
அளக்க முயல்வதே பத்தாம் பசலித்தனம்தான்

குடிப்பவனெல்லாம் முன்பு தீயவனாய்த் தெரிந்தான்
நல்லவேளை இப்போது
எல்லோரும் குடிப்பதால் அப்படியில்லை
குடித்து "சலம்புபவன்  " மட்டுமே தீயவனாகிறான்
இப்படிக் கொள்வது கூட ஒருவகையில்
அனைவருக்கும் வசதியாகத்தானே இருக்கிறது ?

பிறன்மனை நோக்காமையே  முன்பு
பேராண்மையாய் பேசப்பட்டது
நம்முடைய நல்ல காலம் இப்போது அப்படியில்லை
சிறு வீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்தே
இப்போது  பேராண்மை தீர்மானிக்கப் படுகிறது
இது கூட ஆண்களுக்கு ஒரு நல்ல
வாய்ப்பாகத்தானே படுகிறது ?

லஞ்சம்வாங்குதல் கூட முன்பு
கேவலமாகத்தான் கருதப்பட்ட்டது
நல்லவேளை இப்போது அப்படி நினைப்பதில்லை
லஞ்சம் வாங்கியும் காரியம் முடிக்காதவனே
இப்போது கயவனாகக் கருதப்படுகிறான்
இந்த மாறுதல் கூட அனைவருக்கும்
ஏற்புடையதாகத்தானே இருக்கிறது ?

தன் கொள்கைக்கு முன் உதாரணமாய் திகழ்பவரே
முன்பு தலைவராக ஏற்றுக் கொள்ளப் பட்டார்
நல்லவேளை இப்போது அந்தக் கருமாந்திரம் இல்லை
தன் கொள்கைக்கு தானே எமனாக இருந்தாலும்
மேடையில் சிறப்பாகப் பேசத் தெரிந்தவரும்
எதிரணியை மிக நன்றாக ஏசத் தெரிந்தவருமே
தலை சிறந்த தலைவராகிறார்
அந்தத் தலைமையும் அனைவருக்கும்
 உடன்பாடாகத்தானே  இருக்கிறது ?

எந்த அளவுக்கும் சரிப்பாடாத வகையில்
பொருளின் தரமும் நிலையும்
அடியோடு மாறுகிற வரையில்
இப்போது போல
அள்வுகோல்களை மாற்றிக் கொண்டே போவோம்
அதுதான் நாகரீகமானது மட்டுமல்ல
புத்திசாலித்தனமானதும் கூட
ஊரோடு ஒட்டி வாழலே
நம்து கலாச்சாரம் கற்றுத் தந்த   
உயரிய  பண்பாடு இல்லையா ?

Tuesday, January 24, 2012

கவிதைச் சித்தாந்தமும் அரசியல் வேதாந்தமும்

அளவுக்கு மீறிய நெருக்கத்தில்
பொருளின் உண்மைத் தன்மை
கண்ணுக்குத் தெரியாமல்தான் போகும்
அது கல்லானாலும் சரி
உயிர்த் தோழியானாலும் சரி

ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகள் தொடர்ந்திட
வாரிசுப் போர்
தவிர்க்க முடியாததாகிவிடும்
மாமன்னர்கள் காலமாயினும் சரி
மக்களாட்சி காலமாயினும் சரி

உடல் வலிமை எத்தகையதாயினும்
கால் பலமற்றவன் அடுத்தவன் முதுகினை
அண்டித்தான் வாழவேண்டும்
அது பயில்வானாயினும் சரி
பணபலமுள்ளவன் ஆயினும் சரி

எத்தகைய  வீரியமிக்க விதையாயினும்
மண்ணில் நட்டுத்தான் உயிர் பெறக்கூடும்
ஆகாயப் பந்தலில் நடமுடியாது
அது ஆதிகாலத்து ஆலமரமாயினும் சரி
இருபதாம் நூற்றாண்டு "அரச"மரமாயினும் சரி

படிமங்கள் குறியீடுகளென
எப்படித்தான் பம்மாத்து செய்தாலும்
கருவற்ற சொல்லடுக்குகள் கவிதையாக முடியாது
அது கந்தன் மூக்கன் இயற்றியதாயினும் சரி
கவி அரசர்கள் இயற்றியதாயினும் சரி

Sunday, January 22, 2012

மத்யமர்

மனித மனங்களில் எல்லாம்
புதர் மண்டிப் போக
நாடும் காடாகிப் போனதால்
ரொட்டிக்கான தொடர் போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

பொறுக்கப் போகிற பாவனை மறைத்து
வேட்டைக்குச் செல்வதுபோல்
முகமெங்கும் புலிவரிகளை
பூசிக் கொண்டாலும் கூட
நிஜப் புலிகளின் நெருக்கத்தில்
மருங்கிய பார்வையை ஏனோ
மறைக்க முடிவதேயில்லை

பாவப்பட்ட  முட்டாள் ஜந்துக்கள்
புலியெனஏமாந்து ஒதுங்குவதில்
கிடைக்கும் சில சௌகரியங்களும்
தொலையும் சில அசௌகரியங்களும்
ஒப்பனையின் அவசியத்தை
உறுதிப்படுத்திப்போனாலும் கூட

ஒவ்வொரு முறை ஒப்பனையிடும்போதும்
நோவையும் நோயையும்  மறைக்கவென
விலைமகள் போடும்
மாலைவேளை ஒப்பனையை
ஒப்பிட்டு வேதனையுறும்  மனம் மட்டும் ஏனோ
அடுப்படிப் பூனையாய் ஒடுங்கிப போகிறது

ஆனாலும் என்ன
ரொட்டிக்கான போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

Friday, January 20, 2012

கொடுக்கிற இடமில்லை எடுத்துச் செல்லுமிடம்

நாங்கள் சன்னதியின் வாசலில் இருந்தோம்

 "இது முட்டாள்களின் சரணாலயம் "
எனச் சொல்லிப்போனார் 
ஒரு கருஞ்சட்டைக் காரர் 

"எல்லாம அவன் கொடுத்தது
அவனிடம் எப்படி கணக்குப் பார்ப்பது "
மொத்தமாக உண்டியலில்
பணத்தை கொட்டிக்கொண்டிருந்தார்
ஒரு தொந்தி பெருத்த" கன "வான்

"உனக்கு எப்ப மனம் வருகிறதோ
அப்போது செய்
நான் விடாது வந்துகொண்டுதான் இருப்பேன்
நீயா நானா பார்த்துவிடுவோம் "
தானாகபுலம்பிக் கொண்டிருந்தார்
ஒரு கூன் விழுந்தபெரியவர்

"இதில் எது சரி
எல்லாமே சரியாய் இருக்க வாய்ப்பில்லையே "
குழப்பத்தில் இருந்தான நண்பன்

"அவர்களை நம்பி "கை"யின்றி வருபவர்கள்
எதையும் எடுத்துச் செல்ல வழியில்லை
வெறுங் கையுடன் வருபவர்கள்
கையளவே  கொண்டு போகிறார்கள்
அண்டாவுடன் வருபவர்கள்
அள்ளிக் கொண்டு போகிறார்கள்.
இது கொடுக்கிற இடமில்லை
அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துக் கொண்டு செல்கிற இடம் " என்றேன்

நண்பன் கீழ் மேலாய்  தலையாட்டினான்
அது ஏற்றுக் கொண்டது போலவும் இருந்தது
ஏற்றுக் கொள்ளாதது போலவும் இருந்தது

Thursday, January 19, 2012

இங்கு எல்லாம் இப்படித்தான் ...

வார்த்தைகளை வரிசைக்   கிரமமாய்
மிகச் சிறப்பாக கோர்க்கத் தெரிந்தவன் இங்கே
கவிஞனெனப் பெயர் பெறுகிறான்
கருகுறித்து இங்கு யாருக்கும் கவலையில்லை

மனிதர்களை  எப்படியேனும் எது கொடுத்தேனும்
மிக அதிகமாகச் சேர்க்கத் தெரிந்தவன்
தலைவன் ஆகிப் போகிறான்
நோக்கம் குறித்து யாரும் அலட்டிக் கொள்வதில்லை

எதைச் சொல்லியேனும் வெறியேற்றி மனிதர்களை
பல கூறாய் பிரிக்கத் தெரிந்தவன்
மதத் தலைவன் ஆகிப் போகிறான்
மதத்தின்  நோக்கம்  குறித்து எவருக்கும் அக்கறையில்லை

எது நடந்த  போதும் தன்சுகத் தேடலில்
தன் போக்கில் வாழப் பழகியவன்
வாழத் தெரிந்தவன் ஆகிப் போகிறான்
சமூ க நலன் குறித்த கவலைகள் அவனுக்கில்லை

 எது எப்படி நடந்தபோதும்
தர்ம நியாயங்களைவிட 
"தன் ஒழுங்கு முறையை  "காப்பதிலே மட்டும்
இயற்கை அதிக அக்கறை கொள்ளுகையில்
மனிதர்கள் நாம் என்னதான் செய்ய இயலும்  ?